தேடுக !

வெள்ளி, 12 நவம்பர், 2021

மலரும் நினைவுகள் (01) அரசுப் பணியில் அடியெடுத்து வைப்பு ! புதுக்கோட்டையில் பணியேற்பு !

 (1966 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்) 

தமிழ்நாடு தேர்வாணைக் கழகம் மூலம் தெரிவு செய்யப்பெற்று, பண்டகக் காப்பாளராக, புதுக்கோட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 1966 –ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ஆம் நாள் பணியில் சேர்ந்தேன் !

 

திரு.பா.சக்கரவர்த்தி அய்யங்கார் முதல்வர்; திரு.சு.அரங்கராசுலு அலுவலக மேலாளர். திரு.ஆழ்.சகதீசன் - கணக்கர். திரு.நா.நாகராசன் - பணிப்பிரிவு & பயிற்சிப் பிரிவு  உதவியாளர். திரு.தெ.உலகநாதன் - கொள்முதல் பிரிவு இளநிலை உதவியாளர். திரு.சி.தருமராசன் - எழுதுபொருள் & தற்செயல் விடுப்புப் பிரிவு இளநிலை உதவியாளர். திரு.மு.நடராசன் - தட்டச்சர். பண்டகக் காப்பாளராகப் பணி புரிந்துவந்த  திரு.எஸ்.குமாரசாமி குன்னூருக்கு இடமாற்றலாகிச் சென்றுவிட்டதால், மேற்பார்வைப் பயிற்றுநராக (Supervisory Instructor) இருந்த திரு.எஸ்.சுந்தர்ராசன்  பண்டகப் பொறுப்பை ஏற்றிருந்தார் !

 

பண்டகக் காப்பாளராகப் பணியேற்கும் முன், பாபநாசத்தில், கூட்டுறவுத் துறையில் தணிக்கைப் பிரிவு இளநிலை ஆய்வாளராக (Junior Inspector Auditor) ஈராண்டுகள் பணிபுரிந்த போது நான் பெற்ற பட்டறிவு மட்டுமே எனக்குத் துணை !

 

முதல்வர் திரு.சக்கரவர்த்தி அய்யங்கார் என்னை அழைத்து, பதிவேடுகளில் உள்ள பண்டக இருப்பு அனைத்தும் சரியாக இருக்கின்றன, 31-03-1966 முடிய உள்ள  இருப்பினை 100%  சரிபார்த்து இப்போது தான் முடித்திருக்கிறேன், எனவே, நீ எதையும் சரிபார்க்காமல் பொறுப்பை ஏற்றுக் கொள்ளலாம் என்று என்னிடம் தெரிவித்தார் !

 

என் மூளையின் ஒரு ஓரத்தில் சிவப்பு விளக்கு எரிந்தது. எச்சரிக்கை அடைந்தேன். தணிக்கைப் பணியின் போது பல கூட்டுறவுச் சங்கங்களிலும் பண்டக சாலைகளிலும் இருப்புச் சரிபார்ப்புப் பணியை நான் மேற்கொண்டிருக்கிறேன். அந்தப் பட்டறிவு என்னை விழிப்படைய வைத்தது !

 

திரு.சுந்தர்ராசன் அவர்களிடம் நான் ஒரு கருத்தை வலியுறுத்தினேன். கருவிகள், எந்திரங்கள், அறைகலன்கள் போன்றவற்றை எண்ணிச் சரிபார்த்துப் பெற்றுக் கொள்கிறேன்; அன்றாடம் வழங்கக்கூடிய மூலப்பொருள்கள் (Raw Materials), நுகர்பொருள்கள் (Consumables) ஆகியவற்றின் இருப்பை மட்டும் சரிபார்க்காமல் இப்போதைக்குப் பெற்றுக் கொள்கிறேன். பிற்காலத்தில் இவற்றின் இருப்பில் குறைவு ஏதேனும் காணப்பட்டால், அதைச் சரிசெய்ய  நீங்கள் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றேன். அவரும் ஒப்புக் கொண்டார்

 

பண்டகத்தில் இருந்த பொருள்கள் அனைத்துமே எனக்கு அறிமுகமில்லாதவை. ஏதோவொன்றைக் காட்டி, இதுதான் அறுவையலகு (Hacksaw Blade) என்றால் அதை நம்புவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை !

 


-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

வேதரெத்தினம் வலைப்பூ.

[தி.: 2052, கன்னி, (புரட்டாசி) 31

{17-10-2021}

-------------------------------------------------------------------------------------

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக