தேடுக !

சனி, 26 பிப்ரவரி, 2022

மலரும் நினைவுகள் (57) அலுவலர்களின் ஓய்வூதியக் கருத்துரு அனுப்புதல் !

 (1997-ஆம் ஆண்டு நிகழ்வுகள்) 

பல்லாண்டுகளாக முயன்று நான் தொகுத்து வைத்திருந்த அரசாணைக் கோப்புகள் எனக்கு ஆனை (யானை) விலங்கினைப் போன்று போன்ற அளப்பரிய வலிவைக் கொடுத்தன. பணி ஓய்வு பெறும் அலுவலர்களுக்குக் கிடைக்க வேண்டிய ஓய்வூதியம் போன்ற பணப் பயன்களைத் துல்லியமாகக் கணக்கிட்டு  மாநிலக்கணக்காயருக்கு (ACCOUNTANT GENERAL, CHENNAI) கருத்துரு அனுப்புவதற்கு மிகவும் துணை புரிந்தன !

 

ஓசூர் தொழிற் பயிற்சி நிலைய  அலுவலகத்தில் சில திறமையான உதவியாளர்களும் இளநிலை உதவியாளர்களும் இருக்கவே செய்தனர். ஆனால் அவர்களுக்கு வழிகாட்டி அழைத்துச் செல்லத் தகுதி படைத்த அலுவலக மேலாளர்கள் ஒருவரும் அப்போது இல்லை. ஆட்சி அலுவலர் பணியிடத்தில் யாரையும் பொறுப்பில் அமர்த்தாமல் வெட்புலமாக வைக்கப் பெற்றிருந்தது !

 

திருவாளர்கள் பஞ்சநதன், நடேசன், லலிதா, வசந்தா, ஜெயம், கோபால கிருஷ்ணன் ஆகியோர் உதவியாளர்கள். வஹிதா ரகுமான், தேவி, பிரசன்னையா, ஆகியோர் இளநிலை உதவியாளர்கள். திரு.கதிர்வேலு கணக்கர்; திரு.இரவிச்சந்திரன் பண்டகக் காப்பாளர். திருமதி வசந்தா, தொழில்நுட்ப அலுவலர் பணியமைப்பையும், திரு.நடேசன், தொழில் நுட்பம் சாரா அலுவலர்கள் பணியமைப்பையும் கவனித்து வந்தனர் !

 

இருவருமே திறமையான அலுவலர்கள் என்றாலும், வழிகாட்டி அழைத்துச் செல்ல, பொறுப்பான அலுவலக மேலாளர்கள் அப்போது இல்லை. இந்நிலை மூன்றாம் பிறை நிலவொளியை நம்பிக் காட்டில் பயணம் செய்வதற்கு ஒப்பாக அவர்களைத் தடுமாற வைத்தது ! ஆட்சி அலுவலராக நான் பொறுப்பு ஏற்றதும் ஒருசில அலுவலர்களுக்கு ஓய்வூதியக் கருத்துரு அனுப்பவேண்டி இருந்தது. திருமதி வசந்தாவும், திரு.நடேசனும் ஓய்வூதியக் கருத்துரு கோப்பு ஒவ்வொன்றை என் பார்வைக்கு அனுப்பியிருந்தனர் !

 

அவர்கள் அனுப்பியிருந்த கருத்துருவில் 60% அளவுக்குச் சரியாக இருந்தது. எஞ்சிய 40% பிழையாக அமைந்திருந்தது. பிழைகளை நீக்கி, திருந்திய வடிவில் கருத்துருவைச் சீரமைத்தேன். அவர்கள் இருவரையும் அழைத்து, தகுதியுள்ள பணிக்காலம் கணக்கீடு, ஓய்வூதியம் கணக்கீடு, பணிக்கொடை கணக்கீடு ஆகியவற்றில் அவர்கள் செய்திருந்த பிழைகளை எடுத்துச் சொல்லி, திருத்தி அமைக்கப் பெற்ற  ஓய்வூதியத் தொகை, திருத்தி அமைக்கப் பெற்ற பணிக்கொடைத் தொகை ஆகியவற்றுக்கான காரணத்தையும் எந்த அரசாணைகளின் அடிப்படையில் அவ்வாறு திருத்தியமைத்தேன் என்பதையும்  எடுத்துச் சொன்னேன் !

 

எங்களுக்கு இவ்வாறு எடுத்துரைக்கவும், உரிய வழிகாட்டவும் யாருமில்லை. அலுவலக மேலாளர்கள் இருவரும் எங்களுக்கு உதவக் கூடியவர்களாகவும் இல்லை. ஏதோ எங்களுக்குத்  தெரிந்த அளவில் இதுவரைக் கருத்துருக்களை அனுப்பி வந்தோம். மாநிலக் கணக்காயர் அலுவலகத்திலிருந்து ஒப்பளிப்பு ஆணை வரும்போது பார்த்தால் கருத்துருவின் தொகையிலிருந்து  மாறி வேறு தொகை குறிப்பிடப்பட்டு இருக்கும். இனி எங்களுக்கு வழிகாட்ட நீங்கள் இருக்கிறீர்கள் !

 

நாங்கள் உங்களிடமிருந்து நிறையக் கற்றுக்கொள்ள விரும்புகிறோம். நாங்கள்  தவறு செய்யும் போது  சுட்டிக்காட்டி எங்களைத் திருத்துங்கள். அடுத்தடுத்த மேற்பதவிகளுக்கு நாங்கள் உயர்வடையும்  போது, முழுமையான திறமை படைத்த அலுவலர்களாகத் திகழவேண்டும். அதற்கு உங்கள் ஆதரவை எங்களுக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டர் !

 

இவர்களுள் திரு நடேசன், பதவி உயர்வைத் துறந்ததால், உதவியாளராகவே பணியிலிருந்து ஓய்வு பெற்றார். திருமதி.வசந்தா, அலுவலக மேலாளர், ஆட்சி அலுவலர் இரண்டு நிலைகளுக்கும் உயர்ந்து பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இன்றும் கூட அவர்கள் இருவரும் என்னைச் சந்திக்கும் போது, “நீங்கள் ஆட்சி அலுவலராகப் பொறுப்பிலிருந்த காலம் எங்களுக்குப் பொற்காலமாக இருந்தது. உங்கள் பணி ஓய்வுக்குப் பிறகு ஓசூர் அலுவலகத்தில் நிலைமையே முற்றிலும் மாறிவிட்டதுஎன்று தங்கள் மன வருத்தத்தைத் தெரிவிக்கத் தவறுவதில்லை !

 

ஓய்வூதியத்தில் 40% வரை விட்டுக்கொடுத்துவிட்டு, அதற்கு ஈடாக உரிய தொகையைத் தொகுத்துப் பெறலாம் என்னும் அரசாணை 1998-ஆம் ஆண்டு வந்ததாக எனக்கு நினைவு. இதை அறியாத ஓய்வு பெறும் நிலையிலுள்ள அலுவலர்கள் ஓய்வூதியத்தில் 1/3 பங்கு விட்டுக் கொடுத்துவிட்டு உரிய தொகையைத் தொகுத்துப் பெற விருப்பம் தெரிவிப்பதைக் கண்ணுற்றேன் !

 

பணி ஓய்வுக்குப் பின் அவர்கள் பெறவிருக்கும் ஓய்வூதியத் தொகை எவ்வளவு, பணிக்கொடைத் தொகை எவ்வளவு என்பதைக் கணக்கிட்டு, அவர்களை அழைத்துத் தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அத்துடன் 33% ஓய்வூதியத்தை விட்டுக்கொடுப்பதால் எவ்வளவு தொகை கிடைக்கும், அதற்கு மாறாக 40% விட்டுக்கொடுத்தால் எவ்வளவு கிடைக்கும் என்பதையும் அவர்களிடம் தெரிவித்து, அவர்கள் தந்த விண்ணப்பத்தில், தேவைப்பட்டால் திருத்தம் செய்யச் சொல்வேன் !

 

இறுதியாக, அவர்களுக்குத் தகுதியுள்ள ஓய்வூதியத் தொகை (ELIGIBLE MONTHLY PENSION), கிடைக்கவுள்ள பணிக்கொடைத் தொகை (GRATUITY), கிடைக்கவுள்ள ஓய்வூதியம் தொகுத்துப் பெறுகை (COMMUTATION) தொகை, தொகுத்துப் பெற்ற பின் மாதாமாதம் கிடைக்கவுள்ள எஞ்சிய ஓய்வூதியம் (REDUCED PENSION) ஆகியவற்றை ஒரு தாளில் எழுதி அவர்களிடம் கொடுப்பேன் !

 

ஓய்வு பெற்ற பின் கிடைக்கும் தொகை எத்தனை இலட்சம் என்பதைக்  கணக்கிட்டு நான்  சீட்டில் எழுதிக் கொடுத்து விடுவதால், அவர்கள் தங்கள் மகள் / மகன் திருமணம், புதிய வீடு கட்டுதல் போன்ற செலவுகளுக்கு முன்னதாகவே திட்டமிட முடிந்தது. எந்தச் செலவுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கலாம் என்பதை அவர்கள் தம் மனைவி மக்களுடன் கலந்துபேசி முடிவு செய்ய முடிந்தது!

 

நான் கொடுக்கும் சீட்டினைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பணம் கிடைக்கும் போது இந்தச் சீட்டிலுள்ள  தொகையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். 100% சரியாக இருக்கும் என்பது என் நம்பிக்கை. சென்று வாருங்கள், நல்வாழ்த்துகள், என்று சொல்லி அவர்களை தம் இருக்கைக்குத்  அனுப்பி வைப்பேன். என் நடவடிக்கைகள் அலுவலர்கள் இடையே பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், என் மீது  அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் பலமடங்கு உயர்த்தியது !

 

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின். (குறள்.666)

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

வேதரெத்தினம்வலைப்பூ,

[தி.ஆ: 2053, கும்பம் (மாசி) 17]

{01-03-2022}

------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக