தேடுக !

சனி, 26 பிப்ரவரி, 2022

மலரும் நினைவுகள் (58) மேலாளருக்குத் தந்த சிறப்பு இசைவு !

 (1998 -ஆம் ஆண்டு நிகழ்வுகள்) 

பட்டியல்களைக்  கருவூலத்திற்கு அனுப்புகின்றபோது, பட்டியல் எண், நிகரத் தொகை ஆகியவற்றை, என்னிடமிருந்த  தனிப்பதிவேடு ஒன்றில் குறித்து வைத்துக் கொள்வது  வழக்கம். பட்டியல் ஏற்கப்பட்டுக் காசாகி வரும்போது, காசான நாளை என் பதிவேட்டில்  குறிப்பிட்டு, அந்தப் பட்டியலுக்குரிய தொடர் எண்ணைச் சுழித்துவிடுவேன் !

 

மாலையில்  கணக்குப் பதிவுகளைச் சரிபார்க்கையில், என்னிடம் இருக்கும்   தனிப் பதிவேட்டின் குறிப்புகளின்படி, காசாக்கப் பெற்ற  அனைத்துத் தொகையும் பெறுபணப் பதிவேட்டில் (U.D.P.R) விடுபடல் இல்லாமல்  கொண்டுவரப் பட்டுள்ளனவா என்பதை ஒப்பிட்டுச் சரிபார்க்க என் பதிவேடு உதவியது !

 

சிலநேரங்களில் கருவூலச் சுவடி (T.N.T.C.70)  இல்லாமலேயே கணக்கு எழுத வேண்டிய சூழ்நிலை, கணக்கருக்கு ஏற்படும். அதுபோன்ற நேர்வுகளில் காசாக்கப்பட்ட ஒரு பட்டியல் தொகையைக் கணக்கில் கொண்டுவராமல் தவறுதலாக கணக்கர் விட்டிருந்தால், ஆய்வின்போது அது என் கவனத்துக்கு உறுதியாக வந்துவிடும். இதன்மூலம் அப்போதே தவறு களையப்படும் வாய்ப்பு கிடைத்துவிடுகிறது !

 

அரசின் கருவூலத்திலிருந்து தேவைப்படும் பணத்தைப் பட்டியல் மூலம் எடுத்துக்கொள்ள ஆட்சி அலுவலருக்கு அரசு உரிமை வழங்கி இருக்கிறது. எடுக்கப்படும் பணத்திற்கு உரிய கணக்கினை முறையாகப் பேணி வர வேண்டியதும் அவரின் கடமை !


இந்தக் கடமையை நிறைவேற்றுவதில் தவறு நிகழ்ந்தால், அதற்கு அவரே பொறுப்பு என்பதை ஆட்சி அலுவலர்கள் உணரவேண்டும் ! கணக்கர் மீதோ, அலுவலக மேலாளர் மீதோ பழியைப் போட்டுவிட்டுத் தப்பிக்க முயலக் கூடாது !

 

சில அலுவலர்களுக்குக் கதுமென (திடீரென) பணமுடை ஏற்படும். அப்பொழுது அவர்கள் நம்புவது தமது வைப்புநிதியைத் தான். தனது வைப்பு நிதியிலிருந்து  அன்னிலை முன்பணம் (TEMPORARY ADVANCE) – அதாவது கடன் - கோரி சில அலுவலர்கள் விண்ணப்பம் எழுதி வந்து முதல்வரிடம் தருவார்கள் !


முதல்வர் அதில் சுருக்கொப்பம் இட்டதும் அதை எடுத்து வந்து என்னிடம் தந்து, ஒரு செலவுக்குப் பணம் தேவைப்படுகிறது, பணம் இன்றே கிடைத்தால் மிகவும் நலமாக இருக்கும் என்று கோரிக்கை வைப்பதுண்டு !

 

இப்படிப்பட்ட நேர்வுகளில், கணக்குப் பிரிவு உதவியாளரையும் கணக்கரையும் அழைத்துக் கலந்துரையாடுவேன். இவருக்கு  உடனடியாகப் பணம் தேவைப்படுவதாகத் தெரிவிக்கிறார்,  ஆகையால், நம்மாலான  உதவியைச்  செய்வோம் என்று தெரிவித்துவிட்டு, விண்ணப்பத்தைச் சரிபாருங்கள் !


அவர் கோரும் தொகையை வழங்கிடத் தகுதி இருந்தால் வைப்புநிதி முன்பணம் ஒப்பளிப்பு ஆணையை  1 + 2 தட்டச்சு செய்து வாருங்கள் என்று கணக்குப் பிரிவு உதவியாளரிடம் சொல்வேன். தொகை விவரத்தையும்  ஒப்பளிப்பு ஆணை எண்ணையும் முன்னதாகவே கணக்கரிடம் தெரிவிக்கச் சொல்வேன் !,

 

அடுத்து, கணக்கரிடம், பட்டியல் தயாரித்து வரச் சொல்வேன். அனைத்தும் அடுத்த அரைமணி நேரத்தில் நிறைவேறும். கருவூலத்திற்கு அன்றே பட்டியல் அனுப்பப்படும். குறிப்பிட்ட அலுவலர், கருவூலத்திற்குச் சென்று, அங்குள்ள அலுவலர்களிடம் பேசி, பட்டியலை அனுமதிக்க ஏற்பாடு செய்வார். அவ்வளவு தான் !  அளகையிலிருந்து (BANK) அன்றே பணம் பெறப்பட்டு, அவருக்குப் பட்டுவாடா செய்யப்பட்டுவிடும் !

 

இத்தகைய அணுகுமுறையால் அனைத்து அலுவலர்களும் என்னிடம் இணக்கமான முறையில் பழகத் தொடங்கினர். அலுவலர்களுக்குச் சேரவேண்டிய பணப்பயன் தொடர்பான எந்தக் கோரிக்கையும், அலுவலகத்தில் நிலுவையில் இல்லை என்னும் நிலையை உருவாக்கினேன் !


நான் சொந்தமாக உருவாக்கி வைத்திருந்த 15 தொகுதி அரசாணைக் கோப்புகள், அலுவலர்களின் பணிசார்ந்த நலன்களுக்கு மிகவும் உதவியாக அமைந்தன. அலுவலர்கள் பணிவிதிகள் (SERVICE MSTTERS) தொடர்பான ஐயங்களுக்கு என்னை அணுகித் தெளிவு பெறத் தயக்கமின்றி முன்வந்தனர்!

 

சுருங்கச் சொன்னால், என்மீது குறைசொல்லும் வாய்ப்பே எந்த அலுவலருக்கும் இல்லை என்னும் நிலையே ஓசூர் பயிற்சி நிலையத்தில் நிலவியது. இந்தச் சூழ்நிலையில் அலுவலக மேலாளர் ஒருவர் இயக்கக நண்பர்கள் பலரிடமும் என் மீது குறை சொல்கின்ற நேர்வு ஏற்பட்டது !


அவர் சென்னையைச் சேர்ந்தவர். பெயர் R.நடராசன். (வேட்டி நடராசன் அல்லர்)  இயக்ககத்தில் தணிக்கைப் பிரிவிலும் பணியற்றியவர். பதவி உயர்வில் அலுவலக மேலாளராக ஓசூரில் பணியமர்வு செய்யப்பட்டவர் !

 

திங்கட்கிழமை காலையில் சென்னையிலிருந்து புறப்பட்டு ஓசூர் வருவார். வெள்ளிக்கிழமை மாலை சென்னைக்குச் செல்வார். அவர் என்னிடம் வந்து தனது நிலையைச் சொல்லி, திங்களன்று காலையிலும், வெள்ளியன்று மாலையிலும் நேரத் தளர்வு கேட்டார் !

 

சென்னையில் அவர் வீடு எங்கிருக்கிறது, வீட்டிலிருந்து எத்தனை மணிக்குப் புறப்படுகிறார், பயண நேரம் எவ்வளவு, என்பதையெல்லாம் கேட்டறிந்த பிறகு, நேரத் தளர்வு எந்த அளவுக்குத் தேவை என்று கேட்டேன் !


அரைநாள் அளவுக்குத் தேவைப்படும் என்று கூறினார். வாரத்தில் இரண்டு அரைநாள் தளர்வு தந்தால், அதை ஈடு செய்ய தணிக்கைக் கோப்புகளில் கவனம் செலுத்தி சீரறிக்கைத் தயாரிக்க முடியுமா என்று கேட்டேன். சரி என்று ஒப்புக்கொண்டார் !

 

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மதியம்  1-00 மணிக்கு அலுவலகம் வருவதற்கும், வெள்ளிக்கிழமை பிற்பகல் 2-00 மணிக்கு அலுவலகத்திலிருந்து புறப்பட்டுச் செல்வதற்கும் அவருக்குச் சிறப்பு இசைவு அளித்தேன். இன்னொரு மேலாளரிடம் சொல்லி, திங்கட் கிழமை மட்டும் மதியம் 1-00 மணிக்கு வருகைப்பதிவை முடித்திட நெறியுரை தந்தேன் !

 

சில வாரங்கள் என் சிறப்பு இசைவை முறையாகப் பின்பற்றிய அவர், பின்னர் எனக்குத் தெரியாமல் அதை உடைக்க முற்பட்டார். ஒரு குறிப்பிட்ட வெள்ளிக்கிழமை காலை 10-30 மணியளவில், அலுவலக உதவியாளரை அழைத்து அலுவலக மேலாளர் திரு.நடராசனை வரசொல் என்று பணித்தேன் !


அவர் வரவில்லை. திரும்பவும் அலுவலக உதவியளரை அழைத்து மேலாளரை வரச் சொல்லிச் சொன்னேனே, அவரிடம் சொல்லவில்லையா, என்று கேட்டேன் !

 

அலுவலக உதவியாளர் தயங்கித் தயங்கி, அவர் காலை 10-00 மணிக்கெல்லாம்  புறப்பட்டுச் சென்னைக்குச் சென்றுவிட்டதாகக் கூறினார். நான் 9-45 மணியளவில் அலுவலகம் வந்திருக்கும் சூழ்நிலையில், என்னிடம் சொல்லாமல் 10-00 மணிக்கு எப்படிச் சென்றிருக்க முடியும் என்று எண்ணினேன் ! 


இன்னொரு மேலாளரை அழைத்து விவரம் கேட்கையில் அவர் செய்தியை உறுதிப்படுத்தினார். வருகைப்பதிவேட்டில் அவர் சுருக்கொப்பம் இட்டுவிட்டு, என்னிடமும் சொல்லாமல் சென்னை சென்றுவிட்டது உறுதியானது !

 

தவிர்க்கவியலாப் பணியின் நிமித்தம் சென்னை செல்ல வேண்டியிருந்தால் விடுப்பு விண்ணப்பம் தந்துவிட்டுச் சென்றிருக்கலாம். அல்லது நான் இசைவளித்திருந்தபடி பிற்பகல் 2-00 மணிக்கு என்னிடம் வந்து சொல்லிவிட்டுச் சென்றிருக்கலாம். இரண்டையும் தவிர்த்துவிட்டு, வருகைப் பதிவேட்டில் சுருக்கொப்பம் இட்டுவிட்டு, 10-00 மணிக்கெல்லாம் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றது என்னை ஏமாற்றும் செயலாக உணர்ந்தேன் !


வருகைப் பதிவேட்டை வரவழைத்து  அவர் இட்டிருந்த சுருக்கொப்பத்தைப் பச்சை மையினால் சுழித்துவிட்டுஎன்ற குறிப்பை அதனருகில் எழுதினேன் !

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

வேதரெத்தினம்வலைப்பூ,

[தி.ஆ: 2053, கும்பம் (மாசி) 12]

{24-02-2022}

------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக