தேடுக !

புதன், 15 டிசம்பர், 2021

மலரும் நினைவுகள் (38) முதல்வர் அரங்கநாதனின் முத்தான முடிவு !

(1992-நிகழ்வுகள்) 

சேலத்தில் அலுவலக மேலாளராக நான்  பணியாற்றிவந்த காலத்தில் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநராக திரு.சண்முகம் என்பவர் பொறுப்பேற்றிருந்தார். 1990 அல்லது 1991 வாக்கில் அவர் பொறுப்பேற்றிருக்கலாம் என்பது என் நினைவு. கூட்டுறவுத் துறையில் இணைப் பதிவாளராகப் பணியாற்றி வந்த அவர் அரசினால் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி என்னும் தகுதி அளிக்கப்பட்டு (Confered I.A.S.) இயக்குநராகப் பொறுப்பேற்றிருந்தார் !

 

இவர், துறை ஆளுமையில் கவனம் செலுத்தாமல் ஊழல் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தி  அதில் மாபெரும் வல்லவராகத் திகழ்ந்தார்.. இளநிலைப் பயிற்சி அலுவலர், பணிமனை உதவியாளர் பணியமர்த்தங்கள்  (Appointment) அனைத்தும் பணத்தின் அடிப்படையிலே நடந்தன. மண்டலப் பயிற்சித் துணை இயக்குநர்கள் பணம் வாங்கித் தரும் முகவர்களாகச் செயல்படக் கட்டாயப்படுத்தப்பட்டனர் ! நேர்மையாகப் பணிபுரிந்த மண்டலப் பயிற்சித் துணை இயக்குநர்கள் எல்லாம் மனம் நொந்து போய் வேறு வழியின்றி அவருக்கு முகவர்களாக மாறிப்போயினர் !

 

இடமாற்றல்கள் பணத்தின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டன. திரு.சண்முகத்தின் ஆணைக்கு இணங்காதவர்கள் பழிவாங்கப்பட்டனர். தமிழகத்தில் களப்பிரர்களின் ஆட்சிக்காலம் ஒரு இருண்ட காலம் என்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படுவது போல திரு.சண்முகத்தின் ஆட்சிக்காலம் துறையின் இருண்ட காலமாக இருந்தது  என்பதில் அப்போது பணிபுரிந்த அலுவலர்கள் யாருக்கும் எள்ளளவும் ஐயமில்லை !

 

இத்தகைய இருண்டகாலத்தில் தான் சேலம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பணிமனை உதவியாளர் பணியிடங்கள் மூன்றினை நிரப்பவேண்டிய தேவை 1991 –ஆம் ஆண்டு இறுதி வாக்கில் எழுந்தது. திரு.தா.அரங்கநாதன் அவர்கள் துணை இயக்குநர் / முதல்வராகவும் திரு..முகமது கனி யூசூப் ஆட்சி அலுவலராகவும் பணியிலிருந்தனர். நான் பணியமைப்புப் பிரிவின் மேலாளர் !

 

திரு.சண்முகத்தின் கொடுங்கோலாட்சிக்குப் பயந்த முதல்வர் அவர்கள் பணிமனை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தார். மூன்று இடங்கள் வெட்புலமாகியதால், பணிமனை அலுவலர்கள் (Instructional Staff) உதவிக்கு ஆளில்லாமல் இன்னற்பட்டு வந்தனர். இந்த நிலையில் திரு.முகமது கனி யூசூப் ஆட்சி அலுவலர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். திரு அரங்கநாதன் அவர்கள் அடுத்த 30 நாளில் ஓய்வு பெறக்கூடிய நிலை !

 

ஏதோவொரு முடிவில், தகுதியான ஆட்களின் பட்டியலை அனுப்புமாறு கோரி வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு கடிதம் எழுதச் சொன்னார் முதல்வர். மூன்று பணியிடங்களுக்கும் இனவாரி சுழற்சியைக் குறிப்பிட்டுக் கடிதம் எழுதப்பட்டது. பத்து நாள் அளவில் வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குநரிடமிருந்து 30 –க்கும் மேற்பட்டோர் அடங்கிய பட்டியல் வந்து சேர்ந்தது.. அடுத்து நேர்முகத் தேர்வுக்கு நாள் குறிப்பிட்டு, பட்டியலில் உள்ள ஆளிநர் அழைக்கப்பட வேண்டும். எந்த நாளில் நேர்முகத் தேர்வை வைத்துக்கொள்ளலாம் என்பதை முடிவு செய்யும் பொருட்டு முதல்வர் திரு.அரங்கநாதன் அவர்கள் என்னை அழைத்துக் கருத்துக் கேட்டார் !

 

திரு.அரங்கநாதன் அவர்கள் நேர்மையின் வழியில் செல்ல விரும்புபவர். முற்  பிறவியில் என்ன பாவம் (தீவினை) செய்தேனோ, இப்பிறவியில் எனக்கு உடல்நலத்தில் குறைபாடு ஏற்பட்டுள்ளது; இப்பிறவியிலாவது எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும், நேர்மை தவறக் கூடாது என்று நினைக்கிறேன் என்று நெருக்கமானவர்களிடம் அவர் சொல்வது வழக்கம். பணம் வாங்கிக் கொண்டு பணியிடங்களை நிரப்பும் திரு.சண்முகத்திற்குத் துணை போக அவருக்கு விருப்பமில்லை ! நேர்முகத் தேர்வை நேர்மையாக நடத்த விரும்பினார் !

 

அந்த மாத இறுதி நாளில் அவர் பணியிலிருந்து ஓய்வுபெறவிருந்தார். 1992 மார்ச் 31 என்பதாக என் நினைவு. இத்தகைய ஒரு நேரத்தில் திரு.சண்முகத்தின் கொடும்பார்வைக்கு இலக்கு ஆகாமல் எப்படி நேர்முகத் தேர்வை நடத்தி மூவரைத் தேர்வு செய்வது என்று அவர் தயங்கினார். ஏனென்றால் யாரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதை திரு.சண்முகம், தொலைபேசி வாயிலாக நேரடியாகவோ அல்லது மண்டலப் பயிற்சித் துணை இயக்குநர் வழியாகவோ  சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் !

 

பணியிலிருந்து ஓய்வு பெறும் நாளில் நேர்காணலை வைத்துக்கொள்ளுங்கள், திரு.சண்முகத்தின் குறுக்கீட்டை முறியடிக்க இது உதவும்; மறுநாள் நீங்கள் ஓய்வு பெற்ற முதல்வர் ஆகிவிடுவீர்கள், பட்டியலைத் திருத்தச் சொல்வதோ, வேறு பட்டியல் கோரச் சொல்வதோ இயக்குநருக்கு இயலாமல் போய்விடும்; உங்களை அவர் விருப்பப்படி இயக்க முடியாது; உங்கள் மனசாட்சிப்படி மூவரை நீங்கள் தேர்வு செய்யலாம் என்று கருத்துச் சொன்னேன் !

 

என் கருத்தை ஏற்றுக்கொண்டு, அதன்படியே நேர்காணலுக்கான அழைப்பை அனுப்பச் சொன்னார். மாதத்தின் கடைசிநாள். 31-03-1992 என்று நினைக்கிறேன். முப்பதுக்கும் மேற்பட்டோர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். முதல்வர் அறைக்கு ஒவ்வொருவராக அழைக்கப்பெற்று, நேர்காணல் செய்யப்பெற்றனர். அவர் பணி ஓய்வு பெற்றதும் அவரது பணிகளைக் கூடுதலாகக் கவனித்துக்கொள்ள 3-ஆம் அணி துணை முதல்வர் திரு..இரத்தினம் இயக்குநரால் பணிக்கப்பட்டிருந்தார். அவரைக் கூட திரு.அரங்கநாதன் துணைக்கு அழைத்துக் கொள்ளாமல் நேர்காணலை நடத்தினார் !

 

இந்த இடத்தில் வேறொரு செய்தியை உங்களுக்குத் தெரிவித்தாக வேண்டும். முந்திய மாதம் பணி ஓய்வு பெற்ற ஆட்சி அலுவலர் திரு.முகமது கனி யூசூப் அவர்களின்  மகன் சிராஜ் முகமது என்பவரும் நேர்காணலுக்கு அழைக்கப் பட்டவர்களில் ஒருவர். அவர் வாய் பேசமுடியாத பிறவி ஊமை. அவரால் பேசமுடியாதே தவிர பிறர் பேசுவதைப்  புரிந்து கொள்ள முடிந்தது. அவரது செவிகள் கேட்கும் ஆற்றலை ஓரளவு இழந்துவிட்டனவேயன்றி முழுவதுமாக இழந்துவிடவில்லை. ஐதராபாத்தில் உள்ள உடற் குறைபாடு உள்ளோருக்கான ஒரு பயிற்சி நிலையத்தில் பொருத்துநர் பிரிவில் பயிற்சி பெற்று தேசியத் தொழிற் சான்று (NTC) பெற்றவர் !

 

பயிற்சி நிலைய அலுவலர் குடியிருப்பில் முதல்வர் வீட்டுக்கு அடுத்த வீட்டில் திரு.முகமது கனி யூசூப் வாழ்ந்து வந்தார். அவரது மகன் சிராஜ் முகமதுவும் தந்தையுடன் இருந்து வந்தார்.  ஒருநாள் திரு.முகமது கனி யூசூப்  என்னிடம் வந்து பணிமனை உதவியாளர் தேர்வில்  தன் மகனுக்கு வாய்ப்புக் கிடைக்க தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முதல்வரிடம் நீங்கள் பேசுங்கள்; தேவைப்படுகையில் நானும் சொல்கிறேன்; முன்னதாகவே சென்று நான் முதல்வரிடம் இதைப்பற்றிப் பேசுவது நன்றாக இராது என்று சொன்னேன் !

 

நான் சொல்லியபடியே திரு.முகமது கனி யூசூப் முதல்வர் வீட்டுக்குச் சென்று அவரிடம் பேசி, தன் மகனுக்கு ஒரு நல்ல வாழ்வை அமைத்துத் தர உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவர் மகனைப் பற்றிய எல்லா விவரங்களையும் கேட்டறிந்த முதல்வர், அவருக்கு உதவ வேண்டும் என்று  விருப்பம் கொண்டார். உடல் குறைபாடு உள்ள ஒருவருக்கு உதவுவதன் மூலம், தான் கொஞ்சமாவது புண்ணியம் ஈட்ட முடியும் என்று அவர் நம்பினார் !

 

நேர்காணலுக்கு ஒருநாள்  முன்னதாக என்னை அழைத்து, திரு.முகமது கனி யூசூப் அவர்களின் கோரிக்கை பற்றித் தெரிவித்து வாய் பேசமுடியாத ஒருவரைப் பணிமனை உதவியாளராகத் தேர்வு செய்ய முடியுமா என்று  கேட்டார். முடியும் என்று சொன்னேன். அவர் செய்யப்போவது பயிற்சியாளர்களுக்குப் பாடம் நடத்தும் வேலையன்று. பயிற்சிப் பிரிவு அலுவலர்களுக்கு உதவி செய்யும் வேலைதான். நேர்காணலின் போது இதை நீங்கள் கோப்பில் பதிவு செய்துவிட்டு, பணியமர்வு ஆணை வழங்கலாம். சட்டப்படி இதற்குத் தடை ஏதுமில்லை என்றேன் !

 

பதவி உயர்வு வாய்ப்பு வரும்போது, வாய் பேசமுடியாதவர் என்னும் சிக்கல் எழாதா என்று கேட்டார். அவருக்குப் பதவி உயர்வே தேவையில்லை; அவர் பதவி உயர்வு கேட்கவும் மாட்டார். பணிமனை உதவியாளர் பதவியின் வருமானத்தைக் கொண்டு அவரது வாழ்க்கையை ஓட்டிவிடுவார்; இப்போது அவருக்குத் தேவை வாழ்க்கை என்னும் வழுக்கு நிலத்தில் நடக்க ஒரு ஊன்று கோல், அவ்வளவு தான். அந்த ஊன்றுகோலை நீங்கள் அளிக்க விதிகள் எதுவும் தடையாக இல்லை என்றேன் !

 

அடுத்து மேலும் இரு இடங்கள் இருக்கின்றனவே அந்த இடங்களை நிரப்புவது பற்றி ஏதாவது நல்ல யோசனை (கருத்து) இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டார். தட்டச்சர் திருமதி ஆர்.பி.அன்னபூரணி அவர்கள்  என்னிடம் வந்து  ஒரு செய்தியைச் சொன்னார். ஜவஹர் என்ற ஒருவர் நேர்காணலுக்கு வருவதாகவும், மிகவும் ஏழைக்குடும்பம் என்றும் இது தான் அவருக்குக் கடைசி வாய்ப்பு என்றும் அரசுப் பணியில் அமர்வதற்கான அகவை உச்ச வரம்பினை அடுத்த மாதம் கடந்துவிடுவதாகவும் தெரிவித்து, அவருக்கு உதவி செய்ய முடியுமா என்று  கேட்டார். நான் உங்களிடம் கேட்கச் சொல்லி இருக்கிறேன் என்றேன் !

 

அத்துடன் நேர்காணலுக்கு அழைக்கப்பெற்ற அனைவரது பிறந்த நாளையும் (தேதி) ஆய்வு செய்தேன். தட்டச்சர் கூறியது உண்மைதான். திரு.ஜவஹர் என்பவரும், திரு.அங்குசாமி என்பவரும் அகவை உச்சவரம்பைக் கடக்கும் நிலையில் இருக்கின்றனர்; நீங்கள் விரும்பினால் அவர்களுக்கு உதவி செய்யலாம் என்று கூறினேன் !

 

ஆமாம் ! காலையில் திருமதி அன்னபூரணி என்னிடம் வந்து கேட்டார். பணி ஓய்வு பெறும் இந்த நேரத்தில் உடல் குறைபாடுள்ள ஒருவருக்கும், அகவை உச்ச வரம்பைக் கடக்கும் இருவருக்கும் வாய்ப்பளித்து புண்ணியத்தையாவது தேடிக்கொள்ளலாம். அடுத்த பிறவியிலாவது எனக்கு நல்ல கதி  கிடைக்கட்டும் என்று தனது மன ஏக்கத்தை வெளிப்படுத்தினார் !

 

தனது எண்ணங்களுக்கு இடைஞ்சலாக திரு.சண்முகம் வராமலிருக்க வேணடுமே என்பது தான் அப்போது அவரது கவலையாக இருந்தது !

 

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[தி.: 2052, நளி (கார்த்திகை) 29]

{15-12-2021}

------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக