(1998 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்)
ஒரு
பயிற்சி நிலையம் இயங்குவதற்குத் தேவையான அலுவலர் பணியிடங்களை முதலில் ஓராண்டு காலத்திற்கு
அன்னிலையாக (TEMPORARY
SANCTION) அரசு ஒப்பளிக்கிறது. பின்பு ஆண்டுதோறும்
அந்தப் பணியிடங்களை மேலும் ஓராண்டு காலத்திற்கு நீட்டித்து ஆணை வழங்குகிறது
!
இப்படிச்
சில ஆண்டுகள் சென்றபின், அந்தப் பயிற்சி நிலையம் இயங்குவதற்கு
அப்பணியிடங்கள் இன்றியமையாத் தேவை என்று அரசு கருதும் போது அவை தொடர்ந்து இயங்கும்
வகையில் அப்பணியிடங்களை நிலையிருத்தம் (PERMANENT RETENTION) செய்து ஆணை வழங்குகிறது !
பின்னர்
அந்தப் பயிற்சி நிலயத்தை விரிவாக்கம் செய்யும் போது அல்லது ஒருசில புதிய பணியிடங்களை
உருவாக்கும் போது மீண்டும் மேற்கண்டவாறு முதலில் அன்னிலையாகவும், சில ஆண்டுகள் கழித்து நிலையாகவும் அப்பணியிடங்களை நிலையிருத்தம் (PERMANENT RETENTION) செய்து ஆணை
வழங்கப்படுகிறது !
அன்னிலைப்
பணியிடங்கள் ஒப்பளிப்பு (TEMPORARY SANCTION) என்றாலும், நிலையிருத்தம் (PERMANENT RETENTION) ஒப்பளிப்புச் செய்தாலும்,
தொடர்புடைய அரசாணைகள் மிகவும் முகாமையானவை. அத்தகைய அரசாணைகளைக் கண்கள் போலப் பாதுகாக்க வேண்டும். ஆனால் இவற்றின் மதிப்புத் தெரியாமல், இருப்புக் கோப்பில்
(STOCK FILE) படியிட்டுவிட்டு, அல்லது சிலருக்குப்
படி வழங்கிவிட்டு கோப்பு முடிக்கப்படுகிறது !
இருப்புக்கோப்பு (STOCK FILE) ஆண்டு முடிவில் பதிவறையில் ஒப்படைக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பணியிடம் நிலையிருத்தம் (PERMANENT RETENTION) செய்யப்பட்டதற்கான அரசாணையை எடுத்துக் கொடுங்கள் என்று பணியமைப்புப் பிரிவு உதவியாளரிடம் அலுவலக மேலாளரோ அல்லது ஆட்சி அலுவலரோ கேட்டுப் பாருங்கள். அவர் பதிவறையில் உள்ள இருப்புக் கோப்புகளை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு தேடுவார், தேடுவார், தேடிக்கொண்டே இருப்பார். அவரால் வேறென்ன செய்ய முடியும் ?
அவரோ, அவருக்கு முன்னவரோ சற்று சிந்தித்து, இருப்புக்கோப்பு (பணியிடங்கள் நிலையிருத்தம்) (STOCK FILE – POSTS PERMANENT
RETENTION G.Os) என்னும் பெயரில் உருவாக்கி பதிவறைக்கு அனுப்பாமல் தமது இருக்கையிலேயே வைத்திருந்தால்,
கேட்டவுடன் தரமுடியுமே!
வேறொரு வகையில் இதற்கு விடைகாண்போம். உங்களிடம் பணம் இருக்கிறது. அதை என்ன செய்வீர்கள் ? உங்களிடமே வைத்துக் கொள்வீர்கள் அல்லது தேவைப் படுகையில் எடுத்துக் கொள்ளும் வகையில் அளகையில் (BANK) இட்டு வைப்பீர்கள். சரி தானே !
மாறாக பழைய பொருள்களை வைத்திருக்கும் பரணில் ஏதோவொரு பழைய பெட்டியில் அல்லது, கூரை
இடுக்கில் அல்லது இறவாணத்தில் அல்லது மாட்டுத் தொழுவத்தில் அல்லது சார்ப்பில் என்று
ஒரு இலக்கு இல்லாமல் எங்காவது இட்டு வைப்பீர்களா ?
அன்னிலைப் பணியிடங்கள் ஒப்பளிப்பு (TEMPORARY SANCTION) அரசாணை என்றாலும், பணியிடங்கள் நிலையிருத்தம் (PERMANENT RETENTION) ஒப்பளிப்பு அரசாணை என்றாலும் அவற்றைப் பணம் போலப் பாதுகாக்க வேண்டும் !
பணம் தேவைப்படுகையில்
உடனே எடுத்துக்கொள்ள வசதியாக அதை பணப்பெட்டியிலோ அல்லது அளகையிலோ (BANK) இட்டு வைப்பதைப் போல இந்த அரசாணைகளையும் இருப்புக்கோப்பு (பணியிடங்கள் நிலையிருத்தம்) (STOCK FILE – POSTS PERMANENT
RETENTION G.Os) என்னும் பெயரில் உருவாக்கி வைத்துக்கொள்ள வேண்டும்
!
நான்
ஆட்சி அலுவலராக ஓசூரில் பொறுப்பேற்றதும் ஒருநாள் பணியமைப்புப் பிரிவு உதவியாளரிடம்,
பணியிடங்கள் நிலையிருத்தம் தொடர்பான இருப்புக்கோப்பினை
(STOCK FILE – POSTS PERMANENT RETENTION G.Os) கொண்டு வாருங்கள் என்றேன்.
STOCK FILE (ESTABLISHMENT) என்னும் பெயரில் இருப்புக் கோப்புகள் பதிவறையில்
நாற்பதுக்கு மேல் இருக்கின்றன, ஆனால் நீங்கள் குறிப்பிடும் பெயரில்
ஒன்றைக் கூட நான் பார்த்தில்லை என்றார் !
அப்புறம்,
இருப்புக்கோப்பு (பணியிடங்கள் நிலையிருத்தம்)
(STOCK FILE – POSTS PERMANENT RETENTION G.Os) என்னும் பெயரில் ஒரேயொரு
இருப்புக் கோப்பு பேண வேண்டியதன் தேவையை எடுத்துரைத்துவிட்டு, பணியிடங்கள் நிலையிருத்தம் பற்றிய அரசாணைகளைச் சேகரித்துத் தருமாறு சொன்னேன்.
15 நாள்களில் பல அராசாணைகளைச் சேகரிக்க முடிந்தது. சில அரசாணைகள் கிடைக்கவேயில்லை !
ஒன்றுக்கு
மேற்பட்ட பயிற்சி நிலையங்களில் உள்ள சில பணியிடங்கள்
ஒரே அரசாணை வாயிலாக நிலையிருத்தம் (PERMANENT RETENTION) செய்யப்
பெற்றிருப்பது உண்டு. ஆகையால் இதுபற்றிக் குறிப்பிட்டு அனைத்துத்
தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் கடிதம் எழுதி, அரசாணையின் படியைக்
கேட்டுப் பெற வைத்தேன் !
ஒசூரில்
உள்ள அனைத்துப் பணியிடங்களுக்குமான நிலையிருத்த (PERMANENT
RETENTION) அரசாணை கிடைக்கப்பெற்றதும் அவற்றை இருப்புக்கோப்பு
(பணியிடங்கள் நிலையிருத்தம்) (STOCK FILE – POSTS PERMANENT
RETENTION G.Os) என்னும் பெயரில் இருப்புக்கோப்பு ஒன்று உருவாக்கி,
அட்டவணை எழுதி இணைத்து, அதை என் பொறுப்பில் வைத்துக் கொண்டேன்!
அடுத்ததாக,
முதல்வர் திரு.அப்துல் அமீது அவர்களிடம் கலந்துரையாடி
பணியிடங்கள் நிலையிருத்தம் (PERMANENT RETENTION) செய்தமை தொடர்பான
விவரங்களை முதல்வர் அறைச் சுவரில் 12 அடி X 6 அடி அளவில் ”நிலைப் பணியிடச் செய்திப் பலகை”
ஒன்றை ஈர்மக் கலைஞரை (NAME BOARD ARTIST) அழைத்து உருவாக்கச் செய்தேன் !
இந்தப்
பலகையில்,
(இடமிருந்து வலமாக), தொடர் எண், பணியிடத்தின் பெயர், பணியிட எண்ணிக்கை, முதன் முதல் அன்னிலையாகப் பணியிடம்
ஒப்பளிக்கப் பெற்ற அரசாணை எண்ணும் நாளும், பணியிடம் நிலையிருத்தம்
(PERMANENT RETENTION) செய்யப்பெற்ற அரசாணை எண்ணும் நாளும் ஆகிய விவரங்கள்
ஈர்மம் (PAINT) கொண்டு
எழுதப் பெற்றுள்ளன !
நிலையிருத்தம்
(PERMANENT RETENTION) செய்யப் பெறாத பணியிடங்களைப் பொறுத்த வரையில்,
கடைசி நிரல் வெட்புலமாக (VACCANT) விடப்பட்டிருக்கும்
. அந்த இடத்தில், கடைசியாகப் பணியிடம் நீட்டிப்புச்
செய்யப் பெற்ற அரசாணை (G.O.IN WHICH POST LAST CONTINUED) எண்ணும்
நாளும் அழித்தெழுதும் வகையில் சுண்ணக் காம்பினால் (CHAL PIECE) எழுதப் பெற்றிருக்கும் !
முதல்வர்
இருக்கையில் அமர்ந்தவாறே, நிலைப் பணியிடச் செய்திப்
பலகையில் உள்ள விவரங்களைப் படிக்கும் வகையில் சற்றுப் பெரிய எழுத்துகளில் எழுதப்பெற்றிருக்கும்.
1998 –ஆம் ஆண்டு உருவாக்கப் பட்ட இந்தச் செய்திப் பலகையில், நான் செய்யத் தவறிய ஒரு பணி, இந்தப் பலகையில் அடியில்
என் பெயரையும் முதல்வர் பெயரையும் பொறிக்கத் தவறியது தான் !
இன்றும்
கூட ஓசூர் செல்பவர்கள் முதல்வர் அறையில் உள்ள இந்த ”நிலைப் பணியிடச் செய்திப் பலகை” யைக் காணலாம்
! எந்த ஊரில் நான் பணி புரிந்தாலும் அங்கு என் முத்திரை இருக்கவேண்டும்
என்று விரும்பும் வழக்கமுடைய நான், ஆட்சி அலுவலர் அறையில் ”நிதி நிலைச் செய்திப் பலகை” ஒன்றையும், முதல்வர் அறையில், ”நிலைப் பணியிடச் செய்திப் பலகை” ஒன்றையும் உருவாக்கியதன்
வாயிலாக என் முத்திரையை ஓசூரிலும் பதித்துள்ளேன்
என்பதில் எனக்கு முழுமையான மனப் பொந்திகை (திருப்தி) உண்டு !
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”வேதரெத்தினம்” வலைப்பூ,
[தி.ஆ: 2053, கும்பம் (மாசி) 22]
{06-03-2022}
--------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக