(1996 -ஆம் ஆண்டு நிகழ்வுகள்)
பள்ளிப்பருவத்தில், சில நேரங்களில் சான்றொப்பம் (ATTESTATION) பெறுவதற்கு இன்னல்கள் பட்டிருக்கிறேன். படிப்பு முடிந்த பிறகு பணி
தேடும் பருவத்தில் கல்விச் சான்றுகளிலும், விண்ணப்பங்களிலும் சான்றொப்பம் பெறுவதற்கும் நிரம்ப
இன்னல்கள் பட்டிருக்கிறேன். அரசு மருத்துவர் போன்ற அதிகாரிகளிடம் சான்றொப்பத்திற்குப்
பணம் தரவேண்டிய நிலையையும் சந்தித்திருக்கிறேன். சான்றொப்பம் பெறுவதற்காக சில
அலுவலக வாயிற்படிகளில் கால் கடுக்கக் காத்திருக்கவும் நேர்ந்திருக்கிறது !
ஆட்சி அலுவலராக நான் ஓசூரில் பொறுப்பு ஏற்றுக்கொண்ட பின்பு, ஒரு இளைஞருக்குக் கல்விச் சான்றுகளில் சான்றொப்பம் இட்டுத் தருகையில் என் இளமைக் கால துய்ப்புகள் (அனுபவங்கள்) என் கண்கள் முன் காட்சிகளாக விரியத் தொடங்கின. அன்று நான் பட்ட துன்பங்கள் இனி யாருக்கும் நேரக் கூடாது என்று என் மனதின் குரல் என் காதுகளில் ஒலித்தது !
அலுவலக உதவியாளர்கள் மூவரையும் அழைத்து அவர்களுக்கு ஒரு நெறியுரை தந்தேன். ”சான்றொப்பம் என்று யார் வந்து நின்றாலும், எத்தனைச் சான்றுகளில் கையொப்பம் இடவேண்டி இருந்தாலும், நான் என்ன பணியில் ஈடுபட்டிருந்தாலும், வந்திருப்பவர்களைக் காக்க வைக்காமல் என்னிடம் அழைத்து வரவேண்டும். நான் சான்றொப்பம் இட்டுத் தரும் சான்றுகளில் “ஆட்சி அலுவலர்” என்னும் பயினச்சு (RUBBER STAMP) முத்திரையைப் பதித்து அவர்களிடம் தந்திட வேண்டும்“ இதுவே நான் தந்த நெறியுரை !
சான்றொப்பம் பெற்றுச் செல்பவர்கள், தங்களுக்கு வேண்டியவர்களிடம், தொழிற் பயிற்சி நிலையத்துக்குச் சென்றால் காத்திருக்கத் தேவையில்லாமல் உடனடியாகச் சான்றொப்பம் பெறலாம். ஒரு பைசா கூட யாருக்கும் தரவேண்டியதில்லை என்று சொல்லத் தொடங்கினார்கள். இந்தச் செய்தி சுற்றுவட்டாரத்தில் உள்ள எல்லா ஊர்களுக்கும் பரவத் தொடங்கியது. இதன் விளைவாக அன்றாடம் பத்துப் பதினைந்து பேராவது சான்றொப்பம் கேட்டு என்னிடம் வரலாயினர் !
கல்விச் சான்று (EDUCATIONAL CERTIFICATE) , கடவுச் சீட்டு (PASS-PORT), உகைச் சான்று(DRIVING LICENCE), குடும்ப அட்டை (FAMILY CARD), நில உடைமைச் சான்று (LAND RECORD), இன்னும் எத்தனையோ வகையான சான்றுகளை ஒளிப்படி (XEROX) எடுத்துக்கொண்டு வருவார்கள். சில துறைகளுக்கு அனுப்பும் விண்ணப்பங்களில் அதிலேயே சான்றொப்பம் இட வேண்டியிருக்கும். கொண்டு வரும் அத்தனைப் படிகளிலும் (COPIES) சான்றொப்பம் இட்டுத் தருவேன் !
சான்றொப்பம் பெற வருவோர் பெரியவர்களாக இருந்தால் அவர்களை என் எதிரில் இருக்கும் இருக்கையில் அமரவைத்து, சான்றொப்பம் இட்டுத் தருவேன். அவர்கள் நன்றி சொல்லிச் செல்லும் போது என் மனமெல்லாம் இனிக்கும். சிலர் கூடுதலாக , “நீங்க நல்லா இருக்கணும்” என்று வாழ்த்திச் செல்வார்கள். அந்தக் கள்ளம் கவடற்ற வாழ்த்துகள் தான் என்னை இன்று வரை நலமாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்பது என் நம்பிக்கை !
ஏறத்தாழ நான்கரை ஆண்டுகள் ஆட்சி அலுவலர் இருக்கையில் அமர்ந்திருந்தேன். இந்த நான்கரை ஆண்டுகளில் நான் போட்டுக் கொடுத்த சான்றொப்பங்கள் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கு மேல் இருக்கலாம். ஏன் இப்படி வந்தவர்களுக்கு எல்லாம் சான்றொப்பம் இட்டுத் தந்தேன் தெரியுமா ?
ஆட்சி அலுவலர் ஆவதற்கு முன்பு சான்றொப்பம் இடும் உரிமை எனக்கு இருந்ததில்லை. ஆட்சி அலுவலர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்ற பின் சான்றொப்பம் இடும் உரிமையை நான் இழந்துவிடுகிறேன். இந்த நான்கரை ஆண்டுகள் தான் என் தூவலில் (PEN) பச்சை மை நிரம்பி இருக்கும். இந்தப் பச்சை மை அரசு எனக்குக் கொடுத்திருக்கும் உரிமம் (LICENCE). இந்த உரிமத்தைப் பயன்படுத்தி, என்னை நாடி வருவோர்க்கு நன்மை செய்ய வேண்டும் – இயன்றவரை நன்மை செய்ய வேண்டும்; இது தான் என் குறிக்கோள் - கோட்பாடு !
சான்றொப்பத்திற்காக நான் இளமைக் காலத்தில் பட்ட இன்னல்கள் என் மனத்திற்குள் சாம்பல் பூத்தத் தணலாகத் தகித்துக் கொண்டிருந்தது. அந்தத் தகிப்பே என்னைப் பிடர் பிடித்துத் தள்ளி “உதவி செய் !”, ”உதவி செய்”, “எல்லோர்க்கும் உதவி செய் !” என்று உந்தித் தள்ளி என்னை இயக்கும் ஆற்றலாக அமைந்துவிட்டது !
முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி
! என்னிடம் தேர் இல்லை கொடுப்பதற்கு; என்னால் கொடுக்க முடிந்தது இலவயமாகச் சான்றொப்பம் ! அதைத்தான்
புறநானூறு கூறுவது போல - இன்னோர்க்கு என்னாது, யாரிடமும் சூழாது - நேரம் காலம் பார்க்காமல் என்னால் தரமுடிந்தது
பசியால் வாடிக் களைத்திருக்கும் ஒரு குழந்தையின் விழிகளைப் பாருங்கள். அதன் பார்வை உங்கள் மனதை - பத்து விரல்களாலும் பற்றி - பிசைவது போல் தோன்றுகிறதல்லவா ? அதற்குச் சோறிட்டுப் பசியைப் போக்கிய பின் மீண்டும் அதன் விழிகளைப் பாருங்கள். அந்தக் குழந்தைக்கு வாயால் நன்றி சொல்லத் தெரியாது; ஆனால் அதன் விழிகளில் நன்றியின் வெளிப்பாடு துல்லியமாக வெளிப்படும் !
சான்றொப்பம் பெறுவதற்காக அலுவலக வாயிற் படிகளில் காத்துக் கிடக்கும் இளைஞர்களையும், முதியவர்களையும் பாருங்கள். அவர்கள் விழிகளில் பசியால் வாடிக் களைத்துப் போயிருக்கும் குழந்தையின் ஏக்கப் பார்வை தெரிகிறதல்லவா? அந்த ஏக்கத்தைப் போக்காவிட்டால் நாம் மனிதப் பிறவி எடுத்திருப்பதால் என்ன பயன் ?
பொருள் அற்றார் பூப்பர் ஒருகால்: அருள் அற்றார்
அற்றார்மற்று ஆதல் அரிது (குறள்.248)
என்கிறார் நம் ஆசான் வள்ளுவர் !
இதன் பொருள்:- இன்று இல்லாவிட்டாலும் தம்மிடம் பொருள் இல்லாதவர் ஒருகாலத்தில் வளம் பெற்று விளங்குவர்; ஆனால் அருள் இல்லாதவர் இந்த உலகில் மனிதப் பிறவி எடுத்தமைக்கான பயனை இழந்தவரே; அவர் ஒரு காலத்திலும் வாழ்க்கையில் சிறந்து விளங்க முடியாது!
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”வேதரெத்தினம்” வலைப்பூ,
[தி.ஆ: 2053,
கும்பம் (மாசி) 10]
{22-02-2022}
---------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக