(1987 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்)
நாகப்பட்டினத்தில் 12-07-1984 முதல் 30-03-1987 வரை ஏறத்தாழ இரண்டே முக்கால் ஆண்டுகள் அலுவலக மேலாளராகப்
பணியாற்றினேன். கல்வி நிலையங்கள் நாகையைவிடச் சேலத்தில் நிரம்ப இருந்ததால், பிள்ளைகளின் படிப்பைக்
கருத்திற் கொண்டு, சேலத்திற்குச் சென்றுவிட எண்ணினேன் ! எண்ணத்தை
விண்ணப்பமாக்கி இடமாற்றலும் பெற்றேன் !
சேர்விடைக்காலத்தை (Joining Time) துய்த்தபின் 08-04-1987 மு.ப. சேலத்தில் அலுவலக மேலாளராகப் பணியில் சேர்ந்தேன். அப்போது
எனக்கு எந்தப் பிரிவின் மேற்பார்வைப் பொறுப்பு ஒதுக்கப்பட்டது என்பது இப்போது நினைவில்லை!
சேலத்தில் நான் பணியேற்கையில் என்னிடம் 10 தொகுதிகள்
அரசாணைக் கோப்புகள் இருந்தன. அவற்றுள் அலுவலர்களின் நலன் சார்ந்த அரசாணைகளே மிகுதியாக
இருந்தன ! அலுவலர்களுக்கு என்னால் இயன்றவரை உதவி செய்வதற்கு இந்த அரசாணைக்
கோப்புத் தொகுதிகளே எனக்குப் பெருங் கருவியாக உதவி வந்தது !
அங்கு பணியிலிருக்கையில், என் நண்பர்
சி.தருமராசன் (அ.மே) சென்னையிலிருந்து
எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். உளுந்தூர்ப் பேட்டையிலிருந்து திரு.அழகரசன்
என்னும் இளநிலை உதவியாளர் சேலம் வருவதாகவும் அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும்
எனவும் கேட்டுக்கொண்டிருந்தார்.
அழகரசனின் தந்தை திரு.வேணு, இளநிலைப்
பயிற்சி அலுவலராகப் பணியாற்றியவர். பணிக்காலத்தில் அவர் மறைந்து போனதால், கருணையடிப்படையில்
திரு.அழகரசனுக்கு இளநிலை உதவியாளராகப் பணி வாய்ப்பு, துறையால் (Department) வழங்கப் பட்டது. அவர் பணியில் சேரும்போது அவரது அகவை 17 என்பதாக
என் நினைவு ! துல்லியமாக நாள்
(Date) விவரம் இப்போது நினைவில்லை.
அவரது பணியை வரன்முறை செய்ய உளுந்தூர்ப் பேட்டையிலிருந்து
இயக்ககத்துக்கு கருத்துரு அனுப்புகையில், அவர் தனது 18 –ஆம் அகவையை
நிறைவு செய்த நாளிலிருந்து வரன்முறை செய்யலாம் என்பதாக அந்தக் கருத்துருவில் குறிப்பிடப்
பட்டிருந்தது. இது ஏற்கப்பட்டால், அவர்
பலமுனைகளில் இழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும் !
பணியில் சேர்ந்த நாளிலிருந்து ஓர் ஆண்டு தள்ளி அவரது பணிகளை வரன்முறை செய்வதால், அவர் (01) தனது பணிக்காலம் முழுவதும் ஆண்டு ஊதிய உயர்வுகளை (Annual Increments) ஓராண்டு தள்ளித் தள்ளியே பெற வேண்டியிருக்கும். (02) ஊதிய ஆணைக்குழு அமைத்து ஊதிய நிரக்கு மாற்றப்படும் போதெல்லாம் அவரது ஊதியம் உரிய நிலையைவிட ஒன்று அல்லது இரண்டு நிலை குறைவாகவே வரையறை செய்யப்படும் !
(03) ஊதிய
வரையறையில் குறைவு ஏற்படுவதால், பணி ஓய்வுக்குப் பின் அவரது ஓய்வூதியம் குறைவாக வரையறை செய்யப்படும். (04) இளநிலை
உதவியாளர் பதவியில் அவரது முன்மை நிலை (Seniority) ஓராண்டு தள்ளியே (அகவை 18 நிறைவு
நாளிலிருந்து) வரையறை செய்யப்படும். (05) அவருக்குப்
பின் பணியில் சேர்ந்தவர்கள் அவரைவிட முன்மையர் (Senior) ஆகும்
நிலை ஏற்படும் !
இவ்வளவு தாக்கங்கள் இருக்கின்றன என்பது அவருக்குத் தெரியாது. ஆனால்
சில இழப்புகள் ஏற்படக் கூடும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். இடமாற்றலாகி
சேலம் வந்தவுடன், என்னிடம் வந்து பணி வரன்முறை பற்றிய பொருண்மையில் (Matter) உதவி
செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். திரு.தருமராசனின்
பரிந்துரையும் இதில் இணைந்திருந்த்து !
உளுந்தூர்ப் பேட்டையிலிருந்து அவரது பணிப்பதிவேடு கிடைத்த
பிறகு, பணி வரன்முறை
பற்றி இயக்குநருக்கு அனுப்பிய கருத்துரையின் படி (Copy) ஒன்றை
அனுப்புமாறு உளுந்தூர்ப்பேட்டைக்குக் கடிதம் அனுப்பச் செய்தேன். வந்தவுடன்
அதை ஆழ்ந்து படித்துப் பார்த்தேன் !
அந்தக் கருத்துரு, அரசு
விதிகளைத் தவறாகப் புரிந்து கொண்டதன் அடிப்படையில் வனையப் பெற்றிருக்கிறது என்பது எனக்குப்
புரிந்தது. இதற்குத் தீர்வு காண வேண்டுமானால், திரு.அழகரசன்
இயக்குநருக்கு முறையீடு செய்ய வேண்டும். அந்த முறையீட்டை அடிப்படையாக
வைத்து, சேலத்திலிருந்து இயக்குநருக்குப் பரிந்துரை அனுப்பலாம் என்று
முடிவு செய்தேன் !
இயக்குநருக்கான முறையீட்டை ஒற்றைப் பத்தியில் எழுதிவிட முடியாது. பணியில்
சேர்ந்த நாள் முதல், ஏன் அவரது பணியை வரன்முறை செய்திட வேண்டும் என்பதற்கான காரணத்தைப் பட்டியலிட்டுத் தெளிவு படுத்த வேண்டும். திரு.அழகரசனால்
முறையீட்டை வனைந்திட முடியாது. அதற்கான பட்டறிவும் (Experience) பணி விதிகளைப் பற்றிய ஞானமும் (Knowledge of Service Rules) அவருக்கு இல்லை. அவருக்கு நான் தான் உதவியாக வேண்டும். வேறு
வாய்ப்பில்லை என்பதை நான் அறிந்தேன் !
அலுவலகத்தில் அமர்ந்துகொண்டு, பிற பணிகளுக்கிடையே, திரு.அழகரசனுக்கு
முறையீட்டை வனைந்து தருதல் என்பதும் எனக்கு மிகவும் இன்னலாகவும் இடையூறு நிறைந்ததாகவும் இருக்கும் என்பதை
உணர்ந்தேன். அவரது பணிப்பதிவேட்டையும், விதிப்
புத்தகங்களையும் என் வீட்டிற்கு எடுத்துச் சென்றால், அங்கு
அமர்ந்து அமைதியாகச் சிந்தித்து முறையீட்டை வனைய முடியும் என்று முடிவு செய்தேன் !
பிறருக்கு இயன்ற அளவு உதவி செய்தல் என்னும் என்னுடைய இலக்கு (இலட்சியம்) நோக்கிய
வழிச் செலவு (பயணம்) என் எண்ணத்திற்கு உந்தாற்றலாக அமைந்தது !
-------------------------------------------------------------------------------------
ஆக்கம்
+ இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”வேதரெத்தினம்” வலைப்பூ,
[தி.ஆ:
2052, நளி (கார்த்திகை) 24]
{10-12-2021}
--------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக