தேடுக !

திங்கள், 13 டிசம்பர், 2021

மலரும் நினைவுகள் (37) அழகரசன் பணி வரன்முறையும் நான் செய்த உதவியும் !

 (1988 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்) 

தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிகளுக்கான பொது விதி, (GENERAL RULES FOR TAMILNADU STATE & SUBORDINATE SERVICES) அரசு அலுவலர்களின் பணியமர்த்தம் பற்றிக் குறிப்பிடுகிறது. ஒரு ஆள் அரசுப் பணியில் அமர்வு செய்யப்பட, அவர் கீழ்க்காணும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் !


Ø  குறிப்பிட்ட பணியிடத்துக்கு உரிய 

கல்வித் தகுதியைப் 

பெற்றிருக்க வேண்டும்.

Ø குறிப்பிட்ட பணியிடத்துக்கு வரையறை

 செய்யப்பட்டுள்ள அகவை  உச்ச வரம்புக்குள்

 இருக்க வேண்டும்.

Ø  உடல்நலத் தகுதி பெற்றிருக்க வேண்டும்

Ø ஆண் எனில், அவர் ஒன்றுக்கு 

மேற்பட்ட

 மனைவியர்களைப்    பெற்றிருக்கக் கூடாது..

 

இளநிலை உதவியாளராகப் பணி அமர்வு பெறுவதற்குப் பள்ளியிறுதி வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். திரு.அழகரசன், பள்ளியிறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றவர் என்பதால், கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிகளுக்கான பொது விதி 12 (a) (i) –கூறுகின்ற   தகுதியை (CONDITION) அவர் நிறைவு செய்திருக்கிறார் !

 

பணிவிதிகளில் (SERVICE RULES) அரசுப் பணி எதற்கும் அகவை மேல்வரம்பு (UPPER AGE LIMIT) வரையறுக்கப்படுகிறதே தவிர கீழ்வரம்பு (LOWER AGE LIMIT) எதுவும் வரையறுக்கப்படவில்லை. அதனால்தான் திரு.அழகரசன் 17-ஆம் அகவையிலேயே இளநிலை உதவியாளராகப் பணியமர்த்தப்பட்டார் ! அகவைத் தகுதியைப் பொறுத்தவரை, அவரது அகவை மேல்வரம்புக்கு உட்பட்டு இருந்திருக்கிறது. இந்த வகையில்  தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிகளுக்கான பொதி விதி 12 (a)(vi)(iii) –கூறுகிற  மேல் வரம்புக்குள் அவரது அகவை இருந்திருக்கிறது !

 

தகுதியுள்ள அரசு மருத்துவர், திரு.அழகரசன்  அரசுப் பணிக்குத் தகுதியானவர் என்று உடற் தகுதிச் சான்றினை (PHYSICAL FITNESS CERTIFICATE) உரிய படிவத்தில் வழங்கி இருக்கிறார். இது, தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிகளுக்கான பொது விதி 12 (a)(vi)(bb)ன் எதிர்பார்ப்பை நிறைவு செய்கிறது !

 

இஃதன்றி, தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிகளுக்கான பொது விதி 12 (a)(vi)(ii), பணியில் அமர்வு பெறும் குறிப்பிட்ட அலுவலருக்கு  ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் இருக்கலாகாது என்று கட்டுப்பாடு விதிக்கிறது. திரு.அழகரசனுக்கு அப்போது திருமணமே ஆகவில்லை என்பதால், இந்தக் கட்டுப்பாடு அவருக்குப் பொருந்தாது !

 

கருணையடிப்படையில் இளநிலை உதவியாளராகப் பணியமர்த்தம் செய்வதற்கு அனைத்துத் தகுதிகளும் இருந்த நிலையில் தான், அவர் உளுந்தூர்ப்பேட்டையில் பணியில் அமர்வு பெற்றார் !

 

தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிகளுக்கான பொதுவிதி எதிர்பார்க்கும் அனைத்துத் தகுதிகளையும் திரு.அழகரசன் நிறைவு செய்திருப்பதால், அவர் உளுந்தூர்ப்பேட்டையில் முதன்முதல் பணியில் சேர்ந்த நாளிலிருந்துதான் அவரது பணிகளை வரன்முறை செய்ய வேண்டும். மாறாக 18 அகவை நிறைவு நாளுக்கு முன்னதாக அவர் ஆற்றிய பணி சிறார் பணியாகும் (BOY SERVICE) என்று சொல்லி அக்காலத்தைக் கணக்கில் கொள்ளாமல் விட முயன்றது தவறு !

 

சிறார் பணி (BOY SERVICE) என்பது ஓய்வூதியம் தொடர்புடையது. அதைக்கொண்டு வந்து பணியமர்வு மற்றும் பணிவரன் முறைக்குப் பொருத்திப் பார்ப்பது தவறு. ஒரு அலுவலர் ஒரு குறிப்பிட்ட பணியிடத்தில் வரன்முறை நிலையில் பணியாற்ற அவர் தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிகளுக்கான பொதுவிதிகளின் தேவைகளை நிறைவு செய்கிறாரா என்பதைத் தான் பார்க்கவேண்டும்; ஓய்வூதிய விதிகளை இணைத்துப்  பார்க்கலாகாது. இந்தப் பார்வையில்தான் உளுந்தூர்ப்பேட்டை அலுவலகத்தில் தவறு நடந்திருக்கிறது !

 

(சிறார் பணிக்காலம் (BOY SERVICE)  பணி வரன்முறை செய்வதற்குக் கணக்கில் கொள்ளப் படக் கூடாது என்று தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிகளுக்கான பொதுவிதிகளில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை.)

 

ஒரு அலுவலரின் பணிவரன்முறை பற்றி ஆய்வு செய்ய வேண்டிய நேரத்தில்,  அவரது ஓய்வூதியத் தகுதி பற்றி ஏன் ஆய்வு செய்ய வேண்டும் ? இது தான் திரு அழகரசன் தொடர்பாக நான் எழுப்பிய வினா. என் கருத்துகளை 4 பக்கங்களில் திரு.அழகரசன் பெயரிலான விண்ணப்பமாக்கி, அவரிடம் கொடுத்து துணை இயக்குநார் / முதல்வர் திரு.ஷேக் அகமது அவர்களிடம் கொடுக்கச் செய்தேன் !

 

அவர் அதைப் படித்துவிட்டு, எந்த வழக்குரைஞரிடம் இதை எழுதி வாங்கினாய் என்று கேட்டிருக்கிறார். திரு.அழகரசன், விண்ணப்பத்தை எழுதித் தந்தது நான் தான் என்பதை சொல்லியிருக்கிறார். முதல்வர் மிகவும் மலைத்துப் போய்விட்டார் என்றும், மிகவலிமையான வாதங்களுடன் அமைந்திருக்கிறது என்றும் பாராட்டியதாக என்னிடம் வந்து சொன்னார் !

 

விண்ணப்பத்தின் மீது இயக்குநருக்கு அனுப்பப்பட்ட பரிந்துரை எப்படி இருந்திருக்கும் என்பதை நான் விவரிக்க வேண்டியதில்லை. விண்ணப்பம் சென்ற ஒரு மாத கால அளவில் திரு.அழகரசனின் பணிகளை அவர் பணியில் சேர்ந்த நாள் முதல் (அதாவது அகவை 17 முதல் என்பதாக நினைவு) வரன்முறை செய்து இயக்குநரிடமிருந்து உத்தரவு வந்தது !

 

இவ்வாறு அவரது பணிகள், அவர் பணியில் சேர்ந்த நாள் முதல் (அதாவது அகவை 18 நிறையும் முன்பேசிறார் பணிக் காலத்திலேயே) வரன்முறை செய்யப் பட்டதால் அவர் அடைந்த பலன்கள் பல. (01) அவர் பணியில் சேர்ந்த நாளும், பணி வரன்முறை செய்யப்பட்ட நாளும் ஒன்றாக இருப்பதால், அவரது ஆண்டு ஊதிய உயர்வுகள் எந்தக் காலத்திலும் தள்ளிப் போகவில்லை (02) ஊதியஉயர்வுகள் உரிய காலத்திலேயே கிடைத்துவிட்டதால், ஊதிய ஆணைக்குழுவின் பரிந்துரைப்படி ஊதிய நிரக்கு மாற்றப்படுகையில் அவரது அடிப்படை ஊதியம் வரையறை செய்ததில் இழப்பு ஏதும் ஏற்படாமல் பாதுகாப்புக் கிடைத்தது!

 

(03) இளநிலை உதவியாளர் பதவியில் அவர் பணியில் சேர்ந்த நாளைக் கணக்கிற் கொண்டே அவரது முன்மை (Seniority) வரையறை செய்யப்பட்டது. (04) சிறார் பணிக்காலம் (Boy Service) என்று சொல்லி 18 அகவை நிறைவுக்கு முற்பட்ட காலம் முழுவதையும் கணக்கிற் கொள்ளாமால் பணி வரன்முறை நாள் முடிவு செய்யப்பட்டிருந்தால், முன்மை நிலையில் இன்னும் பின்தங்கிப் போயிருப்பார் !

 

இதன்விளைவாக, அவர் உதவியாளர் பதவிக்கும், அலுவலக மேலாளர் பதவிக்கும் உயர்த்தப்பட்ட நாள் இன்னும் தள்ளிப்போயிருக்கும். நுழைவு நிலை (Entry Level Post) பதவியில் பணிவரன்முறைக் காலம் ஒரு ஆண்டு தள்ளிபோய் இருந்தால், அவர் சந்தித்திருக்கும் இழப்புகள் நினைத்துப் பார்க்கவியலாத விளைவுகளை ஏற்படுத்தி இருக்கும் !

 

திரு.அழகரசன்  சேலத்திற்கு இடமாற்றலாகி வந்தது அவருடைய நல்ல காலம் என்றே சொல்லலாம் ! திரு.தருமராசனின் பரிந்துரையும் என் உழைப்பும் திரு.அழகரசனுக்கு நன்மைகளைத் தேடித் தந்திருக்கின்றன !

 

நான் வெளியூர்களுக்கு மாற்றலாகிச் சென்ற போதும், பணி ஓய்வு பெற்ற பின்பும், என்னுடனான அவரது தொடர்பு, முறிவு (Break) இன்றித் தொடர்ந்திருக்குமேயானால், அவர் இப்போது அலுவலக மேலாளர் பதவிக்குப் பதில் ஆட்சி அலுவலராகப் பதவியில் இருந்திருக்க வாய்ப்பு உண்டு !

 

உதவியாளர் பதவி உயர்வுக்காகக் காத்திராமல் பண்டகக் காப்பாளராகவோ, கணக்கராகவோ பதவி உயர்வு பெறும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளச் சொல்லியிருப்பேன். ஆனால் என்னுடனான தொடர்பை அவர் முறிவு (BREAK) இல்லாமல் பாதுகாக்க இயலாததால், ஆட்சி அலுவலராக அமர்ந்திருக்க வேண்டிய நல்வாய்ப்பை அவர் இழந்திருக்கிறார் !

 

அலுவலக நிலையிலும் சரி, முகநூல் வழியிலும் சரி,  நாம்  பெறுகின்ற நட்பைப் பெரும்பாலான நண்பர்கள் போற்றிப் பாதுகாக்கத் தவறி விடுகின்றனர். இப்போது பணியாற்றிவரும் ஆட்சி அலுவலர்கள், அலுவலக மேலாளர்கள் போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்டோரிடம் எழினி மூலம் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லியிருக்கிறேன். முகநூலுக்கு வாருங்கள் நம் துய்ப்புகளை (அனுபவங்களை) பகிர்ந்து கொள்வோம் என்று அழைத்திருக்கிறேன் !

 

ஆனால் அவர்களுள் ஒரிருவரைத் தவிர  95% அலுவலர்கள் இன்றுவரை என்னுடன் தொடர்புகொண்டு பேசியதில்லை ! என்னுடைய முகநூல் பதிவுக்கு ஒரு விருப்பக் குறி ((LIKE) கூடத் தருவதில்லை ! கருத்துரையும் எழுதுவதில்லை !

 

முன்னோர்களை மதிக்க வேண்டும் என்னும் அடிப்படைப் பண்பாடு அவர்களிடம் இல்லாமற் போனது எனக்கு வியப்பாக இருக்கிறது. இப்படிப்பட்ட போக்கு தான் நட்பை முறித்துப் போட்டுவிடுகிறது. நண்பர்களும் பட்டறிவு மிக்க முன்னோர்களும் தான் தக்க நேரத்தின் உதவி செய்பவர்கள் என்னும் உண்மையை அவர்கள் எப்போது உணரப் போகிறார்களோ ?


--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”வேதரெத்தினம்” வலைப்பூ,

[தி.: 2052, நளி (கார்த்திகை) 26]

{12-12-2021}

--------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக