தேடுக !

ஞாயிறு, 13 மார்ச், 2022

மலரும் நினைவுகள் (70) பண்டகத்தில் ஒளிந்து கொண்ட பணி மனை உதவியாளர் !


            (2000-ஆம் ஆண்டு  நிகழ்வுகள்)

 

2000 – ஆம் ஆண்டு. ஒரு நாள் மாலை மணி 5-30. அன்று  ஏதோ சில வேலைகள் இருந்தமையால் வீட்டிற்குப் புறப்படுவதைச் சற்று ஒத்தி வைத்துவிட்டு என் அறையில் அமர்ந்து பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன் விடுதிக் கண்காணிப்பாளர் திரு.செல்வராசு அரக்கப் பரக்க ஓடி வந்து ஒரு செய்தியை என்னிடம் சொன்னார் !

 

பணிமனை உதவியாளர் திருமதி……………பண்டகத்திற்குள் ஒளிந்து கொண்டிருக்கிறார். பண்டகக் காப்பாளர் அதைக் கவனிக்காமல்  பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார். தொலைவிலிருந்து இரவுக் காவலர் திரு.இராசகோபால் இந்தக் காட்சியைப் பார்த்துவிட்டுச் செய்வதறியாது திகைத்துப் போய் என்னிடம் வந்து நடந்தவற்றை விவரித்தார்”. விடுதிக் கண்காணிப்பாளர் சொன்ன செய்தி இது தான் !

 

குறிப்பிட்ட இந்த பணிமனை உதவியாளர் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர். கிருட்டிணகிரியை அடுத்துள்ள ஒரு ஊரில் அவரது கணவர் வாழ்ந்து வந்தார். அது தான் அவரது சொந்த ஊரும் கூட. வார இறுதி நாள்களில் கணவருடைய  ஊருக்குச் சென்று அவருடன் வாழ்ந்து வந்த அவர் பிற நாள்களில் ஓசூரிலேயே அறை எடுத்துத் தங்கி வந்தார். காலப் போக்கில் கணவருடன் வாழும் நாள்கள் குறைந்து, ஓசூரிலேயே தங்கும் நாள்கள் அதிகமாயிற்று !

 

இதன்விளைவாக இருவருக்கும் இடையே நெருக்கம் குறைந்து விலக்கம் மிகுதியாகி வந்திருக்கிறது. விலக்கம் மிகுதியாக மிகுதியாக, சந்தேகக் கோடும் இருவருக்கும் இடையே படியத் தொடங்கி, குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியை விழுங்கிவிட்டது ! அவர் கணவர் தன் ஊரில் சொந்தமாக வேளாண்மை செய்து வந்ததாக எனக்கு நினைவு. இருந்தாலும் தன் மனைவியை இப்படியே விட்டுவிட அவர் விரும்பவில்லை !

 

ஒருநாள், கணவர் ஐந்தாறு ஆட்களுடன்  இரண்டு மகிழுந்துகளையும் (CAR) எடுத்துக்கொண்டு ஓசூருக்கு வந்து பயிற்சி நிலையத்தின் முன்புறமுள்ள பேருந்துச் சாலையில் காத்திருந்தார். மாலையில் பணி நேரம் முடிந்ததும் தன் மனைவி தனது அறைக்குச் செல்ல வெளியில் வருவார், அப்போது அவரை மடக்கிப் பிடித்து மகிழுந்தில் ஏற்றித் தன் ஊருக்குக்  கொண்டு சென்றுவிட வேண்டும் என்பது அவரது திட்டம் !

 

இதை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட பணிமனை உதவியாளர், பணி நேரம் முடிந்ததும் வெளியில் செல்லாமல் இரவு பணிமனைக்கு உள்ளேயே தங்கிவிட்டால், தனது கணவர் தன்னைக் காணாமல் ஊருக்குத் திரும்பிச் சென்றுவிடுவார் என்று கணக்குப் போட்டார். பணிமனையைவிடப் பண்டகம் தான் ஒளிந்து கொள்ள சாலச் சிறந்தது என்று நினைத்த அவர், பண்டகக் காப்பாளருக்குத் தெரியாமல் பண்டகத்திற்குள் நுழைந்து பதுங்கிவிட்டார் !

 

இந்தக் காட்சியை இரவுக் காவலர் கவனித்து விட்டார். அவர் பண்டகக் காப்பாளரிடம் செய்தியைச் சொல்லும் முன் அவர் பண்டகத்தைப் பூட்டிவிட்டு, தன் வண்டியில் ஏறி வீட்டிற்குச் சென்றுவிட்டார். இரவுக் காவலர் தன் மேலதிகாரியான விடுதிக் கண்காணிப்பாளரிடம் செய்தியைச் சொல்ல, அவர் முதல்வரிடம் சொல்லலாம் என்று அலுவலகத்திற்கு வந்திருக்கிறார். முதல்வர் வீட்டிற்குச் சென்றுவிட்டதால் என்னிடம் வந்து செய்தியைச் சொன்னார் !

 

அலுவலகத்தில் இரண்டொருவர் தவிர ஏனைய அனைவரும் பணி நேரம் முடிந்துவிட்டதால் என்னிடம் வந்து சொல்லிவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டனர். பணிமனையிலும் ஒருவரும் இல்லை. இரவுக் காவலரை அழைத்து, பண்டகக் காப்பாளர் வீட்டிற்குச் சென்று அவரிடம் செய்தியைச் சொல்லி, திறவுகோலுடன் அவரையும் வருமாறு நான் அழைத்ததாகச் சொல்லச் சொன்னேன். இதற்கிடையில் மத்திகிரி காவல் நிலையத்திற்குத் துழனி (PHONE) மூலம் செய்தியைச் சொல்லி உதவி ஆய்வாளரையும் சில காவலர்களையும் வரவழைத்தேன் !

 

பண்டகக் காப்பாளர் வீட்டில் இல்லை என்றும் எங்கு சென்றார் எனத் தெரியவில்லை என்றும் அவர் வீட்டில் உள்ளோர் சொன்னதாக இரவுக் காவலர் என்னிடம் வந்து சொன்னார். காவல் உதவி ஆய்வாளரை அழைத்துக்கொண்டு பணிமனை வழியாகப் பண்டக அறையின் துணை வாயிலுக்கு (WOODEN DOOR WAY) சென்றேன். அங்கு, இரவுக் காவலரிடம்பணி மனை உதவியாளர் உள்ளே சென்றதை உன் கண்களால் பார்த்தாயாஎன்று மீண்டும் ஒருமுறை கேட்டு உறுதி செய்துகொண்டபின், உதவி ஆய்வாளர் முன்னிலையில் பண்டகப் பூட்டை உடைக்கச் சொன்னேன் !

 

பூட்டை உடைத்து உள்ளே சென்றதும், அங்கு படுத்திருந்த பணிமனை உதவியாளர் எழுந்து வந்தார். அவரை அழைத்துக்கொண்டு வெளியே வந்ததும், வேறு பூட்டு இல்லாததால், ஒரு தாளில் என் கையெழுத்தைப் போட்டு, கதவைத் திறந்தால் தாள் கிழியும் வண்ணம் இரண்டு கதவுகளையும் இணைத்து ஒட்டச் செய்தேன். அங்கிருந்து அனைவரும் பயிற்சி அலுவலர் அறைக்கு வந்தோம் !

 

பணிமனை உதவியாளரிடம், என்ன பிரச்சனை, ஏன் இப்படிச் செய்தாய் என்று உதவி ஆய்வாளர் முன்னிலையில் கேட்டபோது அவர் எதுவும் கூறாமல் வாய்மூடி நின்றார். உதவி ஆய்வாளர் கேட்டதற்கும் அவர் ஒன்றும் கூறாமல் மௌனமாகவே நின்றார். “உன்னைச் சூழ்ந்திருக்கும் சிக்கல் என்னவென்று ஓரளவு எனக்குத் தெரியும்” !


”உன் குடும்பத்தில் நிலவும் குழப்பங்களுக்கெல்லாம் எங்களால் தீர்வு சொல்ல முடியாது. அது எங்கள் வேலையும் அல்ல. இரவு நேரத்தில் தங்குவதற்காக பண்டகத்தில் ஒளிந்து கொண்டது பெரிய குற்றம். நீ பண்டகத்தினுள் தற்கொலை செய்துகொண்டிருந்தால், முதல்வர் அல்லவா சிக்கலுக்கு உள்ளாவார்” !

 

மூன்று மாதம் விடுப்புக் கேட்டு விண்ணப்பம் எழுதி என்னிடம் கொடுத்துவிட்டு ஊருக்குச் செல். அங்கு போய் உன் குடும்பப் பிரச்சனைகளை எல்லாம் தீர்த்துக்கொண்டு அப்புறம் பணிக்கு வா. இதற்கு நீ உடன்படாவிட்டால், நாளைக் காலை பணியிலிருந்து இடைநீக்கம் (SUSPENSION) செய்யப்படுவாய்என்று அவரிடம் கண்டிப்புடன் தெரிவித்தேன் ! 


உதவி ஆய்வாளரும் ஆட்சி அலுவலர் சொன்னபடிச் செய்; இல்லையேல் தற்கொலைக்கு முயன்றதாக உன் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்று தன் குரலில் கடுமை காட்டினார் !

 

பணிமனை உதவியாளருக்கு வேறு வழியில்லை. மூன்று மாதம் விடுப்புக் கேட்டு, விண்ணப்பம் எழுதி என்னிடம் கொடுத்துவிட்டு, வெளியில் சென்றார். காவல் துறையினரின் வருகையை அறிந்து, அவரது கணவரும் அவர் அழைத்து வந்த ஆள்களும் தப்பிச் சென்றுவிட்டனர். வெளியில் சென்ற பணிமனை உதவியாளர் தன் அறைக்குச் சென்றுவிட்டார் !

 

மறு நாள் முதல்வர் அவர்கள் அலுவலகத்திற்கு வந்ததும், நடந்தவற்றை அவரிடம் விளக்கமாக எடுத்துரைத்தேன். சரியான நடவடிக்கை எடுத்தீர்கள் என்று அவர் மகிழ்ச்சியடைந்தார். பின்பு நடந்த நிகழ்ச்சிகளை விவரித்து இணை இயக்குநருக்கு நேர்முகக் கடிதம் எழுதி, பணிமனை உதவியாளரை வேறு ஊருக்கு மாற்றுமாறு முதல்வர் கேட்டுக்கொண்டார். அடுத்த ஒரு வாரத்தில் அவர் தூத்துக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலயத்திற்கு இடமாற்றல் செய்யப்பட்ட ஆணை கிடைத்தது !

 

இளைதாக முள்மரம் கொல்க; களையுநர்

கைகொல்லும் காழ்த்த விடத்து. (குறள்.879)

 

முள் மரத்தை இளைதாக இருக்கும் போதே வெட்டிவிட வேண்டும். மாறாக காழ்ப்பு ஏறி முதிர்ந்த பின்பு வெட்ட நினைத்தால், அது வெட்ட முயல்பவர் கைகளையே காயப்படுத்திவிடும் !

 

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

வேதரெத்தினம்வலைப்பூ,

[தி.ஆ: 2053, கும்பம் (மாசி) 27]

{11-03-2022}

-------------------------------------------------------------------------------------

 

 

 

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக