(1972 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்)
1972 – ஆம் ஆண்டு சூலை 2-ஆம் நாள் என் திருமணம். திருணத்தை முன்னிட்டு 20 நாள் அளவுக்கு ஈட்டிய விடுப்புக் கோரியிருந்தேன். பயிற்றுநர்களுக்கு சுற்றுக் குறிப்பாணை மூலம் செய்தி தெரிவிக்கப்பட்டு, தங்கள் பிரிவுக்கு வேண்டிய பொருள்களை முன்னதாகவே போதுமான அளவுக்கு வாங்கி வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர் !
அனைத்துப் பிரிவுப் பயிற்றுநர்களும் தங்களுக்குத் தேவையான
பொருள்களைத் தேவைச் சீட்டுகள் மூலம் பெற்றுச் சென்றுவிட்டனர். பண்டகத்தின்
பூட்டுக்கு அரக்கு முத்திரை இட்டேன் !
திருமண அழைப்பிதழை நானே எழுதி வடிவமைத்திருந்தேன். இலக்கண
முறைப்படி நேரிசை ஆசிரியப் பா வடிவில் அமைந்திருந்த அந்த அழைப்பிதழின் வரிகள் வருமாறு:-
பெருந்தகை வள்ளுவர் பெயரால் நிகழும்,
ஈரா யிரத்துமூன் றென்றுரை யாண்டில்,
ஆனித் திங்கள் ஆனபத் தொன்பது,
ஞாயிறு காலை நற்கதிர் தோன்றி,
ஐயிரு நாழிகை அளவில் செல்வி,
கலைச்செல் விதனைக் கைத்தலம் பற்றி
வாழ்க்கைத் துணையாய் வரித்திட உள்ளேன் !
ஆன்றவிந் தடங்கிய
அருமைச் சான்றீர் !
மனங்கவர் நண்பீர் ! மகளீர் ! கிளையீர் !
அன்புடன் எனதிவ் வழைப்பினை ஏற்றுச்
சீர்மணம் நிகழும் சேரன் குளமாம்
ஊரகம் வருக ! உறுமெய் யன்பால்
இல்லறம் ஏற்றிடும் எமக்கு
நல்லறம் காட்டி
நல்வாழ்த் தருள்கவே !
--------------------------------------------------------------------------------------
அன்புடன்,
வை.வேதரெத்தினம்
--------------------------------------------------------------------------------------
மணவினை
நிகழ்நாள்: வள்ளுவராண்டு 2003,ஆனி,19,
ஞாயிறு (02-07-1972) காலை 10-00 மணி
மணவினை
நிகழ்விடம்: மன்னார்குடியிலிருந்து கிழக்கில் 4 கல் தொலைவிலுள்ள சேரன்குளம்.
--------------------------------------------------------------------------------------
அச்சிட்டிருந்த திருமண அழைப்பிதழை எடுத்து சென்று முதல்வர் Captain N.C.கணேசன் அவர்களிடம் கொடுத்து, திருமணத்திற்கு வருமாறு அழைத்தேன். வாழ்த்துச் சொன்ன அவர் பண்டகத்தின் திறவுகோலினைத் தன்னிடம் கொடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார் !
பயிற்சிப் பிரிவுகளுக்குத் தேவையான பொருள்களை முன்னதாகவே
எடுத்துக் கொள்ளச் சொல்லிச் சுற்றறிக்கை விடுத்து, அவர்களும்
தேவையான பொருள்களை எடுத்துச் சென்றிருக்கிறார்கள் என்பதை முதல்வருக்குத் தெரிவித்தேன். அவரும், “ஆம் ! தெரியும் ! இருந்தாலும்
அவசர நேர்வுகளில்
ஏதாவது பொருள் தேவைப்பட்டால் என்ன செய்வது ? அதற்காகத் தான் கேட்கிறேன்” என்றார் !
”மன்னித்துவிடுங்கள். நான்
சில கொள்கைகளையும் நெறிமுறைகளையும் கடைப்பிடித்துப்
பணியாற்றி வருகிறேன். என் கொள்கைகளின் படி, பண்டகத்தின்
திறவுகோலை நான் யாரிடமும் தருவதற்கில்லை”. ”விடுப்புத் தரமுடியாது
என்று சொல்லுங்கள். ஈட்டியவிடுப்புக் கோரிக்கையை விலக்கிக் கொண்டு, இரண்டு
நாள் தற்செயல் விடுப்பில் சென்று திருமணத்தை முடித்துக் கொண்டு பணிக்குத் திரும்புகிறேன்” என்றேன் !
என் மறுமொழி அவரை மிகவும் சங்கடப் படுத்திவிட்டது போலும் ! “வேண்டாம் ! வேண்டாம் ! ஈட்டிய
விடுப்பில் ஊருக்குச் சென்று நல்லபடியாகத் திருமணம் நிறைவேறிய பிறகு பணிக்கு வாருங்கள். அவசரத்
தேவை ஏதும் ஏற்பட்டால்,
நான் மாற்று வழிகளில் அதைச் சமாளித்துக் கொள்கிறேன். கவலைப்
படவேண்டாம். சென்றுவாருங்கள். நல்வாழ்த்துகள்” என்று
விடைகொடுத்தார் !
ஆனாலும்,
ஒருசில அலுவலர்களிடம் என்னைப் பற்றியும், பண்டகத்தின்
திறவுகோலைத் தர மறுத்தமை பற்றியும் எடுத்துச் சொல்லி, ”என்
பணிக்காலத்தில் இவ்வாறு எந்த அலுவலரும் எதற்காகவும் என்னிடம் மறுப்புச் சொன்னதில்லை” என்று
ஆதங்கப் பட்டதாகவும் பிறகு கேள்விப்பட்டேன் !
அவர் அவ்வாறு ஆதங்கப்பட்டாலும், மேற்கொண்டு
அந்த அலுவலர்களிடம் என்ன
சொல்லியிருக்கிறார் தெரியுமா
? “பண்டகத்தில் பகுப்பலகீட்டை (Unitization) நடைமுறைப் படுத்தி ஒரு சிறப்பங்காடி (Super market ) போல மிகச் சிறப்பாகப் பேணி வருகிறார். அது
குலைந்துவிடக் கூடாது என்று அவர் கவலைப்படுவதிலும் ஒரு ஞாயம் இருக்கத்தான் செய்கிறது. திறவு
கோலைத் தர மறுத்தது அவரது கோணத்திலிருந்து பார்க்கும் போது முற்றிலும்
ஞாயமே!”
-----------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”வேதரெத்தினம்” வலைப்பூ.
[தி.ஆ: 2052, துலை (ஐப்பசி) 30]
{16-11-2021}
------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக