தேடுக !

ஞாயிறு, 14 நவம்பர், 2021

மலரும் நினைவுகள் (15) திகைக்க வைத்த திருச்சி நிலையப் பண்டகம் !

 (1971 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்) 

கருவிகளின் இருப்புப் பொறுப்பை ஏற்கையில் மிகுந்த இன்னல்களை எதிர்கொண்டேன். ஒரே பெயருள்ள கருவி, கருவிகள் பதிவேட்டின் வெவ்வேறு பக்கங்களில் வெவ்வேறு  தொகுதிகளில்  தனித் தனியாக இருப்பு  வைக்கப்பட்டிருந்தன.  இயன்றவரை அவற்றை ஒரே நிலைப்பேழை அல்லது சுவர்மாடத்தின் ஒரே அறையில் (Compartment)   வைத்து வந்தேன் !

 

அத்துடன், பதிவேடுகளில், குறிப்பிட்ட அந்தக் கருவி எந்தெந்தத் தொகுதிகளில் எந்தெந்தப் பக்கங்களில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன என்பது பற்றிய செய்திக் குறிப்புகளையும் குறிப்பிட்ட பக்கங்களில் வன்னிகையால் (Pencil) எழுதிவரவும் தவறவில்லை !

 

முந்தைய மலரும் நினைவுகளில் குறிப்பிட்ட  பகுப்பலகு (Unitization) முறையை பொறுப்பு ஏற்கும் போதே பின்பற்ற வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அதை முழுமையாகச் செய்தேன். எப்படிப் பொறுப்பு ஏற்கவேண்டுமென்று நான் கருதியிருந்தேனோ அதிலிருந்து நான் சற்றும் வழுவவில்லை ! ஒவ்வொரு பொருளுடனும்பொருள் விவரச் சீட்டுபிணைக்கப்பட்டுத் தொங்கிக் கொண்டிருப்பதை உறுதி செய்தேன் !

 

திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் ஒப்பளிக்கப்பட்ட பயிற்சியாளர்கள் எண்ணிக்கை 1024 என்று முன்பு குறிப்பிட்டிருந்தேன்.  இந்த எண்ணிக்கை 1971ஆம் ஆண்டு இருந்த  நிலை. இப்போது இந்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். அதேபோல் 1971 –ல் பயிற்சிப் பிரிவுகளின் மொத்த அலகுகளின் (Units)  எண்ணிக்கை 96 என்பதாக நினைவு !

 

ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் 96 பயிற்றுநர்களும் தேவைச்சீட்டுகளுடன் பண்டகத்திற்கு வருவார்கள்.  96 பேருக்கும் தேவைப்படும் பொருள்களைக் கொடுத்து அனுப்புவதற்குள் திரு.இரத்தினசாமி மிகுந்த இன்னற்பட்டுப் போனார் என்றே சொல்ல வேண்டும். பண்டகத்திற்குள் திருவிழாக் கூட்டம் போலப் பயிற்சியாளர்கள் நிற்கின்ற நிலையை  நான் பணியில் சேர்ந்த இரண்டொரு நாளிலேயே தெரிந்து கொண்டேன் !

 

இதற்கு  முற்றுப்புள்ளி வைக்க விரும்பினேன். முற்பகல் 12-00 மணி வரை பொருள்கள்  வழங்கல், அதற்குமேல்  பொறுப்புகள் ஏற்பு என்பதாக நான் முறைப்படுத்தி அறிவித்தேன். பண்டகத்திலிருந்த எண்ணெய்ப் பீப்பாய் / வெட்புலப் பீப்பாய்களைக் கொண்டு  பண்டக  நுழைவாயிலின் உள்ளேவடிவத்தில்  ஒரு வழங்கல் மேடையை (Counter) அமைத்து, அதற்குள் என்  இருக்கையை அமைத்தேன்!


என் இருக்கைக்கு முன் நான்கு மடக்கு நாற்காலிகளைப் போட்டு வைத்து, தேவைச் சீட்டுடன் வருகின்ற பயிற்றுநர்கள் அமர வசதி ஏற்படுத்திக் கொடுத்தேன். நுழைவாயிலைத் தவிர்த்து மூன்றுபுறமும் வழங்கல்  மேடை போன்ற  அடைப்பு ஏற்படுத்தியதால், என்னையும் என் உதவியாளரையும் தவர வேறு யாரும் உள்ளே  செல்ல இயலாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொண்டேன் !

 

ஒரே நேரத்தில் பல பயிற்றுநர்கள் பொருள்களை எடுத்துச் செல்லப் பண்டகத்திற்கு  வந்தால். அவர்களிடமிருந்து தேவைச் சீட்டுப் புத்தகங்களை வாங்கி அடுக்கி வைத்துக் கொள்வேன். பிறகு முன்மை நிலைப்படி ((As per Seniority)  ஒவ்வொருவராக அழைத்துப் பொருள்களை வழங்குவேன் !


பொருள்களை உள்ளே சென்று எடுத்து வருதல், அவற்றை எடை போடுதல்   ஆகிய பணிகளை நானே செய்வேன் ! அரியுருக்கு போன்ற கனமான பொருள்களை மட்டும்,  எடுக்கவும், எடைத் துலையில் (weighing Machine) வைக்கவும், வெளியே எடுக்கவும் சில பயிற்சியாளர்களைப் பயன்படுத்திக் கொள்வேன் !

 

வசக்கணக்கில் (Suspense Account) பொருள்கள் வழங்கிவந்த நிலையை உடனடியாக நிறுத்தினேன். பயிற்சியாளர்களை அனுப்பி, சுவர் மாடம், நிலைப்பேழை போன்றவற்றிலிருந்து பொருள்களை எடுத்து வரும் வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தேன் !

 

இந்த ஏற்பாடுகளுக்கிடையே பொறுப்பு ஒப்படைப்பு / ஏற்புப் பணியும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.   பொருளை, ஒப்படைப்பதற்கு அஃது எந்த இடத்தில் உள்ளது என்று  அதன் இருப்பிடம் தெரியாமல் தேடுவதிலேயே திரு.இரத்தினசாமிக்கு நிரம்ப நேரம் செலவானது !

 

பொறுப்பு ஒப்படைப்பு / ஏற்புப் பணிகளுக்கிடையே பயிற்றுநர்களின் அவசரத் தேவைக்காக (அரிதாகபிற்பகல் நேரத்திலும் பொருள்கள் வழங்கல், நிறுவனங்களிடமிருந்து அவ்வப்போது பெறப்படும்  பொருள்களின் தரம், அளவு மற்றும் எண்ணிக்கை ஆகியவற்றைச்  சரிபார்க்கச் செய்து சான்று பெறுதல், அவற்றை இருப்புப் பதிவேட்டில் கணக்கில் கொண்டு வருதல், மற்றும் இன்னபிற இடையூறுகளால், பொறுப்பு ஏற்புப் பணி ஆமைநடையிலேயே போய்க்கொண்டிருந்தது!

 

மிகப் பெரிய ஒரு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேர்வாணைக் கழகம் மூலம் தெரிவு செய்யப்பட்டவரும் முன் அனுபவம் ஏதுமில்லாதவருமான  திரு.இரத்தினசாமியைப் பண்டகக் காப்பாளராகப் பணியமர்வு செய்தது, இயக்ககம் செய்த பெருந்தவறு. திக்குத் தெரியாத காட்டில்  இருள் நிறைந்த  பாதையில் அவரைத் தன்னந்தனியராகத் தவிக்கவிட்டதன் பலன் ஒரு பண்டகத்தை முறையாக எப்படிப் பேணுவது என்பதை அவரும்  கற்றுக்கொள்ள வில்லை; முதல்வரும் அவருக்குக் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்யவில்லை !

 

இதன் விளைவாக அலங்கோலமாக இருந்த ஒரு பண்டகத்தின் பொறுப்பை  முறைப்படி நான் ஏற்றுக்கொள்ள இரண்டரை மாதங்கள் ஆயின ! மொத்தத்தில் எந்த நிலையத்திலும் நடவாத நிகழ்வுபொறுப்பு ஒப்படைக்க இரண்டரை மாதங்கள் ஆகிய நிகழ்வு - 1971 –ஆம் ஆண்டு திருச்சியில் நடந்தது !

 --------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”வேதரெத்தினம்” வலைப்பூ.

[தி.: 2052, துலை (ஐப்பசி) 28]

{14-11-2021}

--------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக