தேடுக !

வியாழன், 17 பிப்ரவரி, 2022

மலரும் நினைவுகள் (42) சேலத்தில் இருப்பு ! ஈரோட்டில் வரிப்பு !

  (1992 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்) 

அரசு அலுவலர்கள் தாம் பணி புரியும் ஊரில் குடும்பத்துடன் வாழ்தல் என்பது அவர்கள் வாழ்க்கையில் கிடைத்தற்கரிய  நற்பேறு. மாறாக குடும்பம் ஓரிடமும் பணிபுரியும் இடம்  வேறோர் இடமுமாக அமைந்து விடுமானால் அதைவிடத் தீய பேறு வேறொன்றும் இருக்க முடியாது !

 

திருமணமான 1972 முதல் பணியிலிருந்து ஓய்வு பெற்ற 2001 வரை நான் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வேற்றூரில் தங்கிப் பணிபுரிந்ததில்லை. மாற்றலாகிச் செல்கின்ற இடத்திற்குக் குடும்பத்தையும் அழைத்துச் செல்வதை நான் வழக்கமாகக் கொண்டிருந்தேன் !

 

ஈரோட்டில் எனது அரசுப் பணி வாழ்க்கைதான் சற்று மாறுபட்ட முறையில் அமைந்துவிட்டது. சேலத்தில் நான் வானத்து மீன்களை மட்டுமே கண்டேன்; சூரியனைக் கண்டதில்லை. ஈரோட்டில்  சூரியனை மட்டுமே கண்டேன்; விண்ணில் மீன்களைக் கண்டதில்லை.  மாதத்தில் 20 நாள் என் வாழ்க்கை இவ்வாறு அமைந்துவிட்டதை என்னால் தவிர்க்க இயலவில்லை ! குடும்பத்தைப் பிரிந்து வைகறை வேளையில் வெளியேறும் நான் இருள் சூழ்ந்த அந்தி வேளையில் கூடு நோக்கிப் பறந்து வரும் பறவை போலத் திரும்பி வரும் சூழ்நிலை அன்றாடம் அமைந்து இருந்தது !

 

சேலத்திலிருந்து  ஈரோடு செல்வதற்கான  இருப்பூர்தி (TRAIN) இயக்கம் எனக்கு வாய்ப்பான நேரத்தில் அமைந்திருக்கவில்லை. வைகறைப் பொழுதில் (EARLY MORNING) 05-20 மணிக்கு நீலமலை விரைவு வண்டி (BLUE MOUNTAIN  EXPRESS)  சென்னையிலிருந்து சேலம் வந்து சேரும். அதைத் தவிர்த்தால் உரிய நேரத்தில் அலுவலகம் செல்வதற்கு  வேறு வண்டியில்லை !

 

இந்த வண்டியில் ஈரோடு செல்வதே நலம்பயக்கும் என்பதால், இதில் செல்வதற்கான பருவச் சீட்டினை (SEASON TICKET) எடுப்பது என்று முடிவு செய்து, எடுக்கவும் செய்தேன். இரண்டு மாத காலம் பேருந்து மூலம் ஈரோடு சென்று வந்த நான், அடுத்து இருப்பூர்தி மூலம் சென்று வர அணியமானேன்!

 

வைகறை 04-00 மணிக்குத் துயிலெழுந்து உணவு தயாரிக்கும் பணியில் என் மனைவி ஈடுபடுவார். காலை உணவு, சிறிய அடுக்கு ஒன்றிலும் நண்பகல் உணவு பெரிய அடுக்கு ஒன்றிலுமாக தனித் தனியாக இரண்டு அடுக்குகளில் இருவேளை உணவும் அணியப்படுத்தப்படும். நான் 04-30 மணியளவில் துயிலெழுந்து, குளித்து, ஆடைகளை அணிந்து கொண்டு, உணவு அடுக்குப் பையுடன் அதிகாலை  05-00 மணிக்கு சேலம் அய்யந்திருமாளிகை வீட்டு வசதி வாரியக் குடியிருப்பிலிருந்து புறப்படுவேன் !

 

அப்பொழுதுசில்வர் பிளஸ்என்னும் ஈராழியூர்தி (TWO WHEELER)  வைத்திருந்தேன். அதை இயக்கும் போது, இப்போதிருக்கும் பிற வண்டிகள் போல அழலை ஒலி (ENGINE SOUND) வெளியில் கேட்காது. கிட்டத்தட்ட மின்சாரத்தில் இயங்கும் வண்டியைப் போல் ஒலியெழுப்பாமல் அமைதியாக ஓடும். என் மனம் கவர்ந்த சில்வர் பிளஸ்இப்போது சந்தையிலும் இல்லை; தனி மனிதர்களின் பயன்பாட்டிலும் இல்லை; என்னிடமும் இல்லை  !

 

விடியற்காலை 05-00 மணிக்குசிவர் பிளஸ்வண்டியில் வீட்டிலிருந்து புறப்படும் நான் 05 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சேலம் இருப்பூர்தி நிலையத்திற்கு 05-15 வாக்கில் சென்றுவிடுவேன். அதிகாலை நேரம்சாலையில் போக்குவரத்து அரிதாக உள்ள நேரமல்லவா ? எனவே 15 நிமிடத்தில் 05 கிலோ மீட்டர் செல்வது அத்துணைக் கடினமான செயலாக அப்போது இல்லை !

 

வண்டியை அங்குள்ள ஊர்திக் காப்பகத்தில் விட்டுவிட்டு நடைமேடைக்கு (PLATFORM) சென்று நீலமலை விரைவு வண்டிக்காகச் சில நிமிடங்கள் காத்திருப்பேன். வண்டி வந்ததும் ஏறி அமர்ந்து ஏதாவது புத்தகம் படிக்கத் தொடங்குவேன். காலை 07-00 மணி வாக்கில் இருப்பூர்தி, ஈரோடு சந்திப்பைச் சென்றடையும். அங்கிருந்து நகரப் பேருந்து மூலம் ஈரோட்டில் காசிப்பாளையம் பகுதியில் அமைந்திருக்கும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 07-30 மணி வாக்கில்  சென்று சேர்வேன் !

 

அலுவலகம் சென்றதும் கோப்புகளைப் பார்க்கத் தொடங்குவேன். அமைதியான சூழல்சிந்தித்துச் செயலாற்ற உகந்த நேரம். இருக்கைப் பொறுப்பாளர் எழுதி வைத்துள்ள வரைவினைச் சரிபார்த்துச் சுருக்கொப்பம் இடுவதுடன் நிறுத்திக் கொள்ளாமல், நானாக வரைவுகளை வடித்து வைப்பதிலும் ஈடுபடுவேன் !

 

பின்பு காலை 08-30 மணியளவில் காலை உணவை எடுத்துக் கொள்வேன். காவலர் மூலம் தேநீர் வாங்கிவரச் சொல்லி அருந்துவேன். பிற அலுவலர்கள் வரும் வரைக் கோப்புகள் பார்ப்பதிலும், பதிவேடுகளில் உள்ள பதிவுகளைச் சரிபார்த்துச் சுருக்கொப்பம் இடுவதுமாக என் பணிகள் தொடரும் !

 

சில கோப்புகளில் நடவடிக்கை எடுப்பதென்பது சிக்கலானதாக இருக்கும். அத்தகைய கோப்புகளை ஆய்வு செய்துவிட்டு, தொடர்புடைய இருக்கை அலுவலரை அழைத்து அமரவைத்துக் கொண்டு கடிதத்தின் சொற்கோவையை  நான் சொல்லச் சொல்ல அவரை எழுத வைப்பேன் !

 

தணிக்கைக் கோப்புகளில் என் சிறப்புக் கவனத்தைச் செலுத்துவது வழக்கம் ! பயிற்சி நிலையத்தின் அனைத்துப் பிரிவுகளுக்குமான  மொத்தத் தணிக்கை அறிக்கையையும், புத்தக வடிவில் தைத்து வைக்குமாறு இருக்கைப் பொறுப்பாளரிடம் சொல்வேன்.. அந்த அறிக்கையுடன் அட்டவணைத் தாள்களும் முன்னதாக இணைக்கப்படும். அட்டவணையில் தொடர் எண், தணிக்கைத் தடைப் பத்தி எண், தடைச் சுருக்கம், தொடர் நடவடிக்கைப் பக்கங்கள், தீர்வு (பக்கம்) ஆகிய நான்கு நிரல்கள் இருக்கும் !

 

கோப்பில் எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையின் போதும் இந்த அட்டவணையில், பக்க எண் குறிப்புகள் எழுதப்படும். குறிப்பிட்ட தடை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அட்டவணையில் பதிவு செய்யப்பட்டுள்ள பக்க எண்களை வைத்து குறிப்பிட்டப் பக்கத்தைப் புரட்டிப் பார்த்து  யாரும் எளிதில் புரிந்துகொள்ள, இம்முறை உதவியாக இருக்கும். இயக்குநரால் தடைத் தீர்வு அறிவிக்கப்பட்டவுடன், கடைசி நிரலில் தீர்ந்தது என்று எழுதி பக்க எண்ணும் குறிப்பிட்டு, தொடர் எண் சுழிக்கப்படும் !

 

ஈரோட்டிலும் இந்த நடைமுறையைப் பின்பற்றச் செய்தேன். தணிக்கைக் கோப்புகளைப் பேணும் இருக்கை அலுவலருக்கு இந்த ஏற்பாடு மிகவும் வசதியாக இருக்கும் ! அரசுப் பணிகளை நிறைவேற்றுகையில் அவற்றைச் செய்து முடிப்பது மட்டும் போதாது, அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல், அவற்றை எளிய முறையில் செய்து முடித்திடவும் வழிவகை காண வேண்டும் !

 

அலுவலர்களின் பணிநலன் தொடர்பான கோப்புகளில் (SERVICE MATTERS) எந்தவிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை இருக்கை அலுவலரிடம் கலந்துரையாடி, முடிவெடுத்து அதன்படி நடவடிக்கை எடுக்கச் சொல்வேன். வீட்டிலிருந்து எடுத்து வந்திருக்கும் நண்பகல் உணவை அருந்திய பின், முதல்வர் / ஆட்சி அலுவலர் அறைக்குச் சென்று பொதுநலன் சார்ந்த செய்திகளை அரைமணி நேரம் அவர்களுடன் பகிர்ந்து கொள்வேன் !

 

காலைப் பொழுதில் வாய்ப்பாக அமையாத நேரத்தில் சேலத்திலிருந்து ஈரோட்டுக்கு வண்டி இருப்பதைப் போல மாலை நேரத்திலும் ஈரோட்டிலிருந்து சேலம் செல்வதற்கு வாய்ப்பான நேரத்தில்  வண்டிகள் அமையவில்லை. மாலை 04-30 மணி வண்டியைத் தவறவிட்டால் அப்புறம் 07-00 மணிக்குத் தான் சேலத்திற்கு இருப்பூர்தி இருந்தது. முதல்வர், ஆட்சி அலுவலர் இருவரிடமும் என் நிலைமையை எடுத்துச் சொல்லி மாலை 04-30 மணி வண்டிக்குச் செல்வதற்கு இசைவைப் பெற்றிருந்தேன் !

 

ஆகையால் மாலை 04-00 மணியளவில் நகரப் பேருந்தைப் பிடித்து, ஈரோடு இருப்பூர்தி நிலையம் சென்று அங்கிருந்து 04-30 மணி வண்டியில் சேலம் செல்வேன். மாலை 06-00 மணிக்குச் சேலம் சென்றடையும் வண்டியிலிருந்து இறங்கிசில்வர் பிளஸ்ஸை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் செல்ல மாலை 06-30 ஆகிவிடும் ! சேலத்தில் என்னால் சூரியனைக் காணமுடியவில்லை, வானத்து மீன்களைத் தான் காண முடிந்தது என்று மூன்றாவது பத்த்யில் ஏன் குறிப்பிட்டிருக்கிறேன் என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் !


--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

வேதரெத்தினம்வலைப்பூ,

[தி.ஆ: 2053, சுறவம் (தை) 28]

{10-02-2022}

--------------------------------------------------------------------------------------

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக