(1972 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்)
திரு.இரத்தினசாமி பண்டக் காப்பாளராகத் திருச்சியில் பணியில் சேரும்போது
அவருக்குப் பண்டகத்தைப் பற்றிய புரிதல் சுழி
(Zero) தான். அங்குள்ள
பொருள்களில் பெரும்பாலானவற்றை அவர் கண்ணால் கூடப் பார்த்திருக்க மாட்டார் !
கண்களால் பார்த்திராத ஆயிரக் கணக்கான பொருள்களை அவரிடம் தந்ததும், அவற்றை
உன் பாதுகாப்பில் வைத்துக்கொண்டு தேவைச் சீட்டு கொண்டு வருவோருக்கு வழங்கு என்று சொன்னதும், வேலைவாய்ப்புப்
பயிற்சித் துறை செய்த தவறு
!
அதே தவற்றைத் தான் துறை (Department) இன்னும் செய்து வருகிறது.
ஆசிரியர்,
காவலர்,
மருந்தாளுநர், மருத்துவர், படையூழியர் (Military Personnel), யாரானாலும் முன்னதாகவே பயிற்சி அளித்து அதன் பின்பே பணிக்கு
அனுப்பப்படுகின்றனர் !
ஆனால்,
வேலை வாய்ப்பு பயிற்சித் துறையில் பண்டகக் காப்பாளர், கணக்கர்
போன்ற பணியிடங்களுக்கு முன் பயிற்சி ஏதும் அளிக்காமல் நேரடியாகப் பணியில் அமர்த்தப்படுகின்றனர் !
முன்பயிற்சி இல்லாமல் பணிக்கு அமர்த்தப் பெற்ற திரு.இரத்தினசாமி மிகுந்த இழப்புக்கு ஆளானார். என்னிடம்
அவர் பொறுப்பை ஒப்படைக்கும் போது,
இருப்பை விடக் குறைவாகப் பொருள்களை ஒப்படைத்த வகையில் உருபா 5,000 அளவுக்கு
அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருந்தது
!
இந்தத் தொகையை அவர் தன் ஊதியத்திலிருந்து தவணை முறையில் மாதாமாதம் செலுத்தி ஈடு செய்ய நேர்ந்தது. 1971 –ஆம் ஆண்டில் உருபா 5,000 என்பது இப்போது உருபா ஒரு இலக்கத்திற்கு (One Lakh) சமம் என்பதை நினைத்துப் பாருங்கள்!
புதுக்கோட்டை போன்ற சிறிய நிலையங்களில் முன் பயிற்சி இல்லாமல்
பணியில் சேர்ந்த என்னைப் போன்றோர் பண இழப்பிலிருந்து தப்பித்தோம். மதுரை, அம்பத்தூர்
போன்ற பெரிய நிலையங்களில் பணியில் சேர்ந்தோர் எத்தனை இழப்புக்கு ஆளானார்களோ தெரியாது !
வேலை வாய்ப்பு பயிற்சித் துறை (Department) இப்போதாவது விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுத்தால் நல்லது
என்பது என் கருத்து !
திரு.இரத்தினசாமி பண்டகப் பொறுப்புகளை ஒப்படைக்க, இரண்டரை
மாதங்கள் ஆனதும், உருபா
5000 அளவுக்கு இழப்பை ஈடு செய்ய நேர்ந்ததும், இணை
இயக்குநர் திரு.பலராமன் அவர்களின் சிந்தனைகளைக் கிளறிவிட்டன என்று நினைக்கிறேன் !
புதுக்கோட்டைப் பண்டகத்தை நான் பேணியிருந்த முறையும் செயல்படுத்தி
இருந்த பகுப்பலகீடும் (Unitization), திருச்சிப் பண்டகத்தில் அவர் கண்ட அலங்கோலக் காட்சிகளும் அவர் மனக் கண் முன் படக் காட்சிகளாக
விரிந்தன போலும் !
1972 –ஆம்
ஆண்டின் முன் பகுதியில் அனைத்து முதல்வர்களுக்கும் (Principals) இயக்ககத்திலிருந்து உத்தரவு பறந்தது !
அதில் தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள பண்டகத்தில் அனைத்துப்
பொருள்களும் “பகுப்பலகீடு” (Unitization) செய்து, “பொருள்
விவரச் சீட்டுகள்” பிணைக்கப்பட வேண்டும் என்றும், எந்தப்
பொருளையும் பார்த்தவுடனேயே அஃது எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதை அறியும் வண்ணம்
பேணப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது !
பகுப்பலகீடு (Unitization) என்பது என் சிந்தனையில் விளைந்த புதிய திட்டம். என்
சொந்த முயற்சியால் புதுக்கோட்டையில் 1969 –ஆம் ஆண்டிலேயே செயல்படுத்தப் பட்ட திட்டம்.
இந்தத் திட்டத்தை வேலை வாய்ப்பு பயிற்சித் துறை தத்து எடுத்துக் கொண்டதில்
எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே
!
பகுப்பலகீட்டு முறையை (Unitization) புதுக்கோட்டையில் நான் முன்னதாகவே செயல்படுத்தி வந்திருக்கிறேன். திருச்சிக்கு
இடமாற்றலாகி வந்தவுடன்,
பொறுப்பு ஏற்பின் போதே பகுப்பலகீட்டு முறையை (Unitization) செயல்படுத்திவிட்டேன் !
பிற நிலையங்களில் இயக்குநரின் உத்தரவுக்குப் பிறகே செயல்படுத்தத்
தொடங்கினர். இப்போது தொழிற் பயிற்சி நிலையங்களின் பண்டகங்களில் “பகுப்பலகீடு” (Unitization) நடைமுறையில் இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது !
அன்றாடம் கணக்கெழுதி, பண
இருப்பைச் சரிபார்க்கும் வழக்கத்தைத் தவறாமல் பின்பற்றும் கணக்கரின் வரவு செலவுக் கணக்குகளில் குறைகள்
இருக்க வாய்ப்பே இல்லை!
அது போல்
”பகுப்பலகீடு” (Unitization)
செய்து பண்டகத்தைப்
பேணி வருவதுடன் கணக்குகளைத் தன் தணிக்கை (Self Audit) செய்து
பேணிவரும் பண்டகக் காப்பாளரின் வரவு செலவுக் கணக்குகளில் அகத் தணிக்கையில் குறைகள்
கண்டுபிடித்தல் என்பது மிக மிக அரிது !
தொழிற் பயிற்சி நிலையங்களில் பணிபுரியும் பண்டகக் காப்பாளர்கள் ”பகுப்பலகீட்டு முறையை” (Unitization) கடைப்பிடிக்க யாருடைய உத்தரவும் இப்போது தேவையில்லை. தேவைப்படுவது புத்திசாலித் தனமும், உந்தலுணர்வும் மட்டுமே !
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”வேதரெத்தினம்” வலைப்பூ.
[தி.ஆ: 2052, துலை (ஐப்பசி) 29]
{15-11-2021}
--------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக