தேடுக !

வெள்ளி, 19 நவம்பர், 2021

மலரும் நினைவுகள் (20) திருச்சியிலிருந்து நாகைக்கு இடப் பெயர்வு !

(1975 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்) 

திருச்சியில் 01-11-1971 முதல் 03-05-1975 வரை ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகள் பணிபுரிந்தேன். அப்போது என்னுடன் பணிபுரிந்த நண்பர்களில் திரு.T.M.ஜெயராமன், திரு.J.சந்தான கிருஷ்ணன், திரு.A.கணேசன் திரு.எஸ்.எம்.முஹையதீன் ஆகியோர் புகழுடம்பு எய்திவிட்டனர். அவர்களது  முகங்கள் இப்போதும் என் மனத்திரையில் படமாக ஓடிக் கொண்டிருக்கின்றன !

 

திருச்சியிலிருந்து 1975-ஆம் ஆண்டு காலமுறை இடமாற்றலில் நாகப்பட்டினம் சென்றேன். திருச்சியில் பணியிலிருந்து விடுவிக்கப் பெற்ற நான் 04-05-1975 அன்று நாகையில் பண்டகக் காப்பாளராகப் பணியேற்றுக் கொண்டேன்.  அங்கு இரண்டு ஆண்டுகளாகப் பண்டகக் காப்பாளர் பணியிடம் நிரப்பப்படாமல் இருந்தது. திரு.மரிய ஜோசப் என்னும் மேற்பார்வைப் பயிற்றுநர்  பண்டகப் பொறுப்பாளராகப் பணியாற்றி வந்தார். இயக்குநரின் ஆணைப்படி  அங்கு பகுப்பலகீடு நடைமுறைப்படுத்தப் பட்டிருந்தது. ஆனால் அது பெயரளவுக்குத் தான் செய்யப்பட்டிருந்தது. எனவே அதைத் திருத்தியமைக்க வேண்டிய பொறுப்பு என் தோள்களில் வந்து இறங்கியது !

 

நாகப்பட்டினத்திலும் என் பணிகள் எளிதானதாக இல்லை. பண்டகம் தொடர்பான தணிக்கைத் தடைகள்  ஆண்டுக் கணக்கிலும் நூற்றுக் கணக்கிலும்  நிலுவையில் இருந்தன. அவற்றுக்குத் தீர்வு காண வேண்டிய  பொறுப்பை நான் எதிர்கொள்ள நேர்ந்தது. அவற்றுள் சிக்கலான ஒரு தணிக்கைத் தடை தான் என்னை வாட்டி எடுத்துவிட்டது !

 

ஆண்டு விவரம்  சரியாக நினைவில்லை. ஆனால் அப்போது முதல்வராக இருந்தவர் திரு.எம்.லோகநாதன். பயிற்சி நிலையத்துக்கு வாங்கப் பெற்ற அனைத்து அறைகலன்களும் (Furniture), பண்டகத்தில் இருப்பில் எடுக்கப்பெற்று, அலுவலகத்திற்கும் பணிமனைக்கும் தேவைச் சீட்டுகள் மூலம் வழங்கப்பட்டிருந்தன.  பண்டக இருப்பு அப்போது ஏதுமில்லை (Nil Stock) !

 

அறைகலன் (Furniture), என்பது நுகர்பொருள் வகையைச் சார்ந்தது அன்று என்பதால், தேவைச் சீட்டுகள் மூலம் வழங்கப்பெற்றதைக்  கணக்கில் காட்டலாமே தவிர, அவை பயனற்ற நிலையை அடைந்து செயற்குறிப்பு மூலம்  முறையாகக் கழிவு செய்யப்பெறும் வரை   (Until Declared as Condemned)  பண்டக இருப்புக் கணக்கிலிருந்து குறைக்க முடியாது  !

 

நாகப்பட்டினத்தில் பண்டகத்தில் பேணி வந்த அறைகலன் (Furniture) பதிவேட்டில் பக்கங்கள் தீர்ந்துவிட்டதால் புதிய பதிவேட்டில் ஏப்ரல் முதல் நாள் நிலையில்  நிலைய இருப்பு எடுத்து எழுதப்பட்டிருக்கிறது. அவற்றுள் இரும்பு நிலைப்பேழை (Steel Almirah)  நாட்டுமரத் தொழுப்பலகை (C,W.Work Bench)  போன்ற   ஏழெட்டு இனங்கள் மட்டும் தவறுதலாக  இருமுறை, (Two Times) இருவேறு பக்கங்களில் இருப்பு எடுத்து எழுதப்பட்டிருக்கிறது.  ஒரு எடுத்துக்காட்டு மூலம் இதை விளக்குகிறேன்.( குறிப்பிட்டுள்ள விவரங்கள் எடுத்துக்காட்டுக்காகவே தவிர அவை உண்மை நிலையைக் காட்டுவன அல்ல. ஏழு (07) எண்கள் என்பதும் அவ்வாறே !)

 

Steel Almirah 6’ X  3’ X 1-1/2’………………….........……..7 Nos

1-4-2021. carried over to page 75 volume 4…………….7 Nos.

1-4-2021. carried over to page 130 Volume 4…….…….7 Nos.

 

பயிற்சி நிலையத்துக்கு வாங்கிய நிலைப்பேழைகள் மொத்த எண்ணிக்கை 7 மட்டுமே. ஆனால் இருவேறு பக்கங்களில் இருப்பை எடுத்து எழுதியதால் வாங்கிய எண்ணிக்கை  7 + 7 = 14 என்று தவறான ஒரு தோற்றத்தைப் பதிவேடு காண்பிக்கலாயிற்று !

 

தொழிற் பயிற்சி நிலையங்களில், பயிற்சிப் பிரிவுகளானாலும் சரி,  பண்டகமானாலும் சரி, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 அன்று பதிவேடுகளில் கணக்கு முடிக்கப்பட்டு, சிவப்பு மையினால் நீண்ட படுக்கைக் கோடிட்டு அதற்குக் கீழே ஏப்ரல் முதல் நாளில் இருப்பை எடுத்து எழுதுவது வழக்கம். எடுத்துக்காட்டாக, இந்தப் பதிவு  கீழ்க்கண்டவாறு அமைந்திருக்கும்.

 

1-04-2021   இருப்பு................................................... எண்கள்

 

எந்திரங்கள், அறைகலன்கள், கருவிகளைப் பொறுத்தவரை இவ்வாறு காட்டப்படும் இருப்பு  பல்வேறு பிரிவினருக்கும் வழங்கப்பெற்ற இருப்பு மற்றும் பண்டகத்தில் உள்ள இருப்பு இரண்டின் மொத்தத்தைக் குறிக்கும். நுகர்பொருள்,  மூலப்பொருள், விளையாட்டுச் சாதனங்கள், கழிவுப் பொருள்கள் ஆகியவற்றைப் பொறுத்தவரை 1-4-2021 எனக் காட்டப்படும் இருப்பு பண்டகத்தில் உள்ள நிகர இருப்பைக் குறிக்கும் !

 

மேற்கண்ட நேர்வில் பக்கம் 75-ன்படி 7 எண்களும் பக்கம் 130 –ன்படி 7 எண்களும் கணக்கில் காட்டப்பட்டுள்ளன. இரு பக்கங்களிலும் 100% இருப்புச் சரிபார்ப்பில் 7 எண்கள் சரிபார்க்கப்பட்டன என முதல்வர் பதிவு செய்துள்ளார். (அதாவது 7 + 7 = 14 எண்களும் முதல்வரால் சரிபார்க்கப்பட்டன என்கிறது பதிவு) இவ்வாறு தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் 100% இருப்புச் சரிபார்ப்பில் 14 எண்கள் சரிபார்க்கப்பட்டன என்கிறது முதல்வரது பதிவு !

 

100% இருப்புச் சரிபார்ப்புக்குப் பின்,  ஏதாவதொரு அண்டை  நிலையத்திலிருந்து வரும் முதல்வரால் 25% இருப்புகள் சரிபார்க்கப்படும்.  குறிப்பிட்ட ஐந்தாண்டுக் காலத்தில் ஓரிரண்டு நேர்வுகளில் 25% இருப்புச் சரிபார்ப்பின் போதும் 7 + 7 = 14 சரிபார்க்கப்பட்டன என்று பதிவாகி இருக்கிறது. அதாவது 7 நிலைப்பேழைகள் உள்ள ஒரு நிலையத்தில் 14 நிலைப்பேழைகள் இருப்பதாக தொடர்ச்சியாக 5 ஆண்டுகள்  நாகை நிலைய முதல்வரும், ஓரிரு நேர்வுகளில் 25% சரிபார்ப்புக்கு வந்த பிற நிலைய முதல்வரும் பதிவு செய்துள்ளனர் !

 

இந்தத் தவற்றை எப்படியோ கண்டு பிடித்த பண்டகக் காப்பாளர் திரு.சிவராமகிருஷ்ணன் முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார். அப்போது முதல்வராக இருந்த திரு.T.D.K.விசுவநாதன், பக்கம் 75-ல் இருந்த இருப்பை வைத்துக்கொண்டு பக்கம் 130 –ல் தவறாகச் செய்யப்பட்டிருந்த இரண்டாவது  பதிவைஇரட்டைப் பதிவு” (Double Entry) என்று குறிப்பிட்டு நீக்கிவிட்டார் !

 

14 எண்கள்  இருப்பு உள்ளதாகவும்  அவற்றின் இருப்பைச்  சரிபார்த்ததாகவும்  ஒரு முதல்வர் தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் பதிவு செய்துள்ளார். இடையில் 25% இருப்புச் சரிபார்ப்பிலும் 14 எண்கள் சரிபார்த்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரட்டைப் பதிவு என்று சொல்லி இன்னொரு முதல்வர்  7 எண்களை நீக்கியது தவறு. கண்ணால் கண்டதாக ஒரு முதல்வர் பதிவு செய்துள்ளதை, அது தவறான பதிவு என்று இன்னொரு முதல்வர் எப்படிச் சொல்லமுடியும் ?

 

எனவே, ஏழு (07) எண்கள் நிலைப்பேழைக்குரிய விலை மதிப்பை பண்டகக்காப்பாளரிடமிருந்து  தண்டல் (வசூல்) செய்ய வேண்டும் என்று அகத் தணிக்கையில் தடை எழுப்பப்பட்டது. நிலைப்பேழை போன்று மொத்தம் ஏழெட்டு இனங்கள் இவ்வாறு தணிக்கைத் தடைக்கு  இலக்கானதாக எனக்கு நினைவு !

 

இந்தத் தணிக்கைத் தடைக்குச் பலமுறை சீரறிக்கை இயக்ககத்துக்கு அனுப்பப்பட்டும் தடைத் தீர்வுக்கு கணக்கு அலுவலர்களாக இருந்தவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. நான் நாகையில் பணியேற்றதும் இரட்டைப்பதிவு என்பதைச் சொல்லி சீரறிக்கை அனுப்பினேன். தீர்வு கிடைக்கவில்லை. சொற்களை மாற்றி மாற்றிப் போட்டு, ”இரட்டைப் பதிவுஎன்பதுடன் வேறு துணைக் காரணங்களையும் சொல்லி நான்கைந்து முறை சீரறிக்கை அனுப்பிப் பார்த்தேன். ஒன்றும் நடக்கவில்லை !

 

இதுபோன்ற சிக்கலான தடைகள் ஒன்றல்ல இரண்டல்ல பத்துக்கும் மேல் இருந்தன. ஒவ்வொன்றுக்கும் சீரறிக்கை எழுதி எழுதிக் களைத்துப் போனேன்.  ஏழு (07) நிலைப்பேழைகள் தொடர்பாக இறுதியில்  எனக்கு ஒரு கருத்துத் தோன்றியது. அதைச் சீரறிக்கையாக்கினேன்  (Rectification Report) !

 

அதில் நான் என்ன சொல்லியிருந்தேன் தெரியுமா ? 14 நிலைப் பேழைகளை நான் கண்ணால் பார்த்தேன், சரியாக உள்ளன எனப் பதிவு செய்துள்ள    திரு.லோகநாதன் அவர்களும், 7 எண்கள் தான் உண்மை, எஞ்சிய 7 –ம்  மாயத் தோற்றம் (False Image) என்று பதிவு செய்து 7 எண்களைக் கணக்கிலிருந்து நீக்கிய திரு.T.D.K.விசுவநாதன் அவர்களும் இப்போது இயக்ககத்தில் தான் உயர் பதவிகளில் உள்ளனர். எனவே அவர்களிடம் இயக்குநர் விளக்கம் கேட்டு முடிவு செய்யலாம் என்று தெரிவித்திருந்தேன். அவ்வளவு தான்.  15 நாள்களில் இயக்ககத்திலிருந்து பதில் வந்தது, குறிப்பிட்ட தணிக்கைத் தடை தீர்வு செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது  என்று !

 

-----------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”வேதரெத்தினம்” வலைப்பூ.

[தி.: 2052, நளி (கார்த்திகை) 03]

{19-11-2021}

-----------------------------------------------------------------------------------------

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக