(2001-ஆம் ஆண்டு நிகழ்வுகள்)
தமிழ்க்
குலத்தில் பிறந்திருக்கும் கோடிக்கணக்கான மக்களை ஒருவரோடொருவரை ஒப்பிட்டுப்
பார்த்தால், ஒருவர் முகம் போல் இன்னொருவர் முகம் இருக்காது.
ஒருவர் நிறத்துடன் இன்னொருவர்
நிறம் ஒத்துப் போகும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஒருவர்
உடுத்துவது போல் இன்னொருவரும் உடுத்துவார் என்றும் நம்பிக்கையாகச் சொல்லிவிட முடியாது
! ஆனால் அனைவர் உடலிலும் ஓடும் குருதி மட்டும் ஒன்று போல் சிவப்பாகவே
இருக்கிறது என்பது மட்டும் அனைவரும் ஒப்புக்கொள்ளும் உண்மை !
அனைவர்
உடலிலும் தமிழ் மரபின் சாயல் படிந்து கிடக்கிறது. அனைவர்
நாவிலும் தமிழ் தான் தாண்டவமாடுகிறது. இவ்வாறு அகத்தில் ஒற்றுமையும்
புறத்தில் வேற்றுமையும் மலிந்து கிடக்கும் அனைவரையும் ஒருங்கிணைக்கும் நூலிழை தான்
“தமிழன்” என்னும் அடையாளம் !
இத்தகைய
தமிழ்க் குடியில், பிறந்திருக்கும் நம்மில்,
நானும் நீங்களும் படிப்பால் வேறுபடலாம், செய்கின்ற
பணியால் வேறுபடலாம், ஏற்றிருக்கும் பணிப் பொறுப்பில் உள்ள ஏற்றத்
தாழ்வால் வேறுபடலாம்; ஆனால் “தமிழன்”
என்னும் உணர்வால் இருவருமே ஒன்று படுகிறோம் !
இந்த
உண்மையை உணராமல் நான் உயர்ந்தவன், நீ என்னைவிடத் தாழ்ந்தவன்
என்று வேறுபாடு கற்பித்துக்கொண்டு அங்கொருவர் இங்கொருவர் எனச் சிலர் வாழ்ந்து வருவது அறியாமையின்
உச்சம் என்றே கருதுகிறேன் !
அலுவலகத்தில்
பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களைத் தம்மைவிடத் தாழ்ந்த குலத்தினராகக்
கருதும் பேதைமை தொழில்நுட்ப அலுவலர்கள் சிலரிடம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.
அதுபோல் அலுவலகப் பணியாளர்களில் சிலர் தொழில்நுட்ப அலுவலர்களைத் தம்மைவிடத் தாழ்ந்த குலத்தினராகக் கருதும்
பேதைமை நிலையும் சில இடங்களில் இருக்கவே செய்கிறது !
ஆட்சி
அலுவலர்களைத் தமக்குச் சமமானவர்கள் என்று கருதாத முதல்வர்கள் சிலரும் – சிலர் தான் - இன்னும் இருக்கவே செய்கிறார்கள்.
இந்த பேதைமை நிலை எப்போது
மறையுமென்று எனக்குத் தெரியவில்லை ! வேலை வாய்ப்பு பயிற்சித் துறை மட்டுமல்ல, அனைத்துத் துறைகளிலும்
தொழில் நுட்ப அலுவலர்கள், தொழில் நுட்பம் சாரா அலுவலர்கள்
(அமைச்சுப் பணியாளர்கள்) என்னும் வேறுபாடு பார்ப்போர்
இருக்கவே செய்கிறார்கள் !
------------------------------------------------------------
வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர் !
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும் !
சாம்பல் நிறத்தொரு குட்டி,
கரும் சாந்தின் நிறம் ஓரு குட்டி,
பாம்பின் நிறமொரு குட்டி,
வெள்ளைப் பாலின் நிறம் ஓரு குட்டி !
எந்த நிறமிருந்தாலும்,
அவை யாவும் ஒரே தரம் அன்றோ !
இந்த நிறம் சிறிதென்றும்,
இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ ?
வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால்,
அதில் மானுடர் வேற்றுமை இல்லை !
எண்ணங்கள் செய்கைகள் யாவும்,
இங்கு யாவர்க்கும் ஒன்றெனக் காணீர் !
---------------------------------------------------------------
பாரதியாரின்
இந்தப் பாடலை, ஒருவர்க்கொருவர் ஏற்றத் தாழ்வு கற்பித்துக்
கொண்டு பார்க்கும் இந்தப் பண்பாடில்லாத
மனிதர்கள் படித்தது இல்லையா ?
”பதவி” என்பது மக்களுக்குச் சேவை செய்ய அரசு கொடுத்திருக்கும் ஒரு நாற்காலி. அதில் அமர்ந்திருக்கையில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று ஒருவர்க்கொருவர் பேதம் பார்க்கலாகாது. நான் உயர்ந்தவன் என்று வாதிட்டு நிறுவுவதால் உனக்குக் கிடைப்பதும் ஒன்றுமில்லை ! நான் தாழ்ந்தவன் என்று ஒப்புக்கொண்டு விலகிச் செல்வதால் நீ இழக்கப் போவதும் ஒன்றுமில்லை !
மனிதன் மனிதனாக இருக்கும் வரை தான் அவனுக்கு இந்தக் குமுகாயத்தில் (SOCIETY) மதிப்பு ! மனிதன் மனிதத்தை இழந்து விட்டால் அவனும் விலங்கும் ஒன்றே தான்; இருவர்க்கும் தோற்றத்திலன்றி பிறவற்றில் வேறுபாடு ஏதுமில்லை !
2001
– ஆம் ஆண்டு ஏப்ரல் 30
– பணியிலிருந்து நான் ஓய்வு பெற வேண்டிய நாள். எனக்கு முன்னதாக சில மாதங்கள் அல்லது சில ஆண்டுகள் முன்னதாக ஓய்வு பெற்ற
அலுவலர்கள் சிலர் பணிமனைக்கு வந்து தம் மேனாள் நண்பர்களுடன் உரையாடிக்
கொண்டிருக்கையில், என்னைப் பற்றிய பேச்சு வந்திருக்கிறது.
இந்த ஆட்சி அலுவலரின் பணிக்காலம் அனைத்து அலுவலர்களுக்கும் ஒரு பொற்காலமாகவே
திகழ்ந்திருக்கிறது !
ஓய்வூதியப்
பலன்களைத் துல்லியமகக் கணித்து, தொகை விவரத்தைச் சீட்டில்
எழுதிக்கொடுத்த அவரது அணுகுமுறை ஓய்வு பெறுவோர்க்குத் தம் எதிர்காலச் செலவுகளைத்
திட்டமிட மிகவும் உதவியாக இருந்திருக்கிறது. வைப்புநிதியிலிருந்து
(G.P.F) முன்பணம் கேட்டுக் காலையில் விண்ணப்பம் தந்து
மாலையில் பணம் பெற்ற வரலாறு இவரது ஆளுமைக் காலத்தில் தான் நடந்திருக்கிறது.
தொழில்நுட்ப அலுவலர், தொழில் நுட்பம் சாரா
அலுவலர் என்னும் பாகுபாடு பாராமல் அனைவர்க்கும் நல்லதையே செய்து வந்த அவர் இம்மாத
இறுதியில் ஓய்வு பெறவிருக்கிறார் !
அவரது பணி ஓய்வு விழாவைச் சிறப்பாக நடத்தி – இதுவரையில் யாருக்கும் நடக்காத அளவில் – மிகச் சிறப்பாக நடத்தி அவரை வழியனுப்பி வைக்க வேண்டும். அதற்கு நாமெல்லாம் சேர்ந்து நிதி திரட்டி நினைவுப் பரிசும் அளிக்க வேண்டும். ஓய்வு பெற்ற அலுவலர்கள் நாங்கள் நால்வர் வந்திருக்கிறோம் !
எங்கள் சார்பில் ஆளுக்கு உருபா
ஆயிரம் தருகிறோம். சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்யுங்கள்
என்று பயிற்சி அலுவலர் திரு.மாதவன் மற்றும் திரு.கைலாசம் ஆகியோரிடம் கோரிக்கை
வைத்திருக்கிறார்கள் !
அவர்கள்
பேச்சைக் கேட்டு திரு.மாதவன் வெகுண்டு போனார் !
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”வேதரெத்தினம்” வலைப்பூ,
[தி.ஆ: 2053, கும்பம் (மாசி) 28]
{12-03-2022}
-----------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக