(1972 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்)
திருமணத்திற்குத் திருச்சியிலிருந்து நிரம்ப அலுவலர்கள் வந்திருந்தனர். பல ஊர்களிலிருந்தும் வாழ்த்துச் செய்திகள் வந்திருந்தன. வாழ்த்துச் செய்திகள் அனைத்தையும் ஒரு புதையலைப் போல் இன்றும் பாதுகாத்து வைத்திருக்கிறேன் !
மலரும் நினைவுகள் பகுதி (11)-ல் அகத்தணிக்கைக் குழுவின் கண்காணிப்பாளர் திரு.எஸ்.வி.இரமணி அவர்கள் புதுக்கோட்டைக்குத் தணிக்கைக்கு 1969 –ஆம் ஆண்டு வந்திருந்தது பற்றிக் குறிப்பிட்டு, அவருக்கு நான் அளித்த கவிதைப் பரிசு பற்றியும் சொல்லியிருந்தேன். அவர் என் திருமணத்திற்கு அனுப்பிய வாழ்த்துச் செய்திக் கடிதத்தை நிழற்படம் எழுத்து உங்கள் பார்வைக்கு வைத்திருக்கிறேன் !
அன்புக்குரியவர்களின் வாழ்த்துக்கு ஒரு வலுவுண்டு. திரு.எஸ்.வி.இரமணி
போன்றோரின் நல்வாழ்த்துகளின் வலுவோடு கடந்த 2-7-2021 அன்று
என் திருமணநாள் பொன்விழாவைக் கொண்டாடியிருக்கிறேன். இதை
நான் பெற்ற நற்பேறாகவே கருதுகிறேன்
!
“வாழ்க” என்னும்
சொல்லுக்கு நிரம்பவும் வலுவுண்டு என்பது என் கருத்து. வாழ்நாளெல்லாம் “வாழ்க, வாழ்க” என்னும்
குரல் மழையில் குளித்தெழுகின்ற தலைவர்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்ந்திருக்கிறார்கள்; வாழ்ந்து
வருகிறார்கள்; வாழ்வார்கள் என்பது என் நீண்ட நாள் ஆய்வின் முடிவு !
இதனால் தான் ” ITI “ முகநூலிலும், ”வேலைவாய்ப்பு
பயிற்சித் துறை ஓய்வு பெற்ற அலுவலர்கள் இணையம்” என்னும்
முகநூலிலும் பிறந்த நாள் செய்திகளை வெளியிட்டு நானும் வாழ்த்துகிறேன்; பிறரையும்
அதில் பங்கு கொள்ளச் செய்கிறேன்
!
திருமணங்களுக்கு நாம் செல்வதன் நோக்கம், மணமக்களை “வாழ்க, வாழ்க, வளமோடு
வாழ்க, நலமோடு வாழ்க” என்று வாய்திறந்து
வாழ்த்துவதற்குத் தான்.
வாய் திறந்து வாழ்த்தி மஞ்சள் கலந்த அரிசியை மணமக்கள் மீது
தூவுவதை இன்றும் நான் தவறாது கடைப்பிடித்து வருகிறேன். மணமக்களை ”வாழ்த்தியருளுங்கள்” என்று
அழைப்பிதழில் அச்சிட்டு நம்மை அழைக்கிறார்கள். வாயார
“வாழ்த்தியருளாமல்” விருந்து
மட்டும் சாப்பிட்டுவிட்டு வருவது
எத்துணைப் பெருந்தவறு என்பதைப் பெரும்பாலானோர் எண்ணிப் பார்ப்பதில்லை !
இம்முகநூலில் உறுப்பினர்களாக இருக்கும் நண்பர்களின் பிறந்த
நாள் தெரிந்தால் அவர்களுக்குப் பிறந்த நாள் செய்தியை வெளியிடுகிறேன். இதனால்
எனக்கு ஆதாயம் ஏதுமுண்டா
? இல்லை ! ஆனால்
மனதால் மகிழ்ச்சி அடைகிறேன்.
என் வாழ்த்தினால், வாழ்த்துப்
பெறுபவருக்கு வாணாள் (ஆயுள்)
பெருகிடும் என்று நம்புகிறேன் !
வாழ்த்துவதால் ஒருவரது வாணாள் பெருகிடுமா ? உங்களுக்கு
ஐயம் ஏற்படலாம் ! ஐயமே வேண்டாம் ! வாழ்த்துவதால் வாணாள் பெருகிறது என்னும் உண்மையை உணராமலா
பிறந்த நாள், மணநாள்,
பண்டிகை நாள்களில் நம் பெற்றோரும், உற்றார்
உறவினரும், பெரியோரும், நம்மை வாழ்த்துகிறார்கள் ! நாம்
அவர்கள் காலில் விழுந்து வாழ்த்துப் பெறுகிறோம் ! காலில்
விழுதலும் வாழ்த்துதலும் வெறும் சடங்குகளல்ல; அவற்றில்
உண்மை இருக்கிறது ! பொருளிருக்கிறது !
பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியை இம்முகநூலில் நான் வெளியிடும்போது, அந்த
வாழ்த்தில் இனி
நீங்களும் தவறாது
பங்கு கொள்ளுங்கள். வாழ்த்துவதற்கு
அறிமுகம் தேவையில்லை; உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே வாழ்த்துச் சொல்ல
வேண்டும் என்று எந்த நியதியும் இல்லை. மனமிருந்தால் போதும் ! வெறுமனே
விருப்பக்குறி (LIKE) இடாமல்
“வாழ்க பல்லாண்டு” என்று
பின்னூட்டம் செய்து வாழ்த்துங்கள்!
உங்கள் பிறந்த நாளைப் பட்டியலிட்டுச் சேமித்து வைத்திருக்கிறேன். அது
நீங்கள் தந்ததாகவும் இருக்கலாம்;
உங்கள் முகநூல் பக்கத்திலிருந்து நான் தேடி எடுத்ததாகவும்
இருக்கலாம். எனவே,
ஒவ்வொரு நாளும் இம்முகநூலைத் திறந்து பாருங்கள். வெளியாகியிருப்பது
வேறொரு நண்பரின் பிறந்த நாள் என்பதற்காக வாழ்த்துச் சொல்லாமல் தவிர்க்காதீர்கள். வெளியாகியிருப்பது
உங்கள் பிறந்த நாளுக்கான வாழ்த்துச் செய்தி என்றால், யார்
யார் உங்களை வாழ்த்தி இருக்கிறார்கள் என்பதப் பார்த்து மகிழ்ச்சி அடையுங்கள்; அந்த
மகிழ்ச்சியுடனேயே வாழ்த்திய அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்திடுங்கள் !
நன்றி சொல்வது
நயத்தக்க நாகரிகம் அல்லவா
?
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”வேதரெத்தினம்” வலைப்பூ.
[தி.ஆ: 2052, நளி (கார்த்திகை) 01]
{17-11-2021}
--------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக