தேடுக !

திங்கள், 6 டிசம்பர், 2021

மலரும் நினைவுகள் (31) அலுவலக மேலாளராக நாகையில் பணியேற்பு !

(1984 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்) 

தாராபுரம் தொழிற்பயிற்சி நிலையதில் குறுகிய காலமே (11-05-1984 -11-07-1984) பணிபுரிந்தேன். அங்கு பணி புரிகையில், திரு.முகமது கனி யூசூப் அவர்கள் பதவி உயர்வில் ஆட்சி அலுவராகச் சேலத்திற்கு இடமாற்றலானதால் நாகப்பாட்டினத்தில் அலுவலக மேலாளர் பணியிடம் வெட்புலமானதை அறிந்தேன் !

 

இயக்குநருக்கு முதல்வர் வழியாக  விண்ணப்பம் அனுப்பிவிட்டு, சென்னைக்கு நேரில் சென்றேன். அப்போது கைவினைஞர் பயிற்சித் திட்டப் பணியமைப்புப் பிரிவில்  இணை இயக்குநராக திரு.பலராமன் இருந்தார். பழகுநர் பயிற்சிப் பிரிவில்  திரு.வி.யு.புருஷோத்தமன் இணை இயக்குநர்.  திரு.பலராமன் அவர்களைச் சந்தித்து, நாகைக்கு இடமாற்றல் தர வேண்டினேன். என் கோரிக்கையைக் கனிவுடன் ஆய்வு செய்வதாகத் தெரிவித்தார் !

 

அடுத்து திரு.வி.யு.புருஷோத்தமன் அவர்களைச் சந்தித்தேன். என்னுடன் திரு.செல்லையாவும் வந்திருந்தார். அவரிடம் என் இடமாற்றல் கோரிக்கை பற்றிய செய்தியைத் தெரிவித்தேன். திரு.பலராமன் அவர்களைச் சந்தித்தது பற்றியும் தெரிவித்தேன் !

 

திரு.வி.யு.புருஷோத்தமன் அவர்கள் உடனடியாக அகத்துழனியில் (Intercom) திரு.பலராமன் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினார். அவர் சேலத்திற்கு வந்திருந்தது பற்றியும், நான் பண்டகத்தைப் பேணியிருந்த முறை பற்றியும் குறிப்பிட்டு, ”திறமையுடன் பணிபுரியும் அலுவலர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும். நாகப்பட்டினத்தில் அலுவலக மேலாளர் பணியிடம் வெட்புலமாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார். ஆகையால் அவரது கோரிக்கையை ஏற்று, தாராபுரத்திலிருந்து நாகைக்கு அலுவலக மேலாளராக இடமாற்றம் அளித்து அவரிடம் ஆணையை கொடுத்தனுப்புங்கள்என்று கேட்டுக்கொண்டார் !

 

மதிப்பின் நிமித்தமே அவரைச் சந்தித்து , நான் வந்த நோக்கத்தைத் தெரிவித்தேன். அவரோ, நான் எதிர்பாராத வகையில் மிக அழுத்தமான ஒரு பரிந்துரையை திரு.பலராமன் அவர்களிடம் வைத்து என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டார். எந்தப் பதவியில் இருந்தாலும் , அதில் நூற்றுக்கு நூறு நம் திறமையைச் செலுத்திச் செவ்வையாகப் பணி புரிந்தால், தேவைப்படும் நேரத்தில் நமக்கு உதவி தானாகக் கிடைக்கும் என்பதை அன்று புரிந்து கொண்டேன் !

 

அவரிடம் விடைபெற்று வெளியில் வர முயன்றபோது அவர் என்னிடம், “ சற்றுக் காத்திருந்து, இடமாற்றலாணையைக் கையிலேயே வாங்கிச் செல்லுங்கள்என்றார். பொதுவாக அவர் யாரிடமும் மென்மையாகப் பேசுபவர் அன்று; அதனால் அவருக்குச் செல்லமாககரடிஎன்ற பெயரை  அலுவலர்கள் சூட்டியிருந்தனர். ஆனால் அந்தக்கரடிஎன்னிடம் மிக அன்பாக நடந்துகொண்டமைக்குக் காரணம்  என்  பணித் திறன்அன்றி வேறொன்றுமில்லை என்று திரு.செல்லையா அன்று கூறியது இன்னும் என் நினைவில் பசுமரத்தாணியாகப் பதிந்திருக்கிறது !

 

கையில் இடமாற்றலாணையைப் பெற்றுக்கொண்டு தாராபுரம் வந்து, முதல்வரிடம் சொல்லி 04-07-1984 அன்று பணியிலிருந்து விடுவிப்புப் பெற்றேன். சேர்விடைக்காலம் ((Joining Time) நீக்கி 12-07-1984 மு..நாகையில் பணியில் சேர்ந்தேன் !

 

நாகையில் அலுவலக மேலாளர் பணியிடங்கள் இரண்டு. ஒன்றில் திரு.முகமது கனி யூசுப் அவர்களும்  இன்னொன்றில் திரு.ஆர்.ஜேக்கப் அவர்களும் பணியிலிருந்தனர். பணியமைப்புப் பிரிவைக் கவனித்து வந்த திரு.கனி அவர்கள் சேலம் சென்றுவிட்டதால், அந்த இடத்தில் நான் பணியில் இணைந்தேன். !

 

இருந்தாலும் திரு.ஜேக்கப் அவர்களிடம், “நீங்கள் என்னைவிடப் பணியில் முன்மையர் ((Senior). ஆகவே, பணியமைப்புப்  பிரிவை நீங்கள்  விரும்பினால் அதை நான் ஏற்கிறேன்; கணக்குப் பிரிவை நான் எடுத்துக்கொள்கிறேன்  என்றேன். அதன்படியே இரு மேலாளர்களுக்கும் பணி மேற்பர்வைப் பொறுப்பு மாற்றியமைக்கப்பட்டது !

 

அப்போது திரு.இராஜாமணி என்பவர் அங்கு கணக்கர். புதுகோட்டையில் நான் பண்டகக் காப்பாளர், அவர்  கொள்முதல் பிரிவு இளநிலை உதவியாளர் என்பதால் முன்பே எனக்கு அறிமுகமானவர் தான்.  கணக்குப் பிரிவின் மேலாளர் பொறுப்பை ஏற்ற முதல்நாளே அவரிடம் இரண்டு செய்திகளைச் சொல்லிவிட்டேன்.  (01) அன்றாடம் கணக்கு முடித்து மாலை 4-00 மணிக்கு, கணக்குப் பதிவேடுகளை  எனக்கு அனுப்பிட வேண்டும் (02) கையிருப்புத் தொகையை அன்றாடம் நானும் சரிபார்ப்பேன் !

 

அலுவலக மேலாளரோ, ஆட்சி அலுவலரோ புதிதாக ஒரு அலுவலகத்தில் பொறுப்பு ஏற்கையில், அலுவலர்களிடம் அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதைத் தெளிவு படுத்திட வேண்டும். அவர் மேற்கொள்ள விரும்பும் சீர்திருத்தங்களை முதல் நாளிலிருந்தே செயல்படுத்த முனைந்தால் அது எளிது. அவரது பணிக்கலத்தில் இடையில் எந்தச் சீர்திருத்தத்தையும்  அவர் மேற்கொள்ள நினைத்தால் அது கடினமான பணியாகவே இருக்கும் !

 

நான் கணக்குப் பிரிவின் மேலாளராகவோ, ஆட்சி அலுவலராகவோ இருந்த  அலுவலகங்களில், வரவு செலவுக் கணக்குகளைக் கணக்கர்    முடித்து  அன்றாடம் மாலை 4-00 மணிக்கு என் மேசைக்குக் கணக்குப் பதிவேடுகளை  அனுப்பிட வேண்டும் என்பதில்  உறுதியாக இருந்தேன். இதில் சம்பள நாளன்று மட்டுமே தளர்வு தந்திருந்தேன். இதற்கு வசதியாக கணக்குப் பிரிவின் வரவு செலவுகள், சம்பள நாளைத் தவிர்த்து பிற நாள்களில்,  பிற்பகல் 2-00 மணியுடன் முடிக்கப்படும் என்று அலுவலக ஆணை வழங்கச்செய்திருந்தேன் !

 

உரியபடி வழிகாட்டினால், அனைத்து அலுவலர்களுக்கும்  அவர்கள் பணியைச் செய்வது  எளிதாக இருக்குமல்லவா !

 

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”வேதரெத்தினம்” வலைப்பூ,

[தி.: 2052, நளி (கார்த்திகை) 19]

{05-12-2021}

-------------------------------------------------------------------------------------

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக