தேடுக !

ஞாயிறு, 5 டிசம்பர், 2021

மலரும் நினைவுகள் (30) அலுவலக மேலாளர் இருக்கையில் அமர்ந்த முதல் நாள் !

(1984 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்) 

கணக்குப் பதிவேடுகளை என் ஆய்வுக்கு வைத்த கணக்கர் திரு.சுப்ரமணியன், ஆய்வு செய்வதற்குத் தன் உதவி வேண்டுமா என்று என்னிடம்  உசாவினர். பண்டகக் காப்பாளராகப் பணியில் சேர்ந்து 18 ஆண்டுகள்  பண்டகத்திலேயே  கழித்துவிட்ட எனக்கு, கணக்குப் பிரிவுப் பணிகள் தெரியுமா என்று அவர் ஐயம் கொண்டதில்  தவறு சொல்ல முடியாது !

 

அனைத்து அமைச்சுப் பணியாளர்களும் அனைத்துப் பணிகளையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை  இயக்ககம்  அந்தக் காலத்திலும் வழங்கவில்லை; இந்தக் காலத்திலும் வழங்குவதில்லை.  பணி மாற்றமின்றித் தொடர்ந்து பண்டகத்திலேயே இருத்தி வைக்கப்பட்டிருந்த நான், பணியமைப்பு, பயிற்சி, கணக்கு போன்ற பிரிவுகளின் வேலைகளைக்  கற்றுக் கொள்ளாவிட்டால், அலுவலக மேலாளராக உயர்வடையும் போது கீழ்நிலை  அலுவலர்களும் மதிக்கமாட்டார்கள்,  முதல்வர் போன்ற மேனிலை அலுவலர்களும் மதிக்க மாட்டார்கள்  என்பதை உணரத் தொடங்கினேன் !

 

எனவே, பண்டகத்திலேயே முடங்கிப் போகாமல் அனைத்துப் பிரிவுகளிலும்  புகுந்து புறப்படவேண்டும், அவர்களது பணிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். அதைச் செயலிலும் காண்பிக்கலானேன் !

 

பணியமைப்பு, கணக்கு, பயிற்சி, எழுதுபொருள், பதிவறை  போன்ற பிற பிரிவுகளின் பணிகளில் இவ்வாறு இடையறாது என்னை ஈடுபடுத்திக்கொண்டு அவர்களுக்கு உதவி செய்ததால் இரண்டு விதமான பலன்கள் ஏற்பட்டன.   (01) அவர்களின் பணிச்சுமையைக்  குறைக்க நான்  உதவி வந்ததால், எனது அணுக்க நண்பர்களாகப் பலர் உருவெடுத்தார்கள்.  (02) அவர்கள் பிரிவின் வேலைகளை  நான் கற்றுக்கொள்ள முடிந்தது !

 

ஒருசமயம், நாகையில்  கணக்கராகப் பணிபுரிந்துவந்த திரு.வெ. வெங்கடேசன் அவர்கள் அலுவலக மேலாளராகப் பதவி உயர்வு பெற்று அரியலூருக்குச் சென்றுவிட்டார். அவரது இடத்தில் வேறு யாரும் அமர்த்தப்படாமல் கணக்கர் பணியிடம் வெட்புலமாக  வைக்கப்பெற்றிருந்தது ! கணக்கர் பொறுப்பைக் கூடுதலாக ஏற்றுக்கொள்ளுமாறு முதல்வர் என்னிடம் கேட்டார். பண்டகப் பொறுப்புடன் கணக்குப் பிரிவுப் பொறுப்பையும் கூடுதலாக ஏற்பதில் இன்னல்கள் உள்ளன. எனவே வேறு யாரிடமாவது ஒப்படையுங்கள், அவர்களுக்கு நான் உதவி செய்கிறேன் என்று கூறினேன் !

 

இறுதியில், பயிற்சிப் பிரிவு உதவியாளர் திரு.சி.தருமராசன் அவர்களிடம்  கணக்குப் பிரிவு கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது.  அவருக்கு அன்றாடம் உதவி செய்த வகையில் கணக்கரின் பணிகள் அனைத்தையும் முழுமையாக நான் கற்றுக்கொள்ள முடிந்தது.  பட்டியல் தயாரிப்பது, பணக்குறிப்பேடு பேணுதல் உள்பட அனைத்துப் பணிகளும் எனக்குக் கைவரப் பெற்றது !

 

நாகப்பட்டினத்தில் நான் கற்றுக்கொண்ட கணக்குப் பிரிவுப் பணிகள், தாராபுரத்தில் (கணக்குப் பிரிவு) மேலாளராக என் பணிகளைச் செவ்வையாகச்  செய்ய உதவியது. அத்துடன், புதிதாக வந்திருக்கும் மேலாளர், கணக்குப் பிரிவு மட்டுமல்லாது அனைத்துப் பிரிவுப் பணிகளையும் கற்றுக்கொண்டு வந்திருப்பவர், அவரிடம் சாக்குப் போக்குச் சொல்லி எந்த வேலையையும் நிலுவையில் வைத்திருக்க முடியாது என்பதைக் கீழ்நிலை அலுவலர்களுக்கு உணர்த்த உதவியது !

 

உதவி வேண்டுமாஎன்று உசாவிய கணக்கரிடம் தேவைப்பட்டால் கேட்கிறேன்என்று சொல்லிவிட்டுப் பணக்குறிப்பேட்டின் ஆய்வுப் பணியைத் தொடங்கினேன்.  முதலில் பற்றுச் சீட்டுப் புத்தகத்தை வைத்துக்கொண்டு, பணக்குறிப்பேட்டுப் பதிவுடன் ஒப்பிட்டுப் பார்த்து சரிக்குறியிட்டேன். ”பணக்குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட்டது” (Entd in C.B. on...............) என்று பற்றுச் சீட்டின் அடிச்சீட்டுத் தலைப்பில் நான் பயன்படுத்திய ஊதா நிற (Vilot Ink Pen)  மைத் தூவலால் குறிப்பிட்டேன். இவ்வாறு குறிப்பிடும் வழக்கத்தைப் பெரும்பலான கணக்கர்கள்  பின்பற்றுவதில்லை. தாராபுரத்திலும் அவ்வாறே நிகழ்ந்திருந்தது. விடுபடலை நான் நிறைவு செய்தேன் !

 

ஏன் இவ்வாறு குறிப்பிட வேண்டும் என்று திரு.சுப்ரமணியன் மறுநாள்  என்னிடம் கேட்டார்.  பற்றுச் சீட்டுகளின்படி வரவு வந்த தொகை  அனைத்தும்  விடுபடல் ஏதுமின்றிப் பணக்குறிப்பேட்டில் வரவு வைக்கப்பட்டுவிட்டது என்பதை அடிச்சீட்டுகளைப் புரட்டிப் பார்க்கையில், ஒரே பார்வையில், உறுதி செய்துகொள்ளலாம். அதற்கு இந்தப் பதிவு உதவும். கணக்குப் பதிவேடுகள் உள்பட அரசுப் பதிவேடுகளில் குறுக்குப் பதிவுகள் (Cross Entries) செய்வதனால், விடுபடல்களைத் தவிர்க்க முடியும் என்று சொன்னேன் !

 

அரியலூர் தொழிற்பயிற்சி நிலைய அலுவலகத்தில் பற்றுச் சீட்டின் படிப் பெறப்பட்ட 50 பைசாவைப் பணக்குறிப்பேட்டில் கணக்கில் கொண்டு வரத் தவறியமையை அகத்தணிக்கையில் கண்டுபிடித்துத் தடை எழுப்பப் பட்டதையும் அதன் விளைவாக  கணக்கருக்கு 6 மாத ஊதிய உயர்வு நிறுத்திவைப்பும், மேலாளருக்குக் கண்டனக் குறிப்பும் வழங்கப் பட்ட செய்தியையும்  சொல்லி, பற்றுச் சீட்டின் அடிச்சீட்டில் இவ்வாறு குறிப்பு எழுதுவதன் மூலம் இத்தகைய விடுபடல்களைத் தவிர்க்கலாம் என்றும் எடுத்துச் சொன்னேன் !

 

உங்களிடமிருந்து புதிதாக ஒன்றை இன்று தெரிந்து கொண்டேன் என்று கணக்கர் திரு.சுப்ரமணியன் மகிழ்ச்சியுடன் கூறினார். கற்றுக்கொள்வதற்கு அகவை வரம்பு ஏது ? கற்றுக்கொள்பவர்கள் தப்பிக்கிறார்கள்; கற்றுக்கொள்ளாதவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள் !

 

கருவூலச் சுவடியில் (TNTC-70) கடைசிக் கட்டத்தில்பணமாக்கப்பட்ட நாள்..................” (Cashed on.............)  என்னும் குறிப்பை மட்டுமே பெரும்பாலான அலுவலகங்களில் பார்க்க முடியும். நான் கூடுதலாக, .பெ..தொ.எண்...............  (பணப் பெறுகைப் பதிவேட்டின் தொடர் எண்) (Yearly Serial Number..................Of  UDP.Register) என்பதையும், குறிப்பிடத் தொடங்கினேன். இதன் மூலம், கருவூலப் பட்டியல் மூலம் பெறப்பட்ட பணம், பணப் பெறுகைப் பதிவேட்டில் வரவு வைக்கப்பட்டுவிட்டது என்பதை 100% உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்று விளக்கினேன் !

 

இதுபோன்ற சிறு சிறு செயல்கள் மூலம் கணக்கரின் மதிப்பீட்டில் நான் மேலும் மேலும் உயர்கையில், பிறர் மதிக்கும் மேலாளராக என்னை உயர்த்திக் கொள்ள முடிந்தது !

 

கணக்கரின் உதவியைக் கோராமல் அன்றைய வரவு செலவுக் கணக்குகள் அனைத்தையும் சரிபார்த்து முடித்தேன்.  கையிருப்புத் தொகையைச் சரிபார்த்துவிட்டீர்களா என்று கணக்கரிடம் கேட்டேன்.

 

சரிபார்த்துவிட்டேன் என்று கூறி,  பணத்தையும், பணமதிப்புக் குறிப்புச் சீட்டையும்   (Denomination Sheet) கொண்டு வந்து வைத்தார். பணத்தைச் சரிபார்த்துவிட்டு அவரிடம் திருப்பிக்கொடுத்தேன். இச்செய்கையின் மூலம், அன்றாடம் கையிருப்புத் தொகையை மேலாளரிடம் காண்பிக்க வேண்டும் என்னும் செய்தியை அவர் உணர்ந்து கொண்டார் !

 

அன்றாடம் கணக்கெழுதுவதுடன், கையிருப்புத் தொகையையும் சரிபார்க்க வேண்டும் என்னும் குறிப்பை என் செய்கையின் மூலம், அவருக்கு உணர்த்த முடிந்தது. இதைத் தன் அன்றாடக் கடமையாக எந்தக் கணக்கர் கருதிப் பணியாற்றுகிறாரோ, அவரது கணக்குகளில் விடுபடல்களையோ, வேறு குறைபாடுகளையோ எந்தத் தணிக்கைக் குழு வந்தாலும் கண்டுபிடிக்க முடியாது !

 

ஒரு கணக்கரின் பணிகளுக்கு இதைவிடப் பாராட்டு வேறு என்ன இருக்க முடியும் ?

 

----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”வேதரெத்தினம்” வலைப்பூ,

[தி.: 2052, நளி (கார்த்திகை) 18]

{04-12-2021}

----------------------------------------------------------------------------------------------

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக