தேடுக !

வெள்ளி, 19 நவம்பர், 2021

மலரும் நினைவுகள் (19) அமைச்சுப் பணியாளர் சங்கம் அமைத்திட முயற்சி முன்னெடுப்பு !

(1972 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்) 

தமிழ்நாடு தொழிற்பயிற்சி அமைச்சுப் பணியாளர் சங்கம் தொடங்கப்படாத நேரம்.  அமைச்சுப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைக் களைதல், அவர்களுக்கான பதவி உயர்வு வாய்ப்புகளை உருவாக்குதல், பண்டகக் காப்பாளர், கணக்கர் போன்றோர் தம் பணியில் படும்  துன்பங்களை நீக்குதல், அலுவலக மேலாளர் / கண்காணிப்பாளர் பதவி உயர்வு வாய்ப்புக்கு இயக்ககத்தில் 2 உயர் பணியிடங்களும்  (Gazetted Assistant Posts) திருச்சி, மதுரை போன்ற பெரிய நிலையங்கள் சிலவற்றில்  முதவரின் தனி உதவியாளர் (P.A.Principal) என்ற பெயரில் 4 பணியிடங்களும் ஆக மொத்தம் 6 பணியிடங்கள் மட்டுமே இருந்த  நிலையை மாற்றுதல் ஆகியவை பற்றிச் சிந்திக்க இயக்கத்தின் உயர் அலுவலர்களுக்கு  எண்ணமே இல்லாதிருந்தது !

 

இத்தகைய சூழ்நிலையில் கண்காணிப்பாளர் திரு.பி.எஸ்.ஜேசுதாஸ் தலைமையில் திரு.எஸ்.சங்கரன், (.மே.உளுந்தூர்ப்பேட்டை), திரு.சு.ரெங்கராசுலு, (.மே.புதுக்கோட்டை), திரு.முனிச்சக்கரவர்த்தி (.மே.திருவண்ணாமலை), திரு.வெங்கடசுப்பையா (கண்காணிப்பாளர், இயக்ககம்) திரு.சந்தானகிருஷ்ணன் (கண்காணிப்பாளர், இயக்ககம்) திரு.வெ.வேதாச்சலம் (காசாளர், இயக்ககம்), திரு.சோம.நடராசன் (உதவியாளர், இயக்ககம்) திரு.தி.வே.சீனிவாசன் (உதவியாளர், இயக்ககம்), திரு.கி.மா.கோவிந்தராசன் (உதவியாளர், இயக்ககம்), மற்றும்  பலர் சென்னையில்  இயக்ககத்துக்கு வெளியே ஒரு  இடத்தில் 1971-ஆம் ஆண்டு ஒன்று கூடி, சங்கம் தொடங்குதல் பற்றிக் கலந்துரையாடினர் !

 

தொடர் நடவடிக்கை எடுப்பதற்காக திரு.சி.வீரராகவன், திரு.வெங்கடசுப்பையா  திரு.பி.எஸ்.ஜேசுதாஸ் ஆகியோரைக் கொண்ட குழு ஒன்று (Ad-hoc Committee) அமைக்கப்பட்டது.  சங்கம் தொடங்கும் நடவடிக்கை பற்றி இணை இயக்குநர் போன்ற உயர் அலுவலர்களுக்குத் தெரிந்தால், முயற்சியில் ஈடுபடும் முன்னணியினர் பழிவாங்கப்படலாம் என்னும் அச்சம்தரும்  இணக்கமற்ற  சூழ்நிலை அப்போது நிலவியது !

 

அமைச்சுப் பணியாளர்களுக்கென ஒரு சங்கம் தொடங்கவேண்டும் என்னும் இந்தக் குழுவினரின் பணியில் குறிப்பிடத் தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், ”முயற்சி முன்னணியின் அணுகுமுறை மற்றும் விரிவான புள்ளிவிவரங்களுடன் இணைஇயக்குநரிடம் வைத்த வேண்டுகோளின் பயனாக திருச்சி, மதுரை ஆகிய இரு நிலையங்களிலும் பண்டகக் கண்காணிப்பாளர் (Stores Supdt in the Cadre of Office Manager) பணியிடங்கள் உருவாக்கபட்டன. அத்துடன் திருச்சி, மதுரை, கோவை, அம்பத்தூர், வடசென்னை, நெல்லை, போன்ற  8 பெரிய நிலையங்களில் கூடுதல் பண்டக (Additional Store Keeper)  காப்பாளர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன !

 

திருச்சி மற்றும் மதுரையில் பண்டகக் கண்காணிப்பாளர் பணியிடம் உருவாக்கப்பட்டதால், அங்கு பணிப்பளுவால் துன்பப்பட்டுவந்த அலுவலக மேலாளர்களுக்கு சற்று நிம்மதி கிடைத்தது. பணிப்பளுவை இருவருமாகப் பகிர்ந்து கொண்டனர் !  திருச்சி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் திரு.எஸ்.எம்.முஹையதீன் பண்டகக் கண்காணிப்பாளராக 1972-ஆம் ஆண்டு பணியேற்றுக்  கொண்டார் !

 

அதுபோன்றே, பெரிய நிலையங்களில் கூடுதலாக  மொத்தம் எட்டு  பண்டகக் காப்பாளர் பணியிடங்கள்  உருவாக்கப்பட்டதால், அங்கெல்லாம் ஒற்றைப் பண்டகக் காப்பாளர் (Single S.K.) பணிப்பளுவைச் சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த  நிலையில் அவர்களின்  பணிப் பொறுப்புகளைப் பங்கிட்டுக் கொள்ள இன்னொருவர் பணியமர்த்தம் செய்யப்பெற்றது நிலைமையின் கடுமையை வெகுவாகக் தணித்தது !

 

திருச்சியில் திரு.இரத்தினசாமிக்குப் பிறகு ஒற்றைப் பண்டகக் காப்பாளராக நான் பொறுப்பேற்று, கடுமையாக உழைத்து கருவிகள் உள்பட அனைத்துப் பொருள்களையும் பகுப்பலகீடு (Unitization) செய்துமுடித்து இரண்டு பணிமனைகளிலும் அமைந்திருந்த  இரண்டு பண்டகங்களையும் பேணிவந்த நிலையில், கூடுதல் பண்டகக் காப்பாளராக சேலத்திலிருந்து திரு..முத்துசாமி 1972 –ஆம் ஆண்டு பதவி உயர்வில் வந்து பணியேற்றார் ! என் பணிப்பளுவில் பாதி குறைந்தது !

 

முயற்சி முன்னணியின் அணுகுமுறைக்குக்  கிடைத்த வெற்றி, அமைச்சுப் பணியாளர்களுக்குச்  சங்கம் அமைத்திட வேண்டும் என்னும் வேட்கையை   இன்னும்  அழுத்தமாக உருவாக்கியது !

 

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”வேதரெத்தினம்” வலைப்பூ.

[தி.: 2052, நளி (கார்த்திகை) 02]

{18-11-2021}

-----------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக