தேடுக !

வியாழன், 3 மார்ச், 2022

மலரும் நினைவுகள் (61) அலுவலர்களுக்கு ஊதிய வரையறைப் பணி !

(1998 -ஆம் ஆண்டு நிகழ்வுகள்) 

ஊதிய ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் படி அரசு அலுவலர்களின் ஊதியம் 1998 –ஆம் ஆண்டு திருத்தி அமைக்கப்பட்டது. இதற்கான அரசாணை கிடைக்கப் பெற்றதும், அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று முழுவதுமாகப் படித்தேன் !

 

புதிய ஊதிய நிரக்கிற்கு மாறிக் கொள்ளும் நாள் (DATE) பற்றிய விருப்புரிமைப் படிவம் (OPTION FORM), ஊதிய வரையறைக் கணக்கீட்டுப் படிவம் (PAY FIXATION STATEMENT), புதிய ஊதிய நிரக்கில் ஊதிய வரையறைச் செயற்குறிப்பு (PAY FIXATION PROCEEDINGS) ஆகியவற்றை வீட்டில் வைத்தே தனித்தனித் தாள்களில் எழுதினேன் !

 

இவையல்லாமல், புதிய ஊதிய நிரக்கிற்கு மாறிக்கொள்ளும் நாள் பற்றிய பணிசுவடிப் பதிவு (S.R. ENTRY REGARDING DATE OF SWITCHING OVER TO NEW SCALE OF PAY), புதிய ஊதிய நிரக்கில் வரையறை செய்யப்பட்டுள்ள அடிப்படை ஊதியம் பற்றிய  பணி சுவடிப்பதிவு (S.R.ENTRY REGARDING BASIC PAY FIXED IN THE REVISED SCALE OF PAY)  ஒவ்வொரு பதவிக்கும்  உரிய புதிய ஊதிய நிரக்கு (REVISED SCALE OF PAY IN RESPECT OF EACH CATEGORY), ஆகியவை பற்றிய செய்திகளையும் தனித் தனித் தாள்களில் எழுதினேன் !

 

மறுநாள் அலுவலகம் வந்ததும், தட்டச்சரை அழைத்து, மேற்காணும் ஆறு  படிவங்களையும் கொடுத்து படியெடு தாளில் (STENCIL PAPER)  தட்டச்சு செய்து வரச் சொன்னேன். பதிவறைக் காப்பாளரை அழைத்து, படியெடு தாள்களைத் தட்டச்சரிடமிருந்து பெற்று, நான் சொல்லும் அளவுக்கு ஒவ்வொன்றிலும்  படிகளை  எடுக்கச் சொன்னேன் !

 

அலுவலகப் பணியாளர்கள் எல்லோரையும் அழைத்து, அனைத்து அலுவலர்களுக்கும் புதிய ஊதிய நிரக்கில் ஊதிய வரையறை செய்ய வேண்டியுள்ளது; வழக்கமான பிற பணிகளை நிறுத்திவிட்டு இந்தப் பணியில் ஈடுபட யார் யார் முன்வருகிறீர்கள் என்று கேட்டேன் !


தொழில்நுட்ப அலுவலர்கள் பணியமைப்பு இருக்கை உதவியாளர், தொழில்நுட்பம் சாரா பணியமைப்பு இருக்கை உதவியாளர், மேலும் ஒருவர் ஆக மொத்தம் மூவர் மட்டுமே முன்வந்தனர் ! கடினமான பணி என்று பிறர் கருதினர் போலும் !

 

மூவர் மட்டும் போதாது, கூடுதலாக இன்னும் ஐவராவது தேவை என்று தெரிவித்து, வேறுயாரும் முன்வராவிட்டால், நான் வேறு அலுவலர்களை வைத்து இந்தப் பணியை நிறைவேற்ற வேண்டியிருக்கும், அதற்கு உங்களுக்கு மறுப்பு ஏதேனும் உண்டா என்று கேட்டேன். “இல்லைஎன்று தெரிவித்தனர். சரி, நீங்கள் செல்லுங்கள் பின்னர் அழைக்கிறேன் என்று சொல்லியனுப்பினேன் !

 

அடுத்து பட்டயப் பொறியாளர் சங்கப் பொறுப்பாளர்கள் திரு..வே.சகநாதன், திரு.இரவி, திரு..நமசிவாயம், திரு.நடராசன் மற்றும் சிலரை அழைத்து அவர்களிடம் பேசினேன். அவர்கள் ஒத்துழைக்கத் தயார் என்று அறிவித்தனர். அவர்களில் ஐவரை மட்டும் மறுநாள் காலை 10-00 மணிக்கு என் அறைக்கு வரச் சொன்னேன் !


அலுவலகப் பணியாளர்கள் மூவரிடமும் அதே போல் தெரிவித்தேன். மறுநாள் காலை என் அறையில் கூடுதல் மேசை, நாற்காலிகள் போடப்பட்டு என்னுடன் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர் அமர்ந்து பணிகளை மேற்கொள்ள வசதிகள் செய்யப்பட்டன !

 

மறுநாள் எட்டு அலுவலர்களும் என் அறையில் குழுமினர். அனைவரையும் அமரச் செய்து, நான் தயாரித்துக் கொடுத்துள்ள ஆறு படிவங்களையும் ஆளுக்கு ஒவ்வொன்று கொடுத்துப் படித்துப் பார்க்கச் சொன்னேன் !


பின்பு, பணிச்சுவடியை அருகில் வைத்துக்கொண்டு, எந்த நாளில் (தேதி) புதிய ஊதிய நிரக்கிற்கு மாறிக்கொண்டால், குறிப்பிட்ட அலுவலருக்கு ஆதாயமாக இருக்கும் என்பதைக் கண்டறியும் வழிகளைச் சொல்லித் தந்தேன் !

 

அதன் அடியில் விருப்புரிமைப் படிவம் (OPTION FORM) ஒன்றை எடுத்து அதில் குறிப்பிட்ட அலுவலரின் பெயர், அவர் வகிக்கும் பதவிபுதிய ஊதிய நிரக்கு (SCALE OF PAY), புதிய ஊதிய நிரக்கிற்கு மாறிக்கொள்ளும் நாள் (தேதி) ஆகியவற்றை நிறைவு செய்யுங்கள் என்று சொன்னேன் !

 

அடுத்ததாக, புதிய ஊதிய நிரக்கில் ஊதியம் வரையறை செய்வது எப்படி என்பதை விளக்கினேன். இந்தப் பணியில் இன்னலுமில்லை, குழப்பத்திற்கு இடமுமில்லை என்பதைச் சொல்லி, உரிய படிவத்தைப் போதிய படிகள் எடுத்து வைத்திருப்பதால், கோடிட்ட இடங்களை நீங்கள் நிரப்ப வேண்டும், இதில் ஓரிரு கூட்டல் கழித்தல் செய்ய வேண்டியிருக்கும். அவ்வளவுதான் ! என்பதை எடுத்துரைத்தேன் !

 

ஊதிய வறையறை செய்யும் படிவம், முதல்வரின் செயல்முறை ஆணை ஆகியவற்றில் மூன்று படிகள் (COPIES) எழுதச் சொன்னேன். இவற்றை முடித்த  நிலையில், படிவங்களையும் பணிச்சுவடியையும் என்னிடம் கொடுங்கள், நான் சரிபார்த்துச் சொன்ன பிறகு, பணிப்பதிவேட்டில் பதிவு செய்யுங்கள் என்று கூறினேன் !

 

பழைய ஊதிய நிரக்கில் அடுத்த ஊதிய உயர்வை (NEXT INCREMENT)  பெற்றுக்கொண்டு புதிய ஊதிய நிரக்கிற்கு மாறிக் கொள்வது சில அலுவலர்களுக்கு ஆதாயமாக இருக்கும். அப்படிப்பட்ட அலுவலர்களை  அழைத்து, அவர்கள் பெறக் கூடிய ஆதாயத்தை விளக்கிச் சொல்லி, விருப்புரிமை நாளை முடிவு செய்து அவர்களிடம் கையொப்பம் வாங்கினோம் !

 

ஒவ்வொன்றுக்கும் உரிய படிவங்களை நான் தயாரித்துக் கொடுத்திருந்ததால், கோடிட்ட இடங்களை நிரப்ப வேண்டும் என்னும் அடிப்படையில் புதிய ஊதிய நிரக்கில் அடிப்படை ஊதியத்தை வரையறை செய்வதில், அவர்களுக்கு இன்னலோ, ஐயமோ ஏற்படவில்லை ! 


இன்னும் சொல்லப் போனால் தாங்கள் ஒரு புதிய துய்ப்பினை (அனுபவம்) பெறப் போகிறோம் என்னும் மகிழ்ச்சியுடன் ஊக்கமுடன் செயல்பட்டு இரண்டே நாளில் ஊதிய வரையறைப் பணியை நிறைவு செய்தனர் !

 

முதல்வரின் ஒப்புதலுக்குப் பின் பணிசுவடிப் பதிவுகளையும் செய்து முடித்தனர். இந்தப் பணியில் தங்களை ஆர்வமுடன் ஈடுபடுத்திக் கொண்ட திரு..வே.சகநாதன், திரு.வி.இரவி, திரு..நமசிவாயம், திரு.நடராசன், திரு.செந்தில்குமார் ஆகியோரில் முதலிருவரும் இப்போது முதல்வர்களாகப் பணியாற்றி வருகின்றனர். விரைவில் துணை இயக்குநராகவும் உயரவிருக்கின்றனர்.  திரு..நமசிவாயம், பயிற்சி அலுவலராகிப் பணியினின்று ஓய்வு பெற்றுவிட்டார் !

 

திரு.செந்தில்குமார், இப்போது பயிற்சி அலுவலராக மதுரையில் பணியாற்றி வருகிறார். திரு.நடராசன் பற்றி வருந்தத் தக்க செய்தி வெளியாகியது. அதன் உண்மைத் தன்மை பற்றி என்னால் உறுதி செய்துகொள்ள முடியவில்லை !

 

ஊதிய வரையறைப் பணிகள் தொடங்கப் பெற்ற போது, இரண்டு அலுவலக மேலாளர்கள் இருந்தும், அவர்கள் தங்கள் பங்களிப்பை நல்க முன்வரவில்லை. வேலை கற்றுக் கொள்ளாமல் நாற்காலியை நிரப்பியவர்களை நான் ஏன் கட்டாயப்படுத்த வேண்டும் ? கட்டாயப்படுத்துவதால் எந்தப் பயனுமிருக்காது !

 

ஊதிய வரையறைப் பணி அலுவலகம் சார்ந்த பணி, இளநிலைப் பயிற்சி அலுவலர்களாகிய தங்களுக்குரிய பணியல்ல என்று பட்டயப் பொறியாளர்கள் (DIPLOMA ENGINEERS) ஒதுங்கி நிற்கவில்லை. நான் அழைத்தவுடன் மறுப்புச் சொல்லாமல் முன்வந்தனர். என் மீது அவர்களும், அவர்கள் மீது நானும் வைத்திருந்த அன்பும், மதிப்பும்  இதற்கொரு காரணம் ! 


தாங்கள் எந்தப் பதவிலிருந்தாலும், எல்லா வேலைகளையும் கற்றுக்கொண்டு, ஒளிர வேண்டும் என்ற உணர்வுடையோர், எந்த வேலையானாலும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வதை அன்றும் விரும்பினர்; இன்றும் விரும்புகின்றனர்; நாளையும் விரும்புவர் !

 

இரண்டே நாளில், ஊதிய வரையறைப் பணிகள் செய்து முடித்து, முதல்வர் ஒப்பத்துடன், உரிய செயல் முறை ஆணையை ஒவ்வொரு அலுவலரின் கையிலும் மூன்றாம் நாள் தவழச் செய்தமைக்காக அனைத்து அலுவலர்களும் என்னிடம் வந்து தங்கள் மகிழ்ச்சிகளைத் தெவித்தனர் !

 

இந்தப் பணிகளை விரைந்து செய்து முடிக்கக் காரணமாக இருந்த திரு..வே.சகநாதன் (இப்போது, கொல்லிமலை அ.தொ..நி. முதல்வர்), திரு.வி.இரவி (இப்போது தருமபுரி, .தொ..நி. முதல்வர்),  திரு.செந்தில்குமார் (இப்போது பயிற்சி அலுவலர், .தொ..நி. மதுரை), திரு..நமசிவாயம், (ஓய்வு பெற்ற  பயிற்சி அலுவலர், .தொ..நி. பேட்டை), திரு.நடராசன், (மறைந்து விட்டதாகச் சொல்லப்படும்  இளநிலைப் பயிற்சி அலுவலர்) திருமதி.ஆர்.வசந்தா (ஓய்வு பெற்ற ஆட்சி அலுவலர், அதொ..நி. ஓசூர்) திரு.நடேசன் (ஓய்வு பெற்ற உதவியாளர், அதொபநி, ஓசூர்), திரு.நெ.கோபாலகிருஷ்ணன், ஓய்வு பெற்ற உதவியாளர், அதொ..நி, ஓசூர்) ஆகியோரை இன்றும் நான் மகிழ்ச்சியுடன் நினைத்துப் பார்க்கத் தவறுவதில்லை !

 

இந்த உலகம் பிறருக்கு உதவி செய்கின்ற நன்மக்களால் தான் சீராக இயங்கி வருகிறது. உதவி செய்யும் குணமுடையோர் பணிபுரியும் அலுவலகங்களில் எந்தப் பணிகளிலும்  தொய்வு ஏற்படுவதில்லை. நான் ஓசூரில் பணி புரிந்த காலம் என்னைப் பொறுத்தவரைப் பொற்காலம்பரிவுணர்வு, அருள், இரக்கம், அன்பு இவைதானே  மனிதனைஉயர்ந்த மனிதன்என்னும்  நிலைக்கு உயர்த்துகிறது !

 

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

வேதரெத்தினம்வலைப்பூ,

[தி.ஆ: 2053, கும்பம் (மாசி) 18]

{02-03-2022}

------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக