தேடுக !

திங்கள், 7 மார்ச், 2022

மலரும் நினைவுகள் (66) பழகுநர் பயிற்சி உதவிப் பயிற்சி அலுவலர் அகமது பாட்சா போராட்டம் !


         (1999-ஆம் ஆண்டு  நிகழ்வுகள்)

 

ஓசூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில், பயிற்சி நிலைய  அலுவலகமும் சார்புரை மைய (R.I.CENTER) அலுவலகமும் ஒரே கட்டடத்தில் அமைந்திருக்கும். பயிற்சி நிலைய அலுவலகத்துடன், முதல்வர் அறை, ஆட்சி அலுவலர் அறை ஆகியவை இணைந்திருக்கும் ! சார்புரை மைய அலுவலகத்துடன், உதவி இயக்குநர் அறை இணைந்திருக்கும் !

 

இவையெல்லாம் தரைத் தளத்தில் (GROUND FLOOR) உள்ளவை. முதல் தளத்தில் துச்சிலும் (GUEST ROOM) சில வகுப்பறைகளும் அமைந்துள்ளன. இனை அனைத்துக்கும் தரைத்தள நுழைவாயில் (ENTRANCE) ஒன்று தான் !

 

ஒரு நாள் பழகுநர் பயிற்சி உதவிப் பயிற்சி அலுவலர் திரு. அகமது பட்சா பழகுநர் பயிற்சி மாணவர்கள் சற்றேறக் குறைய 50 பேரை அழைத்துக்கொண்டு வந்து  பயிற்சி நிலைய அலுவலகக் கட்டட வாயிலை மறித்து மாணவர்களை நிற்கவைத்து உதவி இயக்குநர் திரு.இரவிச் சந்திரனுக்கு  எதிராக முழக்கங்கள் எழுப்பிக் கொண்டிருந்தார் !

 

உதவிப் பயிற்சி அலுவலர் முழக்கத்தைச் சொல்லச் சொல்ல மாணவர்கள் அதைத் உரக்கத் திருப்பிச் சொல்லிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மாணவர்களைத் தூண்டிவிட்டு, ஒரு அலுவலர் தன் மேல் அதிகாரிக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது என்பது முற்றிலும்  தவறான செயல். அரசு அலுவலர் நடத்தை விதிகளை மீறிய செயல் !

 

ஒரு அலுவலருக்கு ஏதேனும் குறைபாடுகள் இருக்குமானால், தனது மேலதிகாரியிடம் நேரில் சொல்லி அதற்குத் தீர்வு காணவேண்டும். அதற்கு மாறாக மாணவர்களை அழைத்துக்கொண்டு வந்து  அவருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுவதும், முழக்கங்கள் எழுப்புவதும் அரசு அலுவலராக  அவர் பதவி வகிப்பதற்கான தகுதியையே கேள்விக்கு  உரியதாக ஆக்குகிறது !

 

முதல்வர் அறைக்கு நான் சென்று முதல்வர் திரு.அப்துல் அமீது அவர்களிடம், பழகுநர் பயிற்சி உதவிப் பயிற்சி அலுவலர் திரு.அகமது பாட்சாவின்  போராட்டம் பற்றியும், அலுவலகக் கட்டடத்துக்குள் வேறு அலுவலர்கள் யாரும் வரவோ வெளியேறவோ முடியாதபடி வாயிலை மறித்துக்கொண்டு நிற்பது பற்றியும் கலந்து பேசினேன். சற்று நேரத்தில் உதவி இயக்குநரும் முதல்வர் அறைக்கு வந்து எங்களுடன் நிலைமை பற்றிக் கலந்துரையாடினார் !

 

பயிற்சி நிலையத்தின் அலுவலக வாயிலில் நடக்கும் போராட்டம் என்பதால், முதல்வர் அதில் தலையிடாமல் இருக்கமுடியாது என்பதை அவரிடம் எடுத்துரைத்தேன். முதல்வர், உதவி இயக்குநர், நான் மூவரும் சென்று, முழக்கமிட்டுக் கொண்டிருக்கும் மாணவர்களிடம் பேசலாம். அவர்கள் குறை என்னவென்பதைக் கேட்கலாம் என்று சொன்னேன் !

 

முதல்வர் திரு.அப்துல் அமீது அவர்கள்,  வாருங்கள் அவர்களிடம் சென்று பேசுவோம்என்று கூறி, எங்களையும் அழைத்துக் கொண்டு வாயிலுக்கு வந்தார். எங்களைக் கண்டதும் உதவிப் பயிற்சி அலுவலரின் முழக்கம் இன்னும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. அந்த முழக்கத்திற்கிடையே, முதல்வரால் பேச முடியவில்லை !


நான் சற்று முன்னால் சென்று, மாணவர்களைப் பார்த்து, உங்கள் கோரிக்கை என்ன என்பதை உதவி இயக்குநரிடம் சொல்லுங்கள் என்று கூறினேன். இதனால் வெகுண்ட உதவிப் பயிற்சி அலுவலர், எங்கள் மூவரையும் பற்றி ஒருமையில் மதிப்புக் குறைவாகப் பேசத் தொடங்கினார் !

 

எங்களை நெருங்கி வந்தால் நான் சும்மா இருக்க மாட்டேன், அப்புறம் என்ன நடக்கும் என்று எனக்கே தெரியாது என்று அவர் மிரட்டலானார். பொறுப்பில்லாத ஒரு அலுவலரிடம் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் என்ன பேசினாலும் எடுபடாது ! 


எனவே முதல்வரையும் உதவி இயக்குநரையும் அழைத்துக் கொண்டு முதல்வர் அறைக்குத் திரும்பினேன். முதல்வரிடம் சொல்லி, இது சட்டம் ஒழுங்குச் சீர்குலைவுக்கு வழி வகுத்துவிடும், உடனே காவல் துறையினரை வரவழைத்து அமைதியை நிலைநாட்டுங்கள் என்று கருத்துச் சொன்னேன் !

 

காவல் துறையினர் வந்ததும், அவர்கள் பழகுநர் பயிற்சி மாணவர்களை அழைத்து முதல்வர் அறையில் தரையில் அமர வைத்து  என்ன நடந்தது என்று உசாவலாயினர். காவல் துறையினர் வருகை மாணவர்களிடம் சற்றுத் துணிச்சலையும் அதே நேரத்தில் அச்சத்தையும் ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் நான் குறுக்கிட வேண்டியதாயிற்று !

 

உங்களுக்குப் பாடம் சொல்லித் தரும் ஒரு அலுவலர் தான் உதவிப் பயிற்சி அலுவலர், உங்களுக்கு மேலதிகாரி, உதவி இயக்குநர் தான், உங்கள் கோரிக்கை எதுவாக இருந்தாலும் நீங்கள் அவரிடம் தான் சொல்ல வேண்டும், வாயிலை மறித்துக்கொண்டு முழக்கம் எழுப்புவது தவறு, எனவே அச்சமின்றி நடந்ததை நடந்தபடிக் காவல் அதிகாரிகளிடம் சொல்லுங்கள் என்று பழகுநர் பயிற்சி மாணவர்களிடம், கூறினேன் !

 

அவர்கள் மெல்ல அச்சத்திலிருந்து விடுபட்டு, “ஐயா, உதவிப் பயிற்சி அலுவலருக்கு உதவி இயக்குநர் மேல் என்ன கோபமோ எங்களுக்குத் தெரியாது, ஆனால் அவர் எங்களிடம், தொழிற் தேர்வில் உங்களுக்கு மதிப்பெண் அளிக்கப்போவது நான் தான், எனவே நான் சொல்கிறபடி கேட்கவில்லை என்றால் நீங்கள் அகில இந்திய பழகுநர் பயிற்சித் தேர்வில் தோல்வியுறச் செய்துவிடுவேன் என்று கூறி, எங்களை அழைத்து வந்து வாயிலில் முழக்கமிடச் செய்தார், மற்றபடி எங்களுக்கு வேறு எந்தக் குறையுமில்லைஎன்று கூறினர் !

 

மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் ஆளுக்கு ஒரு வெள்ளைத் தாள்  கொடுக்கச் சொல்லி, என்ன நடந்தது என்பதை இந்தத் தாளில் எழுதி உதவி இயக்குநரிடம் கொடுங்கள் என்று கூறினேன் !

 

(தொடரும்) (1/3)

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

வேதரெத்தினம்வலைப்பூ,

[தி.ஆ: 2053, கும்பம் (மாசி) 23]

{07-03-2022}

------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக