தேடுக !

சனி, 13 நவம்பர், 2021

மலரும் நினைவுகள் (02) கிணற்றிலிருந்து வெளியேறிக் குளத்துத் தவளையானேன் !

 

(1966 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்) 

அப்போது எனக்கு அகவை 20. தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் கூட்டுறவுத் துறையில் தணிக்கைப் பணி  இளநிலை ஆய்வாளராகப் பணியில் சேர்ந்திருந்தேன். அந்த இளம்பருவத்தில் உலகியலில் நான் பெற்றிருந்த  அறிவு  சுழி (Zero). அளவுதான்.   கிணற்றுத் தவளையாகவே  இருந்தேன்.   ஆனால் அங்கு ஆற்றிய ஈராண்டுப் பணிகளுக்குப் பின்பு, இந்தக் கிணற்றுத் தவளை குளத்துத் தவளையாக மாறியது !

 

குளத்துத் தவளைக்கு உலகத்தை எட்டிப் பார்க்கும் வாய்ப்பு மிகுதி என்பதால்  அது பெற்ற  பட்டறிவும் சுழியை (Zero) விட்டுச் சற்றே  கூடுதலாகவே இருந்தது. புதுக்கோட்டையில் பண்டக இருப்புகளைப் பெற்றுக் கொள்ள அதுவே எனக்கு  உதவியாகவும்  அமைந்தது !

 

பொறுப்பு ஏற்றுக் கொள்ளும் போதே  கருவிகள், எந்திரங்கள், அறைகலன்கள் ஆகியவை சார்ந்த  ஒவ்வொன்றுக்கும் சிறு அட்டைத் தாளில் பெயர் எழுதி  அவற்றை  நூலில் கட்டி இணைத்து வைத்தேன். அந்தத் தாளில், குறிப்பிட்ட இனத்தின்  பெயர், எண்ணிக்கை, பதிவேட்டுப் பக்க எண் ஆகியவற்றையும் குறிப்பிட்டு வந்தேன். அத்துடன் அந்தக் குறிப்பிட்ட பொருளின் வைப்பிடம் பற்றியும் பதிவேட்டின் பக்கத்தில் சிறு குறிப்பு எழுதி வந்தேன் !

 

இந்த முறை அங்கிருந்த அலுவலர்களுக்குப் புதிதாக இருந்தது. என்னை வியப்புடன் பார்க்கத் தொடங்கினர்.  இஃதன்றி, பெறப்படுவது   6 அங்குல புறக்காலிகை (6” Outside Caliper) என்றால் அதை உறுதிப் படுத்திக் கொள்ளவெருனியர் காலிகை” (Vernier Caliper) கொண்டு அளந்து பார்க்கத் தொடங்கினேன். இச்செயல் என்னை யாரும் ஏளனமாகப் பார்க்கலாகாது என்பதை அனைவருக்கும் உணர்த்த உதவியது !

 

கருவிகள், எந்திரங்கள், அறைகலன்கள்  ஆகியவற்றின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள எனக்கு ஒரு வாரம் ஆயிற்று.  அடுத்து, முன்பே ஒப்புக்கொள்ளப்பட்டபடி மூலப் பொருள்கள் (Raw Materials) ,  நுகர்பொருள்கள் (Consumables) ஆகியவற்றை  இருப்புச்  சரி பார்க்காமல்  பதிவேட்டில் கையொப்பமிட்டுப்  பெற்றுக் கொண்டேன் !

 

அன்றாடம்  பயிற்சி பிரிவுகளுக்குத்  தேவைப்படும்  பொருள்களை வழங்குவதன்றி மூலப்பொருள்கள் ,  நுகர் பொருள்கள்  ஆகியவற்றின்  இருப்பினையும் நானாகவே  சரி பார்க்கத்  தொடங்கினேன். உதவிக்கு ஓரிரு பயிற்சியாளர்களை (மாணவர்களை) கோரிப் பெற்று அவர்களைப் பயன்படுதிக்கொண்டேன் !

 


--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”வேதரெத்தினம்” வலைப்பூ.

[தி.: 2052, துலை (ஐப்பசி) 02]

{19-10-2021}

-------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக