தேடுக !

வியாழன், 3 மார்ச், 2022

மலரும் நினைவுகள் (62) தீசல் கம்மியர் - பாடப்புத்தகம் - தமிழாக்கம்!

 (1998-ஆம் ஆண்டு நிகழ்வுகள்) 

1997–98 -ஆம் ஆண்டுகளில்  வேலை வாய்ப்பு, பயிற்சித் துறை துறை இயக்குநராக  இருந்தவர் பெயர் என்ன என்பது இப்போது எனக்கு நினைவில்லை. ஆனால், அவர் கொண்டு வந்த ஒரு திட்டம் அனைத்துத் தொழிற்பிரிவுகளுக்கும் தெரிவியல் (TRADE THRORY) பாடப் புத்தகத்தைத் தமிழில் தயாரித்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்னும் தமிழ் வளர்ச்சி இலக்கு நோக்கிய சீரிய முயற்சியாகத் திகழ்ந்தது !

 

இந்த வகையில் ஓசூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் திரு..அப்துல் அமீது அவர்களுக்குதீசல் கம்மியர்” (DISEL MECHANIC) தொழிற் பிரிவுக்கான தெரிவியல்  பாடப் புத்தகத்தைத் தமிழில் தயாரிக்கும் பொறுப்பு இயக்குநரால் ஒப்படைக்கப்பட்டது.  இந்தப் பணியில் அவர் பயிற்சி நிலைய அலுவலர்கள் மேலும் இருவரை இணைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப் பட்டிருந்தார் !

 

(டீசல் எண்ணெய்யைக் கண்டு பிடித்தவர் ருடால்ப் டீசல் என்னும் அறிவியலாளர். அவர் பெயரில் அந்த எண்ணெய்க்குடீசல் எண்ணெய்என்று பெயரிடப் பெற்று வழங்கப்படுகிறது. “டீசல்என்னும் பெயரை தமிழ் மரபுப்படிதீசல்குறிப்பிடுகிறேன்ராஜா என்னும் பெயரை இராசா என்று எழுதுவதைப் போல !)

 

தீசல் கம்மியர் தொழிற்பிரிவு அப்போது ஓசூரில் இல்லை. ஆகையால் உந்தூர்திக் கம்மியவியல் பிரிவு (M.M.V) உதவிப் பயிற்சி அலுவலர் திரு.வி.இரவி இப்பணிக்கென முதல்வரால் தெரிவு செய்யப்பெற்றார்சார்புரை மையத்தில் (R.I.Center) இளநிலை பழகுநர் பயிற்சி துணை நெறியாளராக (A.A.A.(Jr)) பணி புரிந்து வந்த திரு.துரைசாமி என்பவர் இரண்டாவது அலுவலராக இப்பணிக்கென முதல்வரால் தெரிவு செய்யப்பெற்றார் !

 

 

ஆங்கிலத்தில் தரப்பட்டிருந்த தீசல் கம்மியர் தொழிற் பிரிவுக்கான தெரிவியல் பாடப் புத்தகத்தினை இயல் (CHAPTER) வாரியாக மூன்று பகுதிகளாகப் பகுத்துக் கொண்டு, மூவரும் ஒவ்வொரு பகுதியைத் தமிழாக்கம் செய்வது என்பது திட்டமிடப் பெற்ற ஏற்பாடு !  முதற் பகுதிக்கு திரு.துரைசாமி அவர்களும், இரண்டாவது பகுதிக்கு முதல்வர் திரு.அப்துல் அமீது அவர்களும், மூன்றாவது பகுதிக்குத் திரு.இரவி அவர்களும் பொறுப்பேற்றுத் தமிழாக்கம் செய்ய முடிவு செய்யப்பெற்றது !

 

சில நாள் சென்றபின், திரு.துரைசாமி அவர்கள், தனக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு இருப்பதால், தன்னை தமிழாக்கப் பணியிலிருந்து விடுவிக்கக் கோரினார். பகுதி ஒன்றின் தமிழாக்கப் பணியில் ஏற்பட்ட தடங்கலுக்குத் தீர்வுகாண முதல்வர் பல்வகையிலும் முயன்றார். வேறு அலுவலர்கள் யாரும் அப்போது முன்வராத காரணத்தால், முதல்வர் என்ன செய்வதென்று புரியாமல் திணறிப் போனார்!

 

ஒருநாள் முல்வர் அறையில் அமர்ந்து அவருடன் நான் உரையாடிக் கொண்டு இருக்கையில், இந்தச் சிக்கலுக்கு எப்படித் தீர்வு காண்பது என்பது பற்றிய பேச்சு வந்தது. அப்போது நான் குறுக்கிட்டு, முதல் பகுதிக்கான தமிழாக்கப் பணியை நான் வேண்டுமானால் செய்து தருகிறேன் என்று தெரிவித்தேன். முதல்வருக்கு ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னொரு புறம் சற்றுத் தயக்கமாக இருந்தது !

 

என்னுடைய தமிழாற்றல் பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் தொழில் நுட்பம் சார்ந்த பாடப் பகுதியை எந்த அளவுக்கு என்னால் தமிழாக்கம் செய்ய முடியும் என்பது அவர் தயக்கத்திற்கான காரணம். பின்பு தனது தயக்கத்தை உடைத்துக்கொண்டு, “தமிழாக்கப் பணியை நீங்களே செய்யுங்கள்என்று  ஒப்புதல் தந்தார் !

 

தமிழாக்கம் செய்ய வேண்டிய பாடப்பகுதியில் கருவிகள், எந்திரங்கள் போன்றவற்றின் படங்களும் நிறைய இருந்தன. படங்களுடன், அவற்றைப் பற்றிய விளக்கங்களும் பாடத்தில் இடம்பெற்றிருந்தன. எடுத்துக் காட்டாக, ஒரு பாடத்தில்அரத்தின் (FILE) படத்தைப் போட்டு, அதனுடைய உறுப்புகள் குறிக்கப்பட்டு, அந்த உறுப்புகளின் தன்மை மற்றும் பயன்கள் பற்றிப்  பாடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் !

 

படங்கள் இல்லாமல் பாடப்பகுதியைத் தமிழாக்கம் செய்தால், படிப்பவர்களுக்கு எதுவும் விளங்காது. இதை எப்படிச் சமாளிப்பது என்று சிந்தித்தேன். இறுதியில், அந்தப் பாடப் புத்தகத்தில் இருந்த படங்களை ஒளிப்படம் (XEROX) எடுத்து, தமிழாக்கம் செய்யும் தாளில் ஒட்டிக்கொண்டு, அதன் உறுப்புகளை அம்புக்குறியிட்டு எழுதுவது எனவும், உறுப்புகளின் பெயர்களைத் தமிழில் குறிப்பிடுவதுடன் அடைப்புக் குறிக்குள் ஆங்கிலப் பெயரையும் எழுதுவது என்றும் முடிவு செய்தேன் !

 

தமிழாக்கம் செய்கையில் எனக்கு ஏற்படும் தொழில்நுட்பம் சார்ந்த ஐயங்களுக்கு உந்தூர்திக் கம்மியவியல் உதவிப் பயிற்சி அலுவலர் திரு..வே.சகநாதன் அவர்கள் (இப்போது, முதல்வர், .தொ..நி. கொல்லிமலை) விளக்கம் தந்து உதவினார். அவர் தமிழிலும் மிகுந்த ஈடுபாடு மிக்கவர் என்பதால் என் ஐயங்களுக்கு தமிழில் அவர் தந்த விளக்கம் எனக்குப் பேருதவியாக இருந்தது !

 

தமிழாக்கம் செய்கையில், இரும்பு அரத்தை (STEEL FILE)  பற்றிய பாடம் என்றால் அரத்தின் படம், நான் தமிழாக்கம் செய்து எழுதிவரும் தாளில் இடப்புறமாக ஒட்டப்படும். படத்திற்குப் பக்கத்தில் வலப்புறமாக அதன் உறுப்புகள் அம்புக் குறியிட்டு எழுதப்பெறும். அத்துடன் படத்திற்குக் கீழே அரத்தின் பல்வேறு பயன்பாடுகள் பற்றிப் பாடத்தில் விளக்கமாகச் சொல்லப் பெறும் !

 

பொதுவாக ஒரு தட்டையரத்தின் (FLAT FILE) உறுப்புகளும் அவற்றுக்கான தமிழ்ப் பெயரும் பின்வருமாறு இருக்கும் !

 

1)   POINT (Or TIP Or Toe) = நுனி

2)   FACE (Or Belly Or Side) = முகம்

3)   EDGE = விளிம்பு

4)   HEEL (Or Shoulder) = கழுத்து

5)   TANG = காம்பு

6)   TEETH = பற்கள்.

7)   BODY = உடல்

 

தமிழ்ப் பெயர் தேர்வு செய்கையில் மூளையை அதிகம் வருத்திக் கொள்ளத் தேவையில்லை. எடுத்துக்காட்டாக  FACE என்பதை BELLY எனவும் SIDE எனவும்  சொல்கின்றனர். இந்த மூன்றில் எதை எடுத்துக்கொள்வது ? அதிகமாகப் பயன்படுத்தப் படும் பெயர் FACE என்பதே. ஆகையால் முகம் என்று அதைத் தமிழாக்கம் செய்திருக்கிறேன் !

 

ஏறத்தாழ 10 பக்கம் போல் தமிழாக்கம் செய்து, அதை ஒளிப்படம் (XEROX) எடுத்துச் சென்று முதல்வரிடம் காட்டினேன். முழுவதையும் படித்துப் பார்த்த அவர் எனக்கு 100% மனநிறைவு ஏற்பட்டிருக்கிறது. நான் இன்னும் தொடங்கவே இல்லை, எப்படிச் செய்வது என்று குழம்பிக் கொண்டிருந்தேன். நீங்கள் படங்களை ஒளிப்படம் (XEROX) எடுத்து ஒட்டி, அதன் பக்கத்திலேயே அதற்கான பாடப் பகுதியையும் தமிழாக்கம் செய்திருப்பது மிகப் பொருத்தமாக இருக்கிறது என்றார் !

 

உங்களுடைய தமிழாக்கம் மாணவர்களால் புரிந்துகொள்ளக் கூடியதாகவும், பிறமொழிக் கலப்பு இல்லாமலும் மிகத் தெளிவாகவும் இருக்கிறது. இதே வழியை நானும் பின்பற்றப் போகிறேன் என்று சொன்னதுடன், திரு.இரவியையும் அழைத்து, அவரிடமும் என் வழியைப் பின்பற்றச் சொல்லிவிட்டார் !

 

நான் தமிழாக்கம் செய்து கையால் எழுதி அதை ஒளிப்படி (XEROX COPY) எடுத்த   தாள்கள் மட்டும் 400 பக்கம் அளவுக்கு இருந்தன. அவற்றின் இன்னொரு ஒளிப்படி (XEROX COPY) இன்றும் கூட என்னிடம் இருக்கிறது. மூவரும் தமிழாக்கம் செய்த தாள்களை ஒளிப்படம் (XEROX) எடுத்து, மூன்று தொகுதிகளாக கட்டடம் (BOUND) செய்து, இயக்ககத்திற்கு எடுத்துச் சென்றார் முதல்வர். அனைத்து நிலைய முதல்வர்களும் வருகை தந்திருந்த அந்த ஆய்வுக் கூட்டத்தில் ஓசூர் முதல்வர் இயக்குரால் வெகுவாகப் பாராட்டப் பெற்றார்!

 

பிற நிலைய முதல்வர்கள், படம் இல்லாமலும், கட்டடம் (BOUND)  செய்யாமல் உதிரியாகவும் கொண்டு வந்ததால் இயக்குநரின் சினத்திற்கு ஆளாயினர். மிகவும் முனைப்பாகத் தொடங்கப் பெற்ற பல்வேறு தொழிற் பிரிவுகளுக்கான தெரிவியல் (THEORY) பாடங்களைத் தமிழாக்கம் செய்து புத்தகமாக வெளியிடும்  பணி, இயக்குநர் வேறு துறைக்கு மாறியவுடன் கிடப்பில் போடப்பட்டு இன்று வரை அதே நிலைதான் தொடர்கிறது !

 

தமிழாக்கப் பணியில் ஈடுபட்டிருந்த எனக்கும், முதல்வர் திரு.அப்துல் அமீது மற்றும் உதவிப் பயிற்சி அலுவலர் திரு.இரவி ஆகியோருக்கும் மதிப்பூதியமாக ஆளுக்கு உருபா 1000 வீதம் மூவருக்கும் வழங்கப் பெற்றது. பணம் பெற்றதைவிட, எங்கள் உழைப்பை அச்சிட்ட பாடப் புத்தக வடிவில் பார்த்திருந்தால் எங்களுக்கு இன்னும் பல மடங்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும் ! ஆனால் அந்த வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்காமற் போயிற்று !

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

வேதரெத்தினம்வலைப்பூ,

[தி.ஆ: 2053, கும்பம் (மாசி)19]

{03-03-2022}

--------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக