(1996 -ஆம் ஆண்டு நிகழ்வுகள்)
சென்னை நகரம் கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 7 மீட்டர் உயரத்தில் இருக்கிறது என்றால் ஓசூர் 879 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து உயரம் கூடக் கூட வானிலையிலும் பெரும் மாற்றம் ஏற்படும். கோடைக்காலத்தில் வெப்பம் குறைவாகவும், குளிர்காலத்தில் குளிர் மிகக் கடுமையாகவும் இருக்கும் !
நான் ஆட்சி அலுவலராக ஓசூரில் பொறுப்பு ஏற்றுக்கொண்டது 1996 –ஆம் ஆண்டு நவம்பர்
மாதம் 27 –ஆம் நாள். ஓசூரில் நவம்பர்.
டிசம்பர், சனவரி, பிப்ரவரி
ஆகிய நான்கு மாதங்களில் குளிர் அதிகமாக இருக்கும். பொறுப்பு ஏற்றுக்கொண்ட
அன்று, என் அறையில் அமர்ந்து பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.
மின் விசிறி மெல்ல ஓடிக்கொண்டிருந்தது !
நண்பகல் 12-00 மணி இருக்கும். பனிப்புயல்
வந்து தாக்கியது போலக் கதுமென (திடீரென) ஒரு குளிர் அலை என்னை வந்து தாக்கியது. குளிர்க் காய்ச்சல்
வந்தால் எப்படி உடல் நடுங்குமோ அப்படி ஒரு கடுமையான நடுக்கத்தில் சிக்கிக்கொண்டேன்.
என் அறையிலிருந்து ஓடிப் போய் மேல் தளத்தில் துச்சிலில் (GUEST
ROOM) வைத்திருந்த குளிர் காப்புச் சட்டையை எடுத்து அணிந்து கொள்வதற்குள்
குளிரில் ஆடிப்போய்விட்டேன் !
1996 –ஆம் ஆண்டிலிருந்து பின்னோக்கிப்
பாருங்கள். 1965 - 66 காலப் பகுதிகளில் ஆண்டின் 12 மாதங்களும் குளிர் தான். தொழிற் பயிற்சி நிலையத்தில்
கனற்புச் சட்டி (FIRE POT) இல்லாமல் எந்த அலுவலரும் பணி செய்ய
முடியாது ! வேலை வாய்ப்புப் பயிற்சித் துறையில் எந்த அலுவலரையாவது
ஒறுக்க (தண்டிக்க) வேண்டும் என்று இணை இயக்குநரோ,
இயக்குநரோ எண்ணினால் அவர்களை ஓசூருக்கு மாற்றுவது என்பது வழக்கத்தில்
இருந்து வந்தது !
ஆனால், நான் பணிப்பொறுப்பு ஏற்ற 1996 –ஆம் ஆண்டு நிலவிய வானிலை இப்போது மிகவும் மாறிவிட்டது – காரணம் புதிய பல தொழில் நிறுவனங்கள் (INDUSTRIES) வருகையும், குடியிருப்புக் கட்டடங்கள் வளர்ச்சியும், ஊர்திகளின் எண்ணிக்கைப் பெருக்கமும், மக்கள் தொகைப் பெருக்கமும் !
ஓசூரில் என் பணிகளை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை முன்னதாகவே முடிவு செய்து வைத்திருந்தேன். பொறுப்பேற்ற முதல் நாள், பிற்பகலில் அமைச்சுப் பணியாளர்களில் முகாமையான (முக்கியமான) சிலரை அழைத்து, அலுவலகத்தில் சிறு தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னேன். அதற்கான செலவுத் தொகையையும் அவர்களிடம் முன்னதாகவே தந்தேன். முதல்வரை இந்தக் கூட்டத்திற்கு நான் அழைக்கவில்லை !
பிற்பகல் 03-00 மணி வாக்கில் கூட்டம்
தொடங்கியது. முதலில் என்னை நானே அறிமுகப் படுத்திக் கொண்ட பின்,
அமைச்சுப் பணியாளர்களை ஒவ்வொருவராக எழுந்து அறிமுகப் படுத்திக் கொள்ளச்
சொன்னேன். அறிமுகப் படலம் முடிந்ததும், தேநீர் விருந்து. அடுத்து நான் பேசத் தொடங்கினேன்
!
காலை 10-00 மணிக்கு அனைத்து அலுவலர்களும் தங்கள் இருக்கையில்
கட்டாயம் இருக்க வேண்டும் என்பதை எடுத்துரைத்தேன். அலுவலகத்திற்கு
வந்த பிறகு சொந்த வேலையாக யாராவது வெளியில் செல்ல வேண்டுமென்றால் என்னிடம் சொல்லிவிட்டுச்
செல்லலாம். அதற்கு விண்ணப்பம் எதுவும் தரவேண்டியதில்லை என்பதையும்
சொன்னேன். அலுவலகத்தில் அமைதியும் ஒழுங்கும் நிலவ வேண்டும்.
அலுவலர் நலன், மாணவர் நலன், பொது மக்கள் நலன் சார்ந்த செயல்களில் காலத்தாழ்வு இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்பதை எடுத்துரைத்தேன் !
அடுத்து, நீங்கள் சொல்ல வேண்டிய கருத்து எதுவும் இருந்தால்
சொல்லுங்கள் என்றேன். பயிற்சி நிலையம் வழியாகச் செல்லும் நகரப்
பேருந்து காலை 10-20 மணி வாக்கில் தான் வருகிறது. ஆகையால் அதில் வருகின்ற பெண்பால் அலுவலர்களுக்கு நேரத் தளர்வு தரவேண்டும் என்றனர்.
சரி ! பெண்பால் அலுவலர்களைத் தவிர ஏனையோர் 10-00 மணிக்கு வந்துவிடுங்கள்.
மகளிர் மட்டும் நகரப் பேருந்தில் வரட்டும். அவர்கள்
வந்த பின் வருகைப் பதிவேட்டை முடித்து எனக்கு அனுப்புங்கள் என்று அலுவலக மேலாளருக்கு நெறியுரை தந்தேன்
!
அதுபோல் மாலை நேரத்திலும், நகரப் பேருந்து,
அலுவலகம் மூடப்படுவதற்கு அரைமணி நேரம் முன்னதாகவே வந்துவிடுவதால்,
மாலையிலும் நேரத் தளர்வு தந்தால் வசதியாக இருக்கும் என்றனர்.
ஒவ்வொரு நாளும் குறைந்தது 15 கோப்புகளிலாவது நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்னும் கட்டுப்பாட்டை விதித்து அவர்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டேன்
!
இவ்வாறு முன்னதாகச் செல்வோர் என்னிடம் வந்து
சொல்லிவிட்டுச் செல்லுங்கள் என்று இசைவு தந்தேன். பிற அலுவலர்களைப் பொறுத்த வரையில் எப்போதாவது மாலையில் முன்னதாகச் செல்ல வேண்டியிருந்தால்,
புறப்படுவதற்கு முன்பு என்னிடம் வந்து வாய்மொழி இசைவு பெற்று அதன் பின்
செல்லுங்கள். இதற்கு
விண்ணப்பம் எதுவும் தரவேண்டியதில்லை என்பதையும் தெரிவித்தேன் !
அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி ! அமைச்சுப் பணியாளர் சங்கத்தின்
ஓசூர் கிளையின் தலைவர்,
செயலாளர் யார் என்று கேட்டேன். சங்கம் இங்கு செயல்படவில்லை
என்றனர். மீண்டும் அதற்கு உயிரூட்டுங்கள் என்று சொன்னேன்.
தன் பதிவேடு ஆய்வைப் பொறுத்த அளவில் குறிப்பிட்ட நாளில் ஆய்வுக்கு வைத்திடுங்கள்;
அதில் தளர்வு தர இயலாது என்று தெரிவித்தேன் !
கணக்கரைப் பொறுத்த அளவில், கணக்கினை அன்றாடம் 04-00
மணிக்கு முடித்து, பதிவேடுகளை என் மேசைக்கு அனுப்பிட
வேண்டும். சம்பள நாள் தவிர பிற நாள்களில் இதில் தளர்வு கிடைக்காது
என்பதையும் தெரிவித்தேன். கணக்கர் வரவு செலவுக் கணக்கினை 04-00
மணிக்கு முடிப்பதற்கு வசதியாக, சம்பள நாள் தவிர
பிற நாள்களில் வரவு செலவுகள் அனைத்தும் பிற்பகல் 03-00 மணியுடன் முடிக்கப்படும் என்பதைத்
தெரிவித்து அலுவலர்களுக்குச் சுற்றறிக்கை நாளை அனுப்பப்படும் என்று தெரிவித்து,
அதையும் நிறைவேற்றினேன் !
காட்வின் (எ) கோவிந்தன் என்னும் பெயருடைய அலுவலக உதவியாளர்
ஒருவர் அன்றாடம் பெங்களூரிலிருந்து இருப்பூர்தியில் (TRAIN) ஓசூர் வந்துகொண்டிருந்தார். அவர் மனைவி பெங்களூரில் செவிலியராகப்
பணியில் இருந்தார். அவர் வரும் இருப்பூர்தி காலையில் ஓசூருக்கு
08-00 மணிக்கு வந்து சேரும். மாலையில் 04-00
மணிக்குப் புறப்பட்டுப் பெங்களூர் செல்லும். காலையில்
08-30 அளவில், தான் அலுவலகத்திற்கு வந்துவிடுவதால்,
மாலையில் முன்னதாக அலுவலகத்திலிருந்து செல்ல தனக்கு உதவ வேண்டும் என்று
கேட்டுக்கொண்டார் !
காலை 08-30 மணிக்கு அலுவலகம் வருவதால், முடிவுற்ற கோப்புகளைத் தைத்தல், கடிதங்கள் அனுப்பும்
உறை தயாரித்தல், துப்புரவுப் பணியாளரை அழைத்து அலுவலகத்தைத் துப்புரவு
செய்தல், குடிநீர் பிடித்து வைத்தல், அலுவலர்களின்
மேசை, நாற்காலிகளைத் துடைத்துத் தூய்மைப்படுத்தல் ஆகிய பணிகளைக்
காலையில் செய்திடுமாறு அவரைப் பணித்தேன். மாலையில் 03-30
மணிக்கு என்னிடம் வந்து சொல்லிவிட்டு நகரப் பேருந்து மூலம் இருப்பூர்தி
நிலையம் செல்லலாம் என்று அவருக்கு இசைவு அளித்தேன் !
புதிய ஆட்சி அலுவல, அலுவலர்களின் நலனில் அக்கறை
கொண்டவராக, அவர்களிடம் இணக்கமுள்ளவராக, அதே சமயத்தில் பணிகளில் கண்டிப்புக் காட்டுபவராக இருக்கிறார் என்னும் கருத்து
அலுவலகப் பணியாளர்களில் மனத்தில் பதிவாகியது ! இது நான் கடந்து
செல்ல வேண்டிய பாதையை நேர்த்தியாக்கியது !
------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”வேதரெத்தினம்” வலைப்பூ,
[தி.ஆ: 2053, கும்பம் (மாசி) 09]
{21-02-2022}
-------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக